Filed under: Abu Adhil
யு.ஏ.இ யில் 14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு
14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு யு.ஏ.இ யில் நேற்று திங்கட்கிழமை துபை சேம்பர் ஆப் காமர்ஸ் அன்டு இன்டஸ்ட்ரீஸில் நடைபெற்றது. அதில் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் முதல் பரிசை தட்டிச் சென்றார்.
முதல் 10 இடங்களைப் பெற்றவர்களின் விபரம்.
1. முஹம்மது எர்சாத் மர்பாய் – 20 அல்ஜீரியா – 2,50,000 திர்ஹம்
2. மஸ்வுத் ரித்வான் -13, வங்கதேசம் – 2,00,000 திர்ஹம்
3. மூஸாப் ஈஸா அலி – 20, பஹ்ரைன் – 1,50,000 திர்ஹம்
4. அஹமது யசூரி முஹம்மது 18, எகிப்த் – 65,000 திர்ஹம்
5. காலிது அபு பாகிர் சலிம் 19, யமன் – 60,000 திர்ஹம்
6. கலீல் இப்ராஹீம் அஹமது 20, லிபியா – 55,000 திர்ஹம்
7. மப்வானா அஸா மப்வானா, 15 – தான்சானியா – 50,000 திர்ஹம்
8. அம்மார் சாலீஹ் அல் தீன் 16, சவுதி அரேபியா – 45,000 திர்ஹம்
9. நாசர் பதிர் முஹம்மது 20, குவைத் – 40,000 திர்ஹம்
10. முஹம்மது அல் அத்ராஸ் 16, மொராக்கோ – 35,000 திர்ஹம்
10. முஹம்மது உதுமான் அப்துல்லாஹ் 18, சூடான் – 35,000 திர்ஹம்
மேலும் 80 சதவிகித மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தலா 30,000 திர்ஹம்
70 – 79 சதவிகித மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தலா 25,000 திர்ஹம்
70 சதவிகிதத்திற்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு தலா 20,000 திர்ஹம் என வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திவரும் யுஏஇ போட்டியாளர்களும் அரபுலக போட்டியாளர்களும் பின்னுக்கு தள்ளப்பட்டு மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் வெற்றியை தட்டிச் சென்றிருப்பது, இந்தப் போட்டியில் வங்கதேச போட்டியாளர்கள் தொடர்ந்து ஏதேனும் பரிசுகளை வெல்வது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சிறப்பம்சமாக சிறந்த இஸ்லாமியன் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை சூடான் நாட்டைச் சேர்ந்த முன்னால் அதிபர் ஃபீல்டு மார்ஸல் அப்துல் ரஹ்மான் சிவார் அல் தஹப் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமிய உலகத்திற்கு பயன்படுத்தும் விதமாக இவருக்கு 1 மில்லியன் திர்ஹம் பரிசளிக்கப்பட்டது.
நன்றி :புதுவலசை.இன்
செய்தி: கல்ஃப் நியுஸ், புதுவலசை.இன் இணையதளத்திற்காக அப்துல் ஹலீம்.
Filed under: Abu Adhil
துபாய்:ஒரே நாளில் 122 பெண்கள் உள்பட 125 பிலிப்பைன்ஸ் நாட்டவர் இஸ்லாத்தை தழுவினர்
துபாய்,ஆக31:பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் உமர் ஃபெனல்பாரின் உரையை கேட்ட 122 பெண்கள் உள்ளிட்ட 125 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக அங்கீகரித்துள்ளனர்.
துபாய் டூரிஸம் அண்ட் கமர்ஷியல் மார்கட்டிங் துறையின் கீழ் அல்த்வாரில் உமர் ஃபெனல்பாரின் உரைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிலிப்பைன்ஸில் இவருடைய உரையைக்கேட்டு ஒரேநாளில் 99 பேர் இஸ்லாத்தை தழுவியதுதான் சாதனையாக இருந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததில் பெரும் பங்குவகித்தது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த பெண்மணிகளாவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Filed under: Abu Adhil
Filed under: Abu Adhil
சிரித்து வாழ வேண்டும்-பிறர் சிரிக்கவும் வாழ வேண்டும்!
– (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
சிரித்து வாழ வேண்டும்-பிறர் சிரிக்கவும் வாழ வேண்டும்!
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
புனித ரமலான் மாதத்திய நோன்பு பசித்தவர் படும் பாட்டினை பாருக்கு உணர்த்தும் ஒரு நடைமுறை. பல் வேறு மதங்களிலும், அரசியல் மற்றும் சமூக கிளர்ச்சியிலும் கடைப்பிடிக்கும் உண்ணா நோன்பு வெறும் திடப்பொருளை மட்டும் ஒதுக்கும் ஒரு செயலாகும். ஆனால் தவிக்கும் வாயிக்குக் கூட பட்டிணிபோட்டு வறியவர் படும் துன்பத்தினை வள்ளலுக்கும் உணர்த்தும் அரிய ஒரு மகத்துவம் புனித ரமலான் நோன்பு ஆகும். ஈகையினை உள்ளத்தில் உதிக்கச் செய்து எப்படி பாலைவனத்தின் மணலைத் தோண்டும் போது நீர் சுரக்குகிறதோ அதே போல இல்லாதவருக்கு ஜக்காத், சதக்கா போன்ற கொடையினை அள்ளி அள்ளி வழங்கத் தூண்டும் ஒரு சிறந்த பண்பான கடமைதான் நோன்பு. ஆனால் எத்தனை வள்ளல்கள் தனது செல்வங்களை ஏழை, எளியவர்க்கு வாரி வழங்குகிறார்கள்? நமது சமுதாயத்தில் செல்வந்தர்கள் இல்லையா? ஏன் சகர் நேர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்போமேயானால் தங்க நகைகடை, ரியல் எஸ்டேட்ஸ், லாட்ஜ், துணிக்கடைகள், சூப்பர் மார்க்கட்டுகள், கோரியர் சர்வீஸ்கள், குடிதண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனம், பொது விளம்பரத்தில் தடுக்கப்பட்ட பீடி-பாக்கு நிறுவனங்கள், தங்களுக்குத் தாங்களே டாக்கடர் பட்டம் சூட்டிக்கொள்ளும் யுனானி மருத்துவ மாமணிகள், கல்வி நிறுவனம் நடத்தும் வள்ளல்கள் போன்ற செல்வந்தர்கள் பட்டியல் வரிசை நீண்டு கொண்டே போகிறது.. சகர் நேரத்தில் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் கால் வாசி விளம்பரங்கள் முக்கால்வாசி என்று சொல்லும் அளவிற்கு விளம்பரம் செய்யும் செல்வந்தர்கள் நம்மிடையே இல்லாமலில்லை. ஆனால் அவர்கள் நோன்பு நேரத்தில் தங்கள் செல்வத்தினை கணக்கிட்டு ஜக்காத், சதக்கா கொடுக்கிறார்களா என்றால் சந்தேகமே! அவர்கள் கொடுப்பதெல்லாம் நோன்பு நேரத்தில் கையேந்துபவர்களுக்கு காசு, குறைந்த விலையில் துணிமணிகள் எடுத்துக் கொடுத்து வெறும் தர்மம் செய்ததாக ஜம்பம் அடிப்பார்கள். அது தான் உண்மையிலே ஏழைகளுக்குச் செய்யும் தொண்டா?
ஓரு உண்மை சம்பவத்தினை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான்கு வருடத்திற்கு முன்பு சென்னையில் வாழும் எனது தூரத்து அட்வகேட் உறவனர் மகள் பிளஸ்2 பரீட்சையில் 1200 மார்க்குக்கு 1148 மார்க் வாங்கி பள்ளியிலே முதலாவதாகத் தேறியிருந்தார். அந்தப் பெண்ணுக்கு அதிக கட்டாப் மார்க் இருப்பதால் நிச்சயம் அரசின் ஒதுக்கீடிலே நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனால் அவள் ஒரு முஸ்லிம் இன்ஜினீரியங் கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என தீர்மானித்து அந்தக்கல்லூரிக்கும் மனு செய்தார். இண்டர்வியூக்கும் தந்தையினைக் கூட்டிச் சென்றாள். ஆனால் அங்கு கேட்கப்பட்ட கேள்வி நீங்கள் எத்தனை லட்சம் டொனேசன் தருவீர்கள்? என்பது தான். அந்தப் பெண்ணின் தந்தையே என்மகள் நல்ல மார்க்கில் தேர்வாக உள்ளாள் அவள் மற்ற கல்லூரிக்கு அரசு ஒதுக்கீடு இலவச சீட்டில் செல்வதிற்குப் பதிலாக முஸ்லிம் கல்லூரியில் படிக்க விரும்புகிறாள் ஆகவே அவளுக்கு ஃபிரீ சீட் தாருங்கள் என்று சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் பல லட்சம் டொனேசன் கேட்டதால் அதனை மறுத்துவிட்டு அரசு ஒதுக்கீடு செய்த வெங்கடேஸ்வரா இன்ஜினீரயங் கல்லூரியில் சேர்ந்து முதல் வகுப்பிலும் தேரி டி.சி.எஸ். சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளாள.. இது எதனைக் காட்டுகிறது.? ஏழை முஸ்லிம்களுக்காக மைனாரிட்டி கல்லூரி நடத்துகிறோம் என்று லட்சத்தில் பணம் அள்ளும் முதலைகளாக அந்த வள்ளல்கள் இருக்கின்றார்கள். ஆனால் விளம்பரம் மட்டும் விமரிசையாக வள்ளல் என போட்டு நோன்பின் மாண்பு-மகிமையினை பாழடிக்கிறார்கள் என்றால் மிகையாகுமா? அமெரிக்காவில் வாழும் இந்திய தமிழ் முஸ்லிம்கள் ஆண்டு தோறும் ஒரு ஏழை முஸ்லிம் கிராமத்தினை தத்தெடுத்து அவர்களுக்கு தொழில் வைத்து முன்னேற ரூ10000 வீதம் 100 குடும்பங்களுக்குக் கொடுத்து தன்னிறைவு பெற உதவுகிறார்கள். அது போன்று ஏழைக் குடும்பங்கள் முன்னேற எதாவது நிலையான திட்டங்கள் எவராலும் செய்யப்பட்டுள்ளதா? நகை வியாபாரிகள் நூறு ஏழைக்குமர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குமருக்கும் ஒரு பவுன் தாலிச் செயின் மற்றும் திருமண செலவுகளை ஏற்றுக் கொண்டு அவர்களுடைய திருமணத்தினை நடத்தித் தரக்கூடாது? மைனாரிட்டி கல்வி நிறுவனங்களில் சிறப்பான கல்வித் தகுதியுள்ள மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ்-டெப்டி கலெக்டர்-டி.எஸ்.பி பரீட்சை எழுத பயிற்சி அளிக்கக்கூடாதா? எப்படி முன்னாள எம்.எல்.ஏ சைதை துரைசாமி மட்டும் அவ்வாறு இலவச பயிற்சி கொடுத்து வருடா வருடம் 100க்கு குறையாத மாணவர்களை முதன்நிலைத் தேர்வில் வெற்றி பெறச் செய்ய முடிகிறது? ஏன் குடி தண்ணீர் சப்ளை விளம்பரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு கேன்கள் குடி தண்ணீர் தங்கள் பகுதியிலிருக்கும் பள்ளி-மதரஸாவிற்கு இலவச தண்ணீர் சப்ளை செய்யக்கூடாது? அதுபோல் கூரியர் சர்வீஸ்-டிராவல்ஸ்-ஹோட்டல்ஸ் நடத்தும் உரிமையாளர்கள் அரசு பரிட்சை எழுத வரும் மாணவர்கள் தங்கி பரீட்சை எழுத இலவசமாக வாகனம்-இடம் கொடுக்கக்கூடாது? டீ.வி. நிகழ்ச்சியில் ஒரு விளம்பரப்பிரியர் நீங்கள் அரிசி கொண்டு வாருங்கள் நாங்கள் உமி கொண்டு வருகிறோம் நாம் சமைத்துசாப்பிட ‘பைத்துல்மால்’ அமைப்பினை ஏற்படுத்தி தங்களுடைய முகங்களை பலருக்கு பளிச்சென்று வெளிச்சம் போட்டு பறையடிக்கிறார். அதுதான் இஸ்லாம் சொன்ன தான தர்மமா?
உதவும் கரஙகள் எப்படி இருக்க வேண்டும் என்பதினை; இரண்டு சம்பவங்களினை மட்டும் உங்களுக்கு உதாரணமாக எடுத்துக்காட்டலாம் என நினைக்கிறேன்:
1) கீழே உள்ள படத்தில் கனடா நாட்டு பிரதமர் மார்ட்டினுடன் தலை நிமிர்ந்து நிற்கும் சிறுவன் யார் தெரியுமா ‘யூனிசெப்’ ஜக்கிய நாடு குழைந்கைகள் படிப்பு- சுகாதாரம் பாதுகாப்பிற்கான ஒரு சபையாகும். அந்த சபையால் கவுரவ அம்பாசாடர் என்ற பட்டம் வழங்கப்பட்ட கனடா நாட்டு இந்திய வம்சா வழி பதிமூன்றே வயதான அம்மான் என்ற தந்தைக்கும், சமீம் என்ற தாய்க்கு மகனாகப் பிறந்த அருந்தவப் புதல்வன் தியாகச் செம்மல் ஹஜரத் பிலால் அவர்கள் பெயரைத் தாங்கியவன். அவன் அப்படியென்ன அருஞ்செயல் செய்தான் என நீங்கள் கேட்க உங்கள் ஆவல் தூண்டும். இந்திய நாட்டில் குஜராத்தில் புர்ஜ் நகரினை சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆனில் சொன்னது போல புரட்டிப்போட்டு மாடி வீடுகளெல்லாம் மண்ணாகி பலர் மடிந்தும் போன கதை பலர் அறிந்திருப்பீர்கள். அப்போது கனடா தலைநகர் டொரனடாவில் வசித்த அந்தச் சிறுவனுக்கு வயது நான்குதான். அந்த பூகம்பத்தினை தொலைக்காட்சியில் ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் அதிர்ச்சியிட்டு மிகவும் துயரம் அடைந்தான்.
அன்றிலிருந்து அவன், அவனது பொற்றோர் மற்றும் பாட்டனாருடன் தெருவில் இறங்கி ஆரஞ்சு பழங்கள் விற்று அதன் மூலம் கிடைத்த 332 டாலர்களை யூனிசெப் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தான். அதன்பிறகு எட்டு வயதான போது 2004 ஆம் ஆண்டு ஹெயிட்டி நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது தன் தந்தையின் ரொட்டிகளை எடுத்து தெரு தெருவாக விற்று அதில் கிடைத்த வருமானத்தினை அந்த நாட்டுக் குழந்தைகளுக்கு அனுப்பியுள்ளான். அதன்பின்பு ஆப்பிரக்கா நாட்டு குழந்தைகள் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிந்து காகித தட்டுகளை செய்து விற்று அதன் மூலம் கிடைத்த 1100 டாலர்களை அந்தக் குழந்தைகளுக்கு அனுப்பியுள்ளான். இது போன்ற உதவிகளை செய்ய ‘ஹேண்ட் பார் ஹெல்ப்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை நிறுவியும் உள்ளான். 2009ஆம் அண்டு ‘கால் நடை இயக்கம் ஒன்றை’ ஆரம்பித்து தன் பள்ளித் தோழர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன் கனடா தலைநகர்டொரண்டோவில் உள்ள பூங்கா, சூப்பர் மார்க்கட், கல்வி நிறுவனங்களுக்கு கால் நடையாக சென்று வசூலித்து அதனை உலக குழந்தைகள் கல்வி, சுகாதாரம், பசி, பட்டிணி போக்க உதவியும் உள்ளான். அவன் அளித்த உதவித் தொகை எவ்வளவு தெரியுமா சொந்தங்களே? 5மில்லியன் டாலர் தொகையாகும். தற்போது அடில்லாலானி என்ற 20 வயது வாலிபருடன் சேர்ந்து சுடோகோ.காம் என்ற விளம்பர இணைய தளத்தினை ஆரம்பித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினை ‘வோல்ட் புட் பரோகிராம்’ அதாவது உலக உணவுக்கழகத்தின் பசி போக்கும் திட்டத்திற்கு உதவி வருகிறான் என்றால் பாருங்களேன். ஒரு முஸ்லிம் சிறுவனால் செய்ய முடிந்ததினை நான் மேற்கோடிட்டுக் காட்டிய செல்வந்தர்களால் ஏன் முடியாது முஸ்லிம் ஏழை மக்களுக்கு, ஏழை குமர்களுக்கு, அனாதை சிறுவர்களுக்கு, அறிவுசால் மாணவர்களுக்கு வாழ்வில் ஓளியேற்ற?
அடுத்த ஒரு சம்பவத்தினையும் உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன் சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் வெள்ளம் ஏற்பட்டு 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு 2000 பேர் இறந்தும், 1.கோடியே எழுபது லட்சம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதினை தினந்தோறும் பத்திரிக்கை-எலக்ரானிக் மீடியாக்கலில் பார்த்து-படித்து தெரிந்திருப்போம். அந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஆசிப் சர்தாரி கட்சியும், எதிர்கட்சியான எம்.க்யூ.எம் சட்சிகள் செய்த உதவி தலா 5 மில்லியன் டாலர் மட்டுமே, ஆனால் ஹாலிவுட் நடிகை ஆஜ்லினா ஜோஸி செய்த உதவி 8 மில்லியன் டாலர் ஆகும். சொந்த நாட்டினர் தனிப்பட்டு செய்த உதவியினை விட ஒரு தனிப்பட்ட அயல் நாட்டுப் பெண் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்தாளென்றால் ஏன் கோடி கோடியாக பணம் வைத்திருக்கும் செல்வந்தர்கள் நோன்பு நேரத்தில் கூட இது போன்ற உதவியினைச் செய்யக்கூடாதா என்பதே என் ஆதங்கம். ஆகவே தான் நாம் மட்டும் மகிழ்வுடன் இருக்கக்கூடாது மற்றவர்களையும் மகிழ்விக்க வேண்டும் என்பதினை வலியுறுத்தி இந்தக்கட்டுரை எழுதினேன்.
Filed under: Abu Adhil
அப்துல் நாசர் மதானி – அதிகாரத்தின் இரை
இந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ”ஹே ராம்” என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளை கொன்றொழித்த பயங்கரவாதத்தை செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!
பன்மைத் தன்மை உடைய இந்தியத் திருநாட்டில், சமயச்சார்பின்மை என்னும் தத்துவம் தளைக்க தன் இறுதி மூச்சு உள்ள வரைப் போராடிய ஜவஹர்லால் நேருவின், அரசியல் வாரிசான இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!
இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்த பயங்கரவாதத்திலும் முஸ்லிம்களுக்கு சம்மந்தமில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!
இந்துக்களின், கிறிஸ்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்ன பிற சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களையோ, வரலாற்றுச் சின்னங்களையோ, இடித்துத் தகர்த்த பயங்கரவாதத்தை, இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் செய்ததில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!
சுதந்திர இந்தியாவில் நடை பெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்கள், இனப்படுகொலைகள் எல்லாவற்றிலும் உயிரை இழந்து, உடைமை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அல்லல்பட்டபோதும், உணர்வை இழக்காமல் உரிமை கேட்டதனால்., முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!
இரத்தமும் சதையுமாக இந்திய மண்ணை நேசித்த முஸ்லிம்களின், இரத்தம் குடித்து தன் சதை வளர்க்கும் இழி செயலை, இந்தியாவின் அதிகார வர்க்கமும், ஊடகங்களும் வெளிப்படையாக செய்து வருகின்றன. முஸ்லிம்களை குதறுவதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் இந்துத்துவ சக்திகளுக்கு, ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களும் அரணாய் நிற்கின்றன. நாடு முழுவதும் தொடரும் இந்த அக்கிரமத்திற்கு இரையாகிப் போன இரத்த சாட்சியாக இப்போது பெங்களூர் சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கிறார் அப்துல் நாசர் மதானி.
நாம் வாழும் காலத்தில், நம் கண் முன்னாலேயே ஒரு மிகப்பெரும் அக்கிரமம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. சட்டம் அதன் கயமையைச் செய்கிறது. நீதிக்கு கல்லறை கட்டப்படுகிறது, எளிய மனிதர்களைச் சூறையாடும் அரச பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இருபது சதவீதத்துக்கும் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எழுச்சிக்காகவும், மறு மலர்ச்சிக்காகவும் போராடிய ஒற்றைக் காரணத்திற்காக ஒரு அப்பாவி மனிதரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன இந்தியாவின் அரசுகள்.
சட்டம், நீதி, ஜனநாயகம், இறையாண்மை என்றெல்லாம் வாய்கிழியப் பேசப்படுகின்ற ஒரு மண்ணில், அப்பட்டமாக மீறப் படுகின்றன மனித உரிமைகள். மாந்த நேயத்திற்கான அத்தனை இலக்கணங்களும் குழி தோண்டிப் புதைக்கப் படுகின்றன. ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் ஈரமற்றப் பாறையாய் மாறி வருகின்றன. இதற்குப் பிறகும் சட்டம் பற்றியும், நீதி பற்றியும், ஜனநாயகத்தின் மாண்பைப் பற்றியும் பிதற்றுபவர்களை காணும்போது கடும் எரிச்சலும், கோபமும் தான் வருகிறது.
1992 டிசம்பர் 6 – இல் பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள். 450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னத்தை, முஸ்லிம்களின் புனிதமிக்க வழிபாட்டுத் தலத்தை அநீதியான முறையில் தகர்த்து எறிந்தார்கள். எப்படியாவது தங்களின் பள்ளிவாசல் காப்பாற்றப்பட்டு விடும் என்று கடைசி வரை நம்பியிருந்த முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டார்கள். இந்த நாட்டின் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்தையும், ராணுவத்தையும், போலீசையும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளையும் நம்பி, நம்பி ஏமாந்து போனது முஸ்லிம் சமூகம்.
அவநம்பிக்கை மிகுந்த நிலையில், தமது இருப்பு குறித்த பாதுகாப்பின்மையும், எதிர்காலம் குறித்த அச்சமும் முஸ்லிம்களை வாட்டத் தொடங்கியது. தமக்கான பாதுகாப்பை தாமே உறுதி செய்து கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து உரிமைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அப்படி நாடு முழுவதும், ஜனநாயகப் பாதையில் நின்று உரிமை கேட்பதற்காக வெடித்து முளைத்த விதைகளில் ஒருவர்தான் அப்துல் நாசர் மதானி.
அடக்குமுறைகளுக்கு எதிரான கர்ஜனை, எவருக்கும் எதற்கும் அடங்காத கம்பீரம், நெருப்பை உமிழும் உரை வீச்சு, சமுதாய மறுமலர்ச்சியே உயிர் மூச்சு என்று தனிப்பெரும் அடையாளத்துடன் கேரள அரசியல் வானில் வலம் வந்தவர் அவர். அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அவர். கொள்கைச் சமரசமற்ற அவரது அரசியல் நிலைப்பாடுகளும், இந்துத்துவ எதிர்ப்பில் அவர் காட்டிய உறுதிப்பாடும்தான் அவரை இன்று இந்த நிலைக்குத் தள்ளி இருக்கிறது.
கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டையைச் சார்ந்த அப்துஸ் சமத் மாஸ்டர், அஸ்மா பீவி தம்பதியருக்கு 1965 ஜனவரி 18 – இல், மூத்த மகனாக பிறந்தார் மதானி. பள்ளித் தலைமை ஆசிரியரான மதானியின் தந்தை, அவரை மார்க்க அறிவும் நல்லொழுக்கமும் உடைய பிள்ளையாக வளர்த்து எடுத்தார். பள்ளிக் கல்விக்குப் பின் கொல்லத்தில் உள்ள ‘மஅதனுல் உலூம்’ அரபிக் கல்லூரியில் இணைந்து இஸ்லாமிய மார்க்க அறிஞராக பரிணாமம் பெற்றார் மதானி. அந்தக் கல்லூரியில் வழங்கப்பட்ட ‘மஅதனி’ என்ற பட்டமே பின்னாளில் அவரது அடையாளத்துக்குரிய பெயராக மாறிப் போனது.
இளம் மார்க்கப் பிரச்சாரகராக தன் பயணத்தைத் தொடங்கிய மதானி, அனல் பறக்கும் உரை வீச்சுக்களால் அனைவரையும் ஈர்த்தார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. கேரளாவின் சொற்பொழிவு மேடைகளில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் பேச்சாளர் ஆனார் மதானி. 1990 களில் இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மதானியைப் பாதித்தது. மண்டல் கமிசன் அறிக்கைக்கு நேர்ந்த கதியும், அத்வானியின் தலைமையில் அரங்கேறிய இந்துத்துவ எழுச்சியும், முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஆர். எஸ்.எஸ் கும்பலின் தீவிரவாத நடவடிக்கையும் கண்டு கொதித்து எழுந்தார் மதானி.
ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்க ஐ.எஸ்.எஸ். [இஸ்லாமிக் சேவா சங்] என்ற அமைப்பை, 1990 ஆம் ஆண்டு தொடங்கினார். 1992 டிசம்பர் 6 – இல் பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது மதானியின் ஐ.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து சூறாவளியாய் சுழன்றார் மதானி. பாபர் மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகளையும், அதற்குத் துணை நின்ற காங்கிரசையும் நெருப்பு உரைகளால் காய்ச்சி எடுத்தார்.
மதானியின் உரை வீச்சில் பொசுங்கிப்போன இந்துத்துவ சக்திகள், அவரை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் தீர்த்துக்கட்டும் சதியில் இறங்கினர். ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை அரவணைக்கும் வகையில் அன்வார்சேரியில் மதானி உருவாக்கிய ஜாமியா அன்வார் என்னும் கலாசாலையில் இருந்து இரவு அவர் வெளியே வரும்போது, ஆர். எஸ்.எஸ் கும்பல் அவர் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. 1992 இல் நடைபெற்ற அந்த தாக்குதலில் தனது ஒற்றைக் காலை இழந்து ஊனமுற்ற மதானி, அதன் பின்னர் சக்கர நாற்காலியில் தவழ்ந்து கொண்டே சரித்திரம் படைத்தார்.
இந்தியச் சூழலில் முஸ்லிம்கள் தனித்து நின்று போராடுவதன் மூலம் இலக்கை அடைய முடியாது என்ற உண்மையை உணrந்து தெளிந்த மதானி, 1993 இல் மக்கள் ஜனநாயகக் கட்சி [PDP] என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தாழ்த்தப்பட்ட தலித் மக்களும், ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களும் ஓரணியில் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக எழுச்சி பெறும் வியூகத்தை வகுத்தார். தலித் சமூகத்தை சார்ந்த ஒருவரை கேரளாவின் முதலமைச்சராக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்தார். குருவாயூர், ஒற்றப்பாலம், திரூரங்காடி இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு கேரளாவின் mainstream அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தார்.
முஸ்லிம்களோடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் அணி திரட்டும் மதானியின் தொலை நோக்குப் பார்வையைக் கண்டு கேரளாவின் அரசியல் கட்சிகளுக்கு நடுக்கம் வந்தது. அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த மதானி 1998 மார்ச் 31 – அன்றுகோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
மதானி கோவை சிறையில் இருந்தபோது அவர் அனுபவித்த ரணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. விசாரணைக் கைதியாக சிறையில் பூட்டப்பட்டு கசக்கி எறியப்பட்டார். 105 கிலோ எடை கொண்ட கனத்த தேகத்துடன், 33 வயதே நிரம்பிய துடிப்பு மிக்க இளைஞராக சிறைக்குச் சென்ற அவர் அதிகாரத்தின் கொடும் பசிக்கு இரையானார். நாளாக நாளாக அவரது உடல் எடை குறைந்து இறுதியில் 45 கிலோ ஆனது. உலகத்தில் உள்ள அத்தனை வியாதிகளும் குடியிருக்கும் நோய்களின் கூடாரமாக மாறி அவரது உடல் நலியுற்றது. ஒரு விசாரணைக் கைதிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகள் கூட மதானிக்கு மறுக்கப்பட்டன.
1200 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஒருவர்கூட அவருக்கு எதிராக சாட்சி சொல்லாத நிலையிலும் அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. அவரது பாட்டி இறந்தபோது பரோலில் சென்று பட்டியின் உடலை பார்த்து வருவதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. நீண்ட நாள் ஆகிவிட்டதால் பழுதடைந்த தனது செயற்கை காலை புதுப்பிக்கவும், சிகிச்சைக்காகவும் வேண்டி மதானி அனுப்பிய மனுக்கள் குப்பைக் கூடையில் எறியப்பட்டன. அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மதானி விசயத்தில் மிக மூர்கத்தனமாக நடந்து கொண்டார்.
மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி த.மு.மு.க போன்ற தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தலை எதிர்கொண்ட விதமும், மதானி உள்ளிட்ட அப்பாவிகளின் விடுதலைக்கு வழிவகுத்தது.
கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற உடன் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த கோரிக்கைகள் கனிவோடு பரிசீலிக்கப்பட்டன. மதானிக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்தது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒன்பதரை ஆண்டுகால சிறை வாழ்கையை முடித்துக் கொண்டு 2007 ஆகஸ்ட் 1 – இல் விடுதலையாகி வெளியே வந்தார் மதானி. பரபரப்பான அவரது அரசியல் பயணத்தை முடக்கி, கம்பீரமான அவரது தோற்றத்தை ஒடுக்கி, இயங்க முடியாத நிலைக்கு அவரைத் தள்ளிய பிறகு குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது நீதிமன்றம்.
விடுதலைக்குப் பின் மதானியைத் தவிர வேறு யாராக இருந்தாலும், நலிந்த தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பொது வாழ்வுக்கு ஓய்வு கொடுத்திருப்பார்கள். வெகு மக்களிடம் தன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தை அரசியல் லாபத்திற்கான அறுவடையாகக் கருதி காங்கிரசோடு பேரம் நடத்தி இருப்பார்கள். முஸ்லிம்களுக்கான பிரச்சனைகளைப் பேசியதனால் தானே வம்பு ; பேசாமல் ‘பதவி அரசியல்’ நடத்துவோம் என்று கொள்கை அரசியலை கை கழுவி இருப்பார்கள்.
ஆனால் அப்படி எந்த முடிவுக்கும் வரவில்லை மதானி. முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் எழுச்சிக்கான தனது பயணத்தை முன்பை விடவும் வேகமாகக் கூர் தீட்டினார். பேச்சில் இருந்த வீச்சைக் குறைத்து அதை செயலில் காட்டினார். தன் உடல் நிலையைப் புறம் தள்ளி விட்டு கேரளா முழுவதும் வலம் வந்தார். ஒன்பதரை ஆண்டுகாலம் முடங்கிக் கிடந்த தனது தொண்டர்களை மீண்டும் தட்டி எழுப்பினார்.
மதானியின் கதை முடிந்து விட்டது என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தியவர்களுக்கு, அவரது இத்தகைய மீள் எழுச்சி எரிச்சலைத் தந்தது. ஏற்கனவே கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அவரைச் சிக்கவைத்து குளிர் காய்ந்தவர்கள் மீண்டும் அதே பாணியில் அவரைக் குதறத் தொடக்கி உள்ளனர்.
****
2008 ஆம் ஆண்டு ஜூலை 25 – ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி 31- ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கர்நாடக மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி சேர்க்கப்பட்டுள்ள விதத்தையும், வழக்கின் போக்கையும் பார்க்கின்ற போது , மதானியை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட மிகப்பெரிய சதி வலைகள் பின்னப்படுவதை அறிய முடிகின்றது.
கேரளாவைச் சார்ந்த ‘தடியன்டவிட’ நசீர் என்பவர் 2009 ஆம் ஆண்டு, பங்களாதேசத்தில் வைத்து அங்குள்ள ரைபிள் படையினரால் கைது செய்யப் பட்டார். லஷ்கரே தொய்பா தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட நசீர், கொடுத்ததாக சொல்லப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இப்போது மதானி வேட்டையாடப்படுகிறார்.
2005 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கலமச்சேரியில், தமிழக அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில், ‘தடியண்டவிட’ நசீரிடம் கேரள போலீசார் விசாரித்ததாகவும், விசாரணையில், ”தமிழக அரசுப் பேருந்தை எரிக்கச் சொன்னது மதானியின் மனைவி சூஃபியாதான் ” என்று நசீர் சொன்னதாகவும் கூறி 2009 டிசம்பரில் சூஃபியா கைது செய்யப்பட்டு எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். அது தனிக் கதை.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில், பெங்களூர் மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் மதானி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, மதானியின் சார்பில் அவரது வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு எதிராக கர்நாடக காவல் துறையினர் பதில் மனுத் தாக்கல் செய்தனர்.
57 பக்கங்கள் கொண்ட அந்த பதில் மனுவில் காவல்துறை கையாண்டிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷம் தோய்ந்தவையாக இருக்கின்றன. மதானிக்கு எதிரான சதியின் முழுப் பரிணாமமும், முஸ்லிம்கள் மீதான அதிகார வர்க்கத்தின் வெறுப்புணர்வும் அதில் அப்பட்டமாகத் தெரிகிறது.
” பெங்களூரில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன் மதானியும், கைது செய்யப்பட்ட நசீர் உள்பட 22 குற்றவாளிகளும், கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள குடகு நகரில் ஒன்று கூடி, அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வைத்து சதித்திட்டம் வகுத்ததாகவும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம் என்றும், இதற்காக இந்தியாவில் வன்முறையைத் தூண்டி விட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையூறு செய்வதே அவர்களின் நோக்கம் என்றும் போலீஸ் கூறியுள்ளது.
மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வெடி பொருட்களை ரகசியமாக கேரளத்துக்கு கடத்தி, அங்கு வெடிகுண்டைத் தயாரித்துள்ளனர் என்றும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட குண்டுகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிக்க வைத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளார்” என்றும் நீளுகிறது போலீஸ் அறிக்கை.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து மதானி குற்றமற்றவராக விடுவிக்கப் பட்டாலும், மதானியை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே போலீசின் இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.
சிறையிலிருந்து வெளி வந்த பின்னர் மதானியின் முழு செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் மத்திய மாநில புலனாய்வுக் குழுவினரால் கண்காணிக்கப்படுகிறது. அவரது சுற்றுப்பயணம் குறித்த முழு தகவலும் கேரள காவல் துறையிடம் இருக்கிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் ஒருவர், எப்படி குண்டு வெடிப்புச் சதியில் ஈடுபட முடியும்? குடகு நகரில் ரகசியமாகக் கூடி திட்டம் தீட்ட முடியும்? என்றெல்லாம் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் ஜனநாயக நாட்டில் விடை இல்லை.
நசீர் கைது செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ”’மதானிக்கும் குண்டுவெடிப்பில் பங்குண்டு” என்று அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறி மதானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் காவல் துறையின் இந்த மோசடித்தனத்தை, கொச்சி உயர் நீதி மன்றத்தில் இருந்து வெளியே வரும் போது பத்திரிகையாளர்களை சந்தித்த நசீர் பகிரங்கமாக அம்பலப் படுத்தினார். ‘‘பெங்களூர் குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு உண்டு என்று தான் கூறவே இல்லை” என்று உறுதியாக மறுத்தார். ஆனாலும் காவல் துறையும், நீதி மன்றமும் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மதானியை சூறையாட வேண்டும் என்று அதிகார வர்க்கம் முடிவு செய்து விட்ட பிறகு எந்த உண்மையைத் தான் அவர்களால் ஏற்க முடியும்?
இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க சதி நடக்கிறது என்று கர்நாடக பாஜக அரசின் காவல்துறை சொன்னதைப் போலவே, கேரளாவின் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தனும் வாந்தி எடுத்தார். முஸ்லிம்களை ஒடுக்குவதில் இந்துத்துவத்திற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே இருக்கும் கள்ள உறவு இதன் மூலம் அம்பலத்திற்கு வருகிறது.
குற்றமே செய்யாமல், விசாரணைக் கைதியாக கோவை சிறையில் மதானி இழந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு, பதில் சொல்ல வக்கற்றவர்கள், தற்போது மதானி விசயத்தில் ‘சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், அவர் குற்றவாளியா இல்லையா என்பதை சட்டம் முடிவு செய்யட்டும்’ என்றும் கூறி தப்பிக்க முயலுகின்றனர்.
மதானி கைது செய்யப்பட்டுள்ள ‘அன்லாஃபுல் ஆக்டிவிட்டீஸ் பிரிவென்சன் நடைமுறைச் சட்டம் – 2008 ‘ என்ற சட்டம் எந்த வகையிலும் நீதி வழங்காது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதே போன்ற கறுப்புச் சட்டங்களால் ஏற்கனவே முஸ்லிம்கள் பட்ட காயங்களும், அதனால் ஏற்பட்ட ரணங்களும் இன்னும் ஆறாத வடுவாய் இருக்கிறது. இந்தக் கொடுஞ்சட்டத்தின் படி, சப் இன்ஸ்பெக்டர் ரேன்கிலுள்ள எந்த ஒரு அதிகாரியும், நாட்டில் யாரையும் சந்தேகத்தின் பேரில் குற்றவாளியாக்க முடியும். அதன் பின்னர் 150 நாட்கள் வரை ஜாமீனில்லாமல் சிறையில் அடைக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தால் நீதி மன்றமும் எதுவும் செய்ய இயலாது. ஏனெனில் நீதிமன்றத்தின் எந்த ஒரு அனுமதியும் இன்றி 150 நாட்கள் வரை சிறையில் அடைக்க காவல்துறைக்கு சட்ட ரீதியான அதிகாரமுண்டு.
வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி, சாதாரண நிலையில் ஒருவரை கைது செய்தால், அவரை 24 மணி நேரத்துக்குள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். நீதி மன்றம் அவரை 14 நாட்கள் ரிமாண்ட் செய்யலாம். தொடர்ந்து பொறுப்பில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் 15 ஆம் நாள் மீண்டும் நீதி மன்றத்தை அணுக வேண்டும்.
குற்றவாளி என்று நிறுவப்படும் வரை, ஒரு குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டே சட்டத்தில் இவ்வாறெல்லாம் வழி வகை செய்யப் பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள இத்தகைய உரிமைகளை காலி செய்து அநீதி இழைக்கவே, அரசு அதிகாரம் புதிய கறுப்புச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. அப்படி என்றால் சட்டம் யாருடைய வழியில் செல்கிறது?
வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து, குற்றம் சற்றப்பட்டவர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்டால், சட்டம் போனது எந்த வழியில் என்று மானமுள்ள எவராவது விடையளிப்பார்களா?
அச்சுதானந்தனும், பிரணாய் விஜயனும், ரமேஷ் சென்னிதாலாவும், குஞ்சாலிக் குட்டியும் கூறுகின்ற, சட்டத்தின் யோக்கியதை இவ்வளவுதானே.. இவர்களுக்கெல்லாம் கொஞ்சமேனும் மானமும், சூடு உணர்ச்சியும் இருந்தால் ”சட்டம் சட்டத்தின் பாதையில் செல்லட்டும்” என்று கூச்சமின்றி கூறுவார்களா?
மதானி விசயத்தில் யாரைக் கேட்டாலும் ‘சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்’ என்று கூறி சட்டத்தைக் கை காட்டி விட்டு பதுங்கி விடுகின்றனர். இந்தச் சட்டம் என்றைக்குத்தான் முஸ்லிம்களுக்கு நீதியை வழங்கி இருக்கிறது? முஸ்லிம்கள் என்றாலே சட்டம் ஒரு வழியிலும், நீதி வேறு வழியிலும் அல்லவா செல்கிறது… இங்கே சங்கராச்சாரிக்கும், அப்துல் நாசர் மதானிக்கும் ஒரே சட்டம்தான்… ஆனால் நீதி?
சங்கரமடப் பூசாரி சங்கர ராமனை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் சங்கராச்சாரிக்கு, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே, சதிக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிணை கொடுக்கிறது நீதி மன்றம். விடுமுறை நாளில் கூட சங்கராசாரிக்காக திறந்தன நீதிமன்றத்தின் கதவுகள். சுவாமிகளை சிறையில் அடைக்காமல் நீதிபதிகளின் குடியிருப்பிலேயே காவலில் வைக்கலாமே என்று யோசனை சொன்னார் ஒரு நீதிபதி. சிறையில் மலம் கழிக்க வாழை இலை கொடுக்கும் அளவுக்கு சங்கராசாரிக்காக வளைந்து கொடுக்கிறது சட்டம். ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டது நீதி… ஆனால் குற்றமற்ற மதானிக்கு?
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை; அல் உம்மாவுக்குத் தடை.. ஆனால் குண்டுவெடிப்புக்கு காரணமாக அமைந்த, 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரத்தை, முன்னின்று நிகழ்த்திய இந்துத்துவக் குண்டர்களுக்கும், முஸ்லிம்களை சுட்டுத்தள்ளிய காவல் துறையினருக்கும் தடையுமில்லை, தண்டனையுமில்லை!
பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டிக்குத் தடை.. பழனி பாபாவைக் கொன்றவர்களுக்கோ விடுதலை!
இஸ்லாமிய மாணவர் அமைப்பான ‘சிமி’ க்குத் தடை.. ஆனால் சிமியின் பெயரால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய ஆர் எஸ் எஸ்ஸுக்கு சகல சுதந்திரம்!
மாலேகான், புனே, அஜ்மீர், ஹைதராபாத், கோவா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி ஆகிய இந்துத்துவ தீவிரவாதஅமைப்புகளையும், அவற்றை பல்வேறு பெயர்களில் இயக்கிக் கொண்டிருக்கும் மூல அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸையும் தடை செய்ய அரசுக்குத் துணிவில்லை.
குண்டுவெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு இருப்பதற்கான அனைத்து வகையான ஆதாரங்களும், வீடியோ காட்சிகளும் கிடைத்த பிறகும், ஹெட்லைன்ஸ் டுடே , தெஹல்கா போன்ற பெரிய ஊடகங்கள் அதை அம்பலப் படுத்திய பிறகும், ஆர் எஸ் எஸ் தலைமையகத்தை சோதனை செய்யவோ, ஆர் எஸ் எஸ் தலைவர்களை விசாரணைக்கு அழைக்கவோ துப்பில்லாத தொடை நடுங்கி அரசுகள், மதானியைக் குதறுவதில் முனைப்புக் காட்டுகின்றன.
நந்திகத்தில் உள்ள ஆர் எஸ் எஸ் ஊழியர் வீட்டில் குண்டு வெடிப்பு; கான்பூரில் பஜ்ரங்தள் நிர்வாகி வீட்டில் குண்டு வெடிப்பு; தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, என… ஆர் எஸ் எஸ் காரர்கள், குண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வெடித்து சிதறிய குண்டுகள் ஏராளம், தாராளம்… இப்படி, பட்டவர்த்தனமாக ஆர் எஸ் எஸ்ஸின் பயங்கரவாதம் அம்பலப்பட்ட பிறகும், மதானி வெடிகுண்டு தயாரித்து சப்ளை செய்தார் என்று கதை விடுகிறது காவல்துறை.
2006 – லிருந்து நடைபெற்றுவரும் ஏழு மிகப்பெரிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர் எஸ் எஸ்ஸின் கள்ளக் குழந்தையான அபினவ் பாரத்துடன், உறவு வைத்துள்ள பல ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரைப் பற்றிய விபரங்கள், புலன் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், அவர்களில் எவரும் விசாரணைக்கு அழைக்கப் படுவதில்லை. ‘தடியன்டவிட’ நசீரை தேடிப்பிடித்து, நோண்டி நொங்கெடுத்தவர்களுக்கு, இந்த இந்துத்துவ அதிகாரிகளெல்லாம் கண்ணில் தெரிவதில்லை.
பெங்களூர் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான வழக்கில், மதானியை சிக்க வைத்து சிறை பிடித்துள்ளவர்கள், குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்று நர வேட்டையாடிய நரேந்திர மோடியை, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர்.
போபாலில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கப் பயங்கரவாதி ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி தப்பி ஓடச் செய்து விட்டு, செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழிபோடுகின்றனர். மதானியை விரைவாக ஒப்படைக்காத கேரள அரசின் மீது, கர்நாடக காவல்துறைக்கு வந்த கோபம், ஆண்டர்சனை ஒப்படைக்காத அமெரிக்கா மீது வருவதில்லை.
பாபர் மஸ்ஜித் இடிப்பில் மிக முக்கிய குற்றவாளிகளாக லிபரான் கமிஷனால் அடையாளப்படுத்தப்பட்ட அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்ற 68 குற்றவாளிகளில் எவர் மீதும் நடவடிக்கை இல்லை. 8 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து, 17 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு , 1000 பக்கங்களில் சமர்பிக்கப் பட்ட லிபரான் அறிக்கை, இப்போது எந்தக் குப்பைத் தொட்டியில் கிடக்கிறதோ தெரியவில்லை.
பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின், மும்பையில் நடைபெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி என, நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனால் அறிவிக்கப்பட்ட, மும்பை பயங்கரவாதி பால்தாக்கரே மீது இதுவரை எந்தச் சட்டமும் பாயவில்லை.
சந்தேகத்தின் அடிப்படையிலும், புனையப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களை வேட்டையாடும் காவல் துறைக்கு, அரசால் நியமிக்கப் பட்ட விசாரணை ஆணையத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களை கைது செய்ய துணிவில்லை.
பன்முகத் தன்மை உடைய இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்திற்கும், மதச் சார்பின்மைக்கும் எதிராக, மும்பையில் வட இந்தியர்களை, குறிப்பாக பீகார் மாநில எளிய மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது நவ நிர்மான் சேனா. ‘என்னை கைது செய்தால் மும்பையே பற்றி எரியும்’ என்று பகிரங்கமாக கொக்கரிக்கும் ராஜ் தாக்கரேக்களெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாகக் கருதப்படுவதில்லை.
48 கிருமினல் வழக்குகளில் தொடர்புடைய்ய ஆகப் பெரிய குற்றவாளி ஸ்ரீ ராம்சேனா பிரமோத் முத்தலிக் மீது தடாவும் இல்லை, பொடாவும் இல்லை.பெரும் தொகையை பேரம் பேசி கலவரம் செய்யும் புது வகை பயங்கரவாதியான முத்தலிக் மீது இந்தியாவின் பாதுகாப்புச் சட்டங்கள் பாய்வதில்லை.
ஸ்ரீராம் சேனாவைத் தொடங்குவதற்கு முன் முதாலிக் பஜ்ரங்தளத்தில் இருக்கும்போதே பல்வேறு வழக்குகளில் சிக்கிய பின்னணி கொண்டவன்.அப்படி இருந்தும் அவர்களால் எந்தத் தடையும் இன்றி அமைப்பு நிறுவ முடிகிறது; சுதந்திரமாக இயங்க முடிகிறது. பெங்களூர் குண்டுவெடிப்பில் ஸ்ரீராம் சேனாவின் கூலிப் படைக்குத் தொடர்பு உண்டு என்று ஊடகங்கள் உண்மையை உரைத்த பிறகும், அந்தக் கோணத்தில் விசாரணையை முடுக்கி விடாமல், கேரளாவுக்குச் சென்று மதானியைக் கொத்தி வந்துள்ளது கர்நாடக பாஜக அரசு…
***
மதானியின் விசயத்தில் நடப்பவை அனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பது நன்கு தெரிந்த பிறகும், அவர் குற்றம் புரியாத அப்பாவி என்பது புரிந்த பிறகும், கேரளாவின் அரசியல் கட்சிகள் அவரை வெறுப்பது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. மதானியின் கைது விவகாரத்தில் கேரளாவில் பாஜகவும், காங்கிரசும், கம்யுனிஸ்ட்டும், முஸ்லிம் லீக்கும் ஓரணியில் நின்று முழங்குகின்றன. மதானி ஒழிக்கப்பட்டால் தான் தாங்கள் நிம்மதியாக அரசியல் நடத்த முடியும் என்று எல்லா கட்சிகளும் எண்ணுகின்றன.
மதானியை உலவ விட்டால் அவர் முஸ்லிம்களை அணி திரட்டுவார்; கேள்வி கேட்கும் படி உசுப்பி விடுவார்; அடிமை அரசியலுக்கு சாவு மணி அடித்து விடுவார் என்று, மதானியின் வலிமை குறித்த பயம் கேரள அரசியல் கட்சிகளை பிடித்தாட்டுகிறது. அதிகார ருசி கண்ட முஸ்லிம் லீக், பதவியை இழக்கவோ அல்லது வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வரவோ சிறிதும் அனுமதிக்காது. பதவி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற வெறி முற்றிய பிறகு எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்பட மனம் வராது.
பாபர் மஸ்ஜித் இடிப்பில் இந்துத்துவ சக்திகளுக்கு பக்கத் துணையாக நின்ற, காங்கிரஸ் கட்சியின் நயவஞ்சகத்தனத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று, முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் கர்ஜித்தபோது, முஸ்லிம் லீக்கின் பதவி வெறி பிடித்த கேரள தலைவர்கள்தான் அதற்கு முட்டுக் கட்டையாக நின்றனர். மனம் வெறுத்துப் போன சுலைமான் சேட், கொள்கை காக்கும் போராளியாக முஸ்லிம் லீக்கில் இருந்து வெளியேறி தேசிய லீக்கைத் தொடங்கும் நிலை வந்தது.
மதானி ஒழிந்தால் பாஜக வை விட அதிகமாக மகிழ்ச்சி அடையும் கட்சியாக முஸ்லிம் லீக் திகழ்கிறது. மதானியின் மீதான அடக்குமுறை அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே, கேரளாவில் பிற முஸ்லிம் அமைப்புகளான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீதும், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மீதும் அரச மற்றும் ஊடக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.
நியாயமான வழியில் நின்று, சமரசமற்ற முறையில், உயிரோட்டமான அரசியலை முன்னெடுக்க முனையும் முஸ்லிம் அமைப்புகளை முடக்கிப் போடுவதில் அதிகார வர்க்கம் குறியாய் இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் எழுச்சியை ஊடகங்கள் விரும்புவதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை.
முஸ்லிம்களின் பிரச்சனைகளை முன்வைத்து ஜனநாயக வழியில் அரசியல் நடத்துகிறவர்களை அடிப்படைவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், மதவெறியர்களாகவும் சித்தரிக்கின்ற போக்கு, நாடு விடுதலை பெற்ற நாள் முதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .
இநதிய முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் இயக்கமான முஸ்லிம் லீக், பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானின் கட்சி என்றாகிவிட்ட நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில், இநதிய முஸ்லிம்கள் தமது தனித்த அடையாளத்தோடு மீண்டும் அரசியல் நடத்தப் புறப்பட்டதை, அன்றைய ஆளும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
இநதிய முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்க காயிதே மில்லத் துணிந்த போது, அவரை முடக்கிப் போடுவதற்கான எல்லா ஆயுதங்களையும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்தது.
முதலில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றொரு அமைப்பு உருவாகி விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தியது; முஸ்லிம் லீக்கின் முதுபெரும் தலைவர்களின் வாயாலேயே ”முஸ்லிம் லீக் இனி நமக்கு வேண்டாம்” என்று சொல்ல வைத்தது; முஸ்லிம் லீக்கை விட்டு வெளியேறி எங்களோடு இணைந்தால், உயர் பதவிகளைத் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது; காயிதே மில்லத் மசிய மாட்டார் என்று தெரிந்ததும், அபுல் கலாம் ஆசாத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களை வளைக்கப் பார்த்தது; காங்கிரசின் இத்தகைய எல்லா தந்திரங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு, இந்திய முஸ்லிம்களுக்குத் துணிச்சலாக தலைமை ஏற்றார் காயிதே மில்லத்.
அதன் பிறகு அவரை கண்காணிக்கத் தொடங்கியது இந்திய அரசு. தேச விரோத செயலில் அவரை சிக்க வைக்க ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தது அரசு. காயிதே மில்லத் வெளிநாடு சென்ற போது, அவரது நடவடிக்கைகளை உளவு பார்க்க காங்கிரஸ் அரசு காமராஜரை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.
ஆனால், இன்றைக்கு முஸ்லிம் லீக்கையோ அல்லது முஸ்லிம் லீக் தலைவர்களையோ, ஆளும் வர்க்கம் அப்படிப் பார்ப்பது இல்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி இன்றைய முஸ்லிம் லீக், காயிதே மில்லத்தைப் போல் பேசுவதில்லை. வகுப்பு வாதத்துக்கு எதிராக வீச்சோடு களமாடுவதில்லை.
அவர் தவறாக நினைத்து விடுவாரோ, இவர் தவறாக நினைத்து விடுவாரோ…அல்லது கூட்டணித் தலைமை கோபித்துக் கொள்ளுமோ என்று பல கணக்குப் போட்டு மென்மையான முறையில் அரசிய நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே பதவியை தக்க வைத்துக்கொள்கிற சுயநல அரசியல். ஆகையினால் இன்றைய முஸ்லிம் லீக்கை, ஆளும் வர்க்கமோ அல்லது ஊடகங்களோ கண்காணிப்பதுமில்லை; பிரச்சனைக்கு உரியவர்களாக கருதுவதுமில்லை.
அன்றைக்கு காயிதே மில்லத்தைப் போல், இன்றைக்கு கொள்கை சமரசமற்ற முறையில் யார் யாரெல்லாம் அரசியலை முன்னெடுக்கின்றர்களோ; போர்குணத்தோடு அமைப்பு நடத்துகிறார்களோ அவர்களின் மீதே, ஆளும் வர்க்கத்தின் பார்வையும் , ஊடகங்களின் பார்வையும் ஒரு சேரக் குவிகிறது. காயிதே மில்லத்தை தேச துரோகி என்றார்கள்; கண்காணித்தார்கள்; அவரது சகாக்களை அவரிடமிருந்து பிரித்து, அவரை பலவீனப் படுத்த முயன்றார்கள்; மிதமான அணுகுமுறை உள்ள மாற்றுத் தலைமையை முன்னிறுத்தினார்கள்…. இன்றைக்கும் அதே வழிமுறையை, அதே நடைமுறையை ஆளும் வர்க்கம் பின் பற்றி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
அன்றைக்கு அரசோடு கூட்டுச் சேர்ந்து, காயிதே மில்லத்தை விமர்சித்த, சுயநலம் கொண்ட முஸ்லிம்களின் இடத்தை, இன்றைக்கு முஸ்லிம் லீக் பிடித்துக் கொண்டிருப்பது தான் காலத்தின் கோலம்.
மதானியையும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவையும், ஜமாத்தே இஸ்லாமியையும் கேரளாவில் முடக்கிப் போடுவதற்கு, ஆளும் தரப்பு கையாளுகின்ற அத்தனை வழிமுறைகளையும் முஸ்லிம் லீக் ஆதரிக்கிறது. போர்க் குணமிக்க முஸ்லிம் அமைப்புகள் விசயத்தில் அரசும், காவல் துறையும், ஊடகங்களும் என்ன சொல்கிறார்களோ, அதை ஒரு வரி விடாமல் வார்த்தை விடாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிற மனநிலைக்கு, பாரம்பரிய முஸ்லிம் தலைமை தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.
***
மதானி கைது செய்யப் பட்ட போது, ஊடகங்கள் அதைக்கையாண்ட விதம் மிகவும் அருவருப்பானது. ஒரு குற்றவாளியை கர்நாடக அரசுக்கு கை மாற்றுவதில், கேரள அரசு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி விட்டதாக கேரள ஊடகங்கள் விஷத்தைக் கக்கின. தமிழ் நாட்டின் பிரதான ஊடகமான சன் தொலைக்காட்சியின் செய்தி சேனலில், மதானியைக் கொச்சைப் படுத்தும் வகையில் செய்தி வாசிக்கப் பட்டது.
தான் குற்றவாளி அல்ல என்ற போதும் இறைவனுக்கு அடுத்த படியாக நீதி மன்றத்தின் மீது தான் வைத்துள்ள மரியாதையின் காரணமாக, சரணடைய விரும்புவதாக அறிவித்தவர் மதானி. அப்படிப்பட்ட ஒருவரை, ”ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டதாக” சன் டிவி தலைப்புச் செய்தி சொன்னது. செய்தியின் உள்ளீடாக, ”மதானி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் எட்டு ஆண்டுகள் தண்டனைப் பெற்றவர்” என்று சொல்லி வரலாற்றுத் திரிபு செய்தது. விசாரணை கைதியாக கோவை சிறையில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்து, குற்றமற்றவர் என்று விடுதலையான மதானியின் உண்மை முகத்தைக் காட்டுவதற்கு ஊடகங்களுக்கு மனமில்லை. மதானியைக் கொச்சைப்படுத்தும் போர்வையில், முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய சன் டிவிக்கு தமிழக முஸ்லிம்கள் உடனடி பதிலடி கொடுத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து கிளம்பிய எதிர்ப்பு அலைக்குப் பணிந்து, தனது தவறை உணர்ந்ததாக வருந்தியது சன் டிவி.
இணைய தளங்களில் ஜெயமோகன் போன்ற இந்துத்துவ சிந்தனை உடைய இலக்கிய பயங்கரவாதிகள், மதானியை தீவிரவாதத்தின் ஊற்றாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலை முறையினரின் களமாகத் திகழும் இணைய தளத்தில், முஸ்லிம் சமூகத்தின் போராளிகளை கொடூரமானவர்களாகவும், மனித குல விரோதிகளாகவும் காட்டுவதன் மூலம், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வெகு மக்களிடம் பற்றிப் பரவுவதற்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.
அறியாமையில் சிக்கி உழலும் முஸ்லிம் சமூகத்திற்கு, ஜெயமோகனையும் தெரியாது; இணைய தளமும் புரியாது என்பதுதான், உச்சக்கட்ட பரிதாபம்.
கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வலிமை மிகுந்த களமான ஊடகத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பதுதான், இத்தகைய அவலங்களுக்கு காரணமாக இருக்கிறது.
முஸ்லிம்கள் ஊடகத்தில் மட்டுமா இல்லை? அரசியலில் இல்லை; அதிகாரத்தில் இல்லை; கலை இலக்கியத்தில் இல்லை; பண்பாட்டுத் தளத்திலும் இல்லை…… இல்லை, இல்லை, இல்லவே இல்லை… இருப்பதெல்லாம் உள் முரண்பாடுகளும், குழுச் சண்டையும், கொள்கை மோதலும் தான்…
முஸ்லிம்களே! இனியும் இழப்பதற்கு எதுவுமில்லை; மீட்பதற்கோ ஆயிரம் இருக்கிறது.
[நன்றி: சமநிலைச் சமுதாயம்]
- ஆளூர் ஷாநவாஸ் ( mediastepsஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )
Filed under: Abu Adhil
முஸ்லிம்களின் அவலம் பேசப்படவே இல்லை
தமிழ்க் கவிதைகளுக்கு வெகுகாலமாக வழங்கப்படாமல் இருந்த சாகித்திய அகாடமி விருதை முதன் முறையாக பெற்ற பெருமைக்குரியவர். பால் வீதி என்கிற கவிதைத்தொகுப்பின் மூலம் இன்றைய நவீன கவிதைகளுக்கும் இவர் தான் முன்னோடி. சுட்டு விரல் என்கிற இவரின் சமூக கோபம் கொண்ட கவிதைப் புத்தகம் கடந்த முறை ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்ட பெருமைக்குரியது.
தமிழில் கஜல் கவிதைகள், மற்றும் ஹைக்கூ கவிதைகள் இவரால் அறிமுகம் செய்யப்பட்டவை. ”அம்மிக் கொத்த சிற்பி எதற்கு?” என திரைப்பாடல்களை மறுத்தவர். கவிக்கோ. அப்துல் ரகுமான் அவர்களை நேர்காணலுக்காக சந்தித்தோம்.
அமீர் அப்பாஸ்:- உங்களை கவிதையின் பக்கம்.. கவனம் கொள்ள செய்த காலம் எது? உங்களை கவிஞராக எப்போது முதலில் உணரத் தொடங்கினீர்கள்?
கவிக்கோ: – என்னுடைய கல்லூரி நாட்களில் என்னை மிகவும் பாதித்தவர்கள் கவிஞர் கம்பதாசன் மற்றும் உவமைக்கவிஞர் சுரதா. இன்று பல பேருக்குத் தெரியாது. ஒரு காலத்தில் திரைப்படத் துறையில் கொடி கட்டிப் பறந்தவர் கம்பதாசன்.
”காட்டாளி வில்லென நானிருந்தால் -அவள்
கணையெனக் கட்டி அணைய வாராள்
பாட்டாளி மகனென நானிருந்தால்-அவள்
பட்டினி வயிரென ஒட்ட வாராள்..!”
“கண் இளைப்பாறிட தூக்கமுண்டு-கெட்ட
கழுதை இளைப்பாறிட துறையுமுண்டு
பண் இளைப்பாறிட தாளமுண்டு-எங்கள்
பசி இளைப்பாறிட உண்டோ இடம்?”
சோஷலிச கருத்துக்களையும் மார்க்சிய அழகியலையும் பாடிய கம்பதாசன் என்னை பாதித்த பெருங்கவிஞன். அவரை போலவே என் இளமைக் காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சுரதா.
குளிந்த இரவு என்பதை ”தண்ணிர் இரவு” என்பார் சுரதா. water night- என்று ஆங்கில பெருங்கவிஞன் டென்னிசன் பாடியுள்ளார். ஆங்கிலம் அறியாத சுரதா அவருக்கு இணையாக பாடியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. பூக்கள் என்றால் ”கொட்டாவி விடும் பூக்கள்” என்று கூறுவார்.
நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை மாணவனாக படிக்கும் போது அவர் தலைமையில் கவியரங்கம் நிகழ்ந்தது. கண் என்றால் இமைச் சிப்பிக்குள் இருக்கும் “முத்து” என்றும், நெல் என்றால் மஞ்சள் சிப்பிக்குள் இருக்கும் “முத்து” என்றும், கண்ணீர் என்பது ”விழிகளின் வியர்வை” என்றும் பாடினேன்.
”நீ மிகப் பெரிய ஆளாக வருவாய்..!” என வாழ்த்தினார் சுரதா. காதல் சார்ந்த அக இலக்கியம், தலைவன் தலைவி.. பெயரை வெளிப்படையாக கூறக்கூடாது என்பது இலக்கணம். இந்த இலக்கணத்தை மீறிய காரணத்தால் காதல் கவிதையொன்று புறநானூற்றில் சேர்க்கப்பட்டது. இது குறித்து நான் ஒரு கவிதை எழுதினேன்.
“
வீர வாள் வசிக்கின்ற வைர உறையில்
ஈர மலர்களை இடுவது போல”
என்று பாடினேன். நீண்ட நாள் கழித்து சந்தித்த போது கூட இந்த வார்த்தைகளை மறக்காதவராக உவமைக்கவிஞர் சுரதா இருந்தார். என்னை ஒரு கவிஞனாக அடையாளம் கண்டவர் சுரதா.
அமீர் அப்பாஸ் – புதிதாக எழுத வருபவர்கள் முதலில் கவிதையைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அது ஏன்?
கவிக்கோ – கவிதை என்பது ஆதிக்கலை. அக்காலத்தில் எல்லா கதைகளும் கருத்துக்களும் கவிதைகளாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. செய்யுள் வடிவம் தாண்டி அச்சுக்கலை வந்ததற்கு பின்னால் தான் உரைநடை இலக்கியம் தோன்றியது. ஆகவே தமிழனின் மரபணுக்களில் இயல்பாகவே கவிதை இருக்கிறது.
அமீர் அப்பாஸ் :- உலக இலக்கியம் குறித்த உங்கள் பார்வை.. மற்றும் தங்களின் பன்மொழிப் புலமையைக் குறித்து சொல்லுங்கள்?
கவிக்கோ :- தொடக்க காலத்தில் தாகூர் என்னை மிகவும் பாதித்தார். ஆனால் என் எழுத்துக்களுக்கு மிகவும் தாக்கமாக இருந்தது.. கலீல் ஜிப்ரானின் எழுத்துக்கள். ஆங்கிலக் கவிஞர்களில் ஷெல்லி, கீட்ஸ் போன்றவர்களின் கவிதைகளில் மூழ்கிக் கிடந்தேன். எந்த துறையில் இறங்கினாலும்.. அதன் வேர் வரை சென்று ஆழக் கற்பது, எனக்கு இயல்பாகவே இருந்தது. அதனாலேயே ஆங்கில இலக்கியத்தை மிகவும் விரும்பிப் படித்தேன்.
ஸ்பானிஷ் கவிஞன் பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற இலத்தீன் அமெரிக்கக் கவிஞர் ஆக்டோவியா பாஸ், ஜெர்மனி கவிஞர் குண்ட்டர் கிராஸ் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் ஆவர். உருதுக்கவிஞர் இக்பால், மிர்ஸா காலிப் கவிதைகளில் மூழ்கிக்கிடந்தேன். எனக்கு தாய்மொழி உருது. அதனால் இந்தி கற்பது எனக்கு எளிதாக இருந்தது.
சிறு வயது முதல் குர்ஆன் படிப்பதற்காக அரபி கற்றேன். அதன் பயனாக மஹ்மூத் தர்வேஸ், முத்தனஃபி போன்றோரின் அரபிக்கவிதைகள் படித்தேன். உமர்கய்யாம், ஜலாலுதீன் ரூமி போன்றோரின் கவிதைகளை.. இரசிப்பதற்காக பாரசீகம் கற்றேன். சமஸ்கிருதம் ஒரளவுக்குத் தெரியும்.
அமீர் அப்பாஸ்:- விகடன் போன்ற வெகுஜன இதழ்களில்.. நீங்கள் எழுதிய தொடர்களின் வாயிலாக.. சிறந்த கட்டுரையாளராகவும்.. ஒரு சிறுகதையாளராகவும் சாதித்து இருக்கிறீர்கள். இருந்தும்.. உங்கள் படைப்பாற்றலுக்கு கவிதையை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
கவிக்கோ :- கவிதை தான் என்னை தேர்ந்தெடுத்தது. நான் கவிஞனாக இல்லாமல் வேறு யாராகவும் இருக்க முடியாது.
அமீர் அப்பாஸ்:- திரைப்படத்துறையை ஏன் புறக்கணித்தீர்கள்? ”அம்மி கொத்த சிற்பி எதற்கு” என்பது கர்வம் இல்லையா?
கவிக்கோ :- அந்த கர்வம் தான் மோசமான திரைப்பாடல்களின் பக்கம் என்னைப் போக விடாமல் தடுத்தது. திரைப்படத்துறை பெரும்பாலும் மோசமானவர்கள் கையில் உள்ளது. இன்றைய வணிகச் சூழலுக்கு.. வளைந்து கொடுத்து.. சமரசம் செய்து கொள்ள வேண்டி வரும். இவை யாவும் என் இயல்புக்கு பொருந்தாது.
கண்ணதாசன் காலத்திலேயே பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. “தைப்பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மிகப்பெரிய அன்றைய காலத்தின் வெற்றிப் படத் தயாரிப்பாளர், இயக்குநர் ஏ.கே.வேலன் அவர்கள், நான் படிக்கும் கல்லூரி விழாவிற்கு வந்தார். என் கவிதைகளை விழாமேடையில் கேட்டு இரசித்து.. பாடல் எழுத அழைப்பு விடுத்தார். பின்னாளில் இயக்குநர் மணிரத்னம், பம்பாய் படத்திற்கு வசனம் எழுத அழைத்தார். எல்லா கால கட்டத்திலும் ஒரே மன உறுதியோடு.. வந்த வாய்ப்புக்களை மறுத்து விட்டேன்.
அமீர் அப்பாஸ்: ஒரு காலத்தில் எழுதுவதென்பது மேதைத்தனத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. தங்கள் ஆளுமையை வெளிப்படுத்துவது என்கிற நிலை மாறி.., தற்போது எழுத்து என்பது சமூகக்கட்டமைப்பை மறுப்பது, எல்லா ஆதிக்கங்களுக்கும் எதிரானது என்கிற நிலை வந்து விட்டது. கவிஞன் என்பவன் யார் பக்கம்? ஆதிக்க சக்திகளுக்கு பின்னால் நிற்பவனா? அடித்தட்டு மக்களின் குரலாய் ஒலிப்பவனா?
கவிக்கோ:- புல்லாங்குழல் இசைக்கிறது. செவி உடையவன் எல்லாரிடத்தும் போய் சேருகிறது. அந்த இசையை இரசிப்பவன் அடிமையாகவும் இருக்கலாம். ஆட்சியாளனாகவும் இருக்கலாம். புல்லாங்குழலின் இசை அனைவருக்கும் பொதுவானது. அது யார் பக்கம்? என்று யாரும் சொல்லமுடியாது.
அமீர் அப்பாஸ்: அப்படியானால் கலை கலைக்காகவா?
கவிக்கோ: சோப் என்ன சோப்பிற்காகவா? குளிப்பதற்காக இல்லையா? பயன்பாடற்ற எதுவும் நிலைக்காது.
அமீர் அப்பாஸ்: திராவிட இயக்கத்தின் கவிஞராக அறியப்பட்டிருக்கிறீர்கள். அதே சமயம் பெரியாரை பின்பற்றிய பாரதிதாசனைப் போல ஒரு நாத்திகனாக இல்லை. ஒரு ஆன்மீகவாதியாக இருக்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?
கவிக்கோ:- பெரியார் ஒரு வேளை பிறக்காமல் போயிருந்தால் கூட.. நான் ஒரு பகுத்தறிவாதியாகத் தான் இருந்திருப்பேன். என் தந்தையார் மஹதி அவர்கள்.. பெரியாரை மதுரைக்கு அழைத்து பல கூட்டங்கள் நடத்தி இருக்கிறார். பெரியாரின் சமூகச் சீர்திருத்தங்களை மட்டும் உள்வாங்கிக் கொண்டேன். அதே சமயம் கடவுள் நம்பிக்கையை கைவிடவில்லை. சாதி மறுப்பையும் மதவாதத்தால் ஏற்படும் தீமைகளையும் மறுப்பதில் நான் உடன்படுகிறேன். அதற்காக கடவுளை மறுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
அமீர் அப்பாஸ் :- சமூக நலன் கருதி கொள்கைக்காக பாடுவது, தன் எழுச்சியாய் விருப்பங்களைப் பாடுவது, இதில் கவிதையின் இயங்கு தளம் எப்படி இருக்க வேண்டும்?
கவிக்கோ :- படைப்பு என்பது உணர்வு தளத்தில் இயங்க வேண்டும். அதில் போலித்தனத்திற்கு இடம் இருக்கக் கூடாது. கொள்கை, இயல்பாகவே இருப்பவர்கள் அதை கவிதையாக்கிக் கொள்ளலாம். செயற்கையாக வலிந்து பேசக் கூடாது. ” ரோஜாப்பூச்செடியிடம் மிளகாய் காய்த்தால் நல்லாயிருக்கும்..!” என்று எதிர்பார்க்கக் கூடாது. ”மிளகாய்ச் செடியிடம்.. ரோஜாப்பூவை நீ பூத்தால் எவ்வளவு அழகாய் இருக்கும்?” என எதிர்பார்ப்பதைப் போன்றது தான், இயல்பை மீறிய முரண்பாடுகள். இளமைக்காலம் முழுக்க தத்துவ கவிதைகள் எழுதிய நான், என் 65 ஆவது வயதில் தான், முதல் காதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். படைப்பு மனம் இப்படித் தான் இயங்க வேண்டும் என யாரும் கட்டளையிட முடியாது.
அமீர் அப்பாஸ் :- குடும்பம் என்கிற அமைப்பு தான் பெண்ணடிமைத்தனத்தைப் பாதுகாக்கிறது. எனவே, குடும்பம் என்கிற அமைப்பே பெண்களுக்கு எதிரானது… என்று பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். நீங்கள் அவர்களின் படைப்புகளை விமர்சிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தனி மனித வாழ்வு வரைக்கும் விமர்சனம் செய்கிறீர்கள். இது சரியா? திருமணச் சடங்கைப் புறக்கணிப்பதன் மூலமாக சேர்ந்து வாழ்பவர்கள் {Living together} இயல்பாகவே சாதி மறுப்பு, மத அடையாளங்களைப் புறக்கணிப்பது போன்றவற்றில் முற்போக்குவாதிகளாக இருக்கிறார்கள். இவர்களை ஏன் நீங்கள் விமர்சிக்க வேண்டும்?
கவிக்கோ ;- பெண்ணுக்கென்று பல சிறப்பான இயல்புகள் இருக்கின்றன. தாய்மை என்பது இயற்கை அவர்களுக்கு தந்த சிம்மாசனம்..! பிரசவிப்பதற்காகவே பெண்கள், மென்மையாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆணைப் போன்ற கடுமையான உடலமைப்போடு அவள் இருந்தால் பிரசவிக்க இயலாது.
போருக்கு இலக்கணம் வகுத்த பழந்தமிழன், பெண்களை போர் செய்ய அனுமதிக்கக் கூடாது என்கிறான். அதற்குக் காரணம், பெண்கள் வீரமற்றவர்கள் என்ற அர்த்தத்தினால் அல்ல. போர் செய்யும்போது, பெண்கள் எதிர்ப்படையால் பிடிபட நேர்ந்தால்.. பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவார்கள். இதனைத் தவிர்ப்பதற்காகவே போரில் பெண்கள் ஈடுபடக் கூடாது… என்று பழந்தமிழ் மரபு அவர்களைத் தடுத்திருக்கிறது.
கூடி வாழ்தல் என்கிற நிலையில் இருந்த மனிதன், குடும்பம் என்கிற அமைப்பிற்குள் வருவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கின்றன. முல்லை நிலத்தில் தான் இந்த குடும்ப அமைப்பு வந்ததாக இலக்கிய வரலாறு கூறுகிறது.
கற்பு எனப்படுவது ஒரு பெண் இவருடன் வாழ்கிறேன் என்று தானே கற்பித்துக் கொள்வதில் இருந்து உருவாகியது. குடும்பம் என்கிற அமைப்பை கற்பித்தல் என்கிற சூழலில் தான், கற்பு என்கிற சொல்லாடல் பிறந்ததாகக் கூறப்படுகிறது. குடும்பம் என்கிற அமைப்பில் இல்லாமல் நாடோடிக் குழுக்களாய் அலைந்து இன்பம் துய்ப்பதால், முறை கெட்டு அழிந்து போன மனித இனங்கள் உண்டு. அதை அங்கீகரிக்க இயலாது.
விவாகம் என்கிற சமஸ்கிருத சொல் கூட பெண்ணைத் தன் விருப்பத்திற்கு தூக்கிச் செல்வது என்பதிலிருந்து தான் தோன்றியது. தாய்-தந்தையர் சம்மதித்தால் மண முடிப்பது அல்லது உடன்போக்கு என்று சொல்லப்படுகிற மரபு, தமிழ்ச் சமூகத்தில் இருந்திருக்கிறது. காட்டுமிராண்டி கால வழக்கத்தை மீட்டெடுப்பது ஒரு போதும் நவீனமாகாது. இதனை ஆதரிப்பவர்கள் நான் அறிந்த வரை.. நடைமுறை வாழ்வில் மனச்சிதைவுக்கு ஆளானவர்கள் என்று உணர்கிறேன்.
அமீர் அப்பாஸ் :- தமிழக முதல்வர் கலைஞரின் நண்பராகவும், அவரது கவியரங்கத்தில் பாடுபவராகவும் இருந்த நீங்கள், யாரும் எதிர்பாராத சூழலில் வக்பு வாரியத் தலைவராகப் பொறுப்பேற்று இருக்கிறீர்கள்..! இதன் பிண்ணனி என்ன? பதவி ஆசை, உங்களையும் விட்டு வைக்கவில்லையா?
கவிக்கோ :- பதவியை நான் ஒரு போதும் விரும்பியவன் இல்லை. விரும்பியிருந்தால் 1967 கால கட்டத்தில் இருந்து நான் அமைச்சராக இருந்திருப்பேன். மூன்று முறை தேர்தலில் போட்டியிட தேடி வந்த வாய்ப்புக்களை மறுத்திருக்கிறேன். துணை வேந்தர் பொறுப்பையும் வேண்டாம் என மறுத்திருக்கிறேன். ஆனால், இந்த சூழலில் மட்டும் வக்பு வாரியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டேன். ஏனெனில், இஸ்லாமிய சமூகம் மிகவும் பின்தங்கிய மோசமான இக்கால கட்டத்தில் கவிஞனாக மட்டுமே ஒதுங்கிக் கொள்ள விருப்பம் இல்லை. மொத்தம் 13 சதவீதம் இஸ்லாமியர்களில் 11 சதவீதம் பேர், தலித்துக்களை விடவும் பின்தங்கிய நிலையில் கல்வி அறிவற்று, வறுமை நிலையில் அடித்தட்டு மக்களாக ஒடுக்கப்பட்டுள்ளனர். மீதமிருக்கிற 2 சதவீதம் பேர் வசதியான வணிகச்சூழலில் இருக்கின்றனர். அவர்களை முன்னிறுத்தி 11 சதவீதம் பேரின் அவலம் பேசப்படவே இல்லை. இதை என்னால் ஆன வரை மாற்றும் முயற்சியே இந்த முள்கிரீடம்.
நேர்காணல்: அமீர் அப்பாஸ் ( jibran.abbஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )
(நன்றி: “கிழக்கு வாசல் உதயம்” இலக்கிய மாத இதழ் – from கீற்று.காம்)
Filed under: Abu Adhil
நவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்!
வளைகுடா நாடுக ளில் வேலை செய்யும் முஸ்லிம்களில், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் கிட்டத்தட்ட அடிமைக ளைப் போல் தான் வாழ்ந்து வருகின்றனர்.
பெரிய மாளிகைகளின் மூலை யில் இருக்கும் ஒரு சின்ன ரூம்தான் இவர்களது உலகம். ரூபாய் 6000 /7000 சம்பளத்தில் ஆரம்பிக்கும் அரபுலக வாழ்க்கை, 10 ஆண்டுகள் ஒரே வீட்டில் இருந்தால் 15000- வரை ஆகும். 10-20% நபர்களுக்குத் தான் இந்த வாய்ப்பும் கிட்டும். 20% சகோதரர்கள் வேறு கம் பெனிக்கோ, ஊருக்கோ சென்று விடுவார்கள். மீதம் இருப்பவர்கள் அதே நிலையில், கொடுக்கும் உணவை உண்டு, குடும்பங்களை விட்டு வருடக் கணக்கில் பிரிந்து, மொபைல் ஃபோனில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வாழ்க்கையில் பலர் சூழ் நிலைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப குற்றவாளிகளாகவும், இருக்கின்றார்கள். நவீன உலக கலாச் சாரத்தின் சீரழிவுகளின் தாக்கம் இன்று கீழ் தட்டு மக்க ளைத் தான் முதலில் தாக்கும் என்பது எதார்த்தம். அதற்கேற்ப இவர்களில் பலர் பல துன் பங்களுக்கு ஆளாகிறார்கள். இதில் வெளியே சொல்ல முடியாத இன்னல்களை ஏற்றுக் கொண்டு இருப்பவர்கள் வீட்டு வேலை செய்யும் ஹவுஸ் மெயிட் என்ற இளம் பெண்களே. இதில் தமிழ் பேசுபவர்கள் குறைவு. சில உண்மை நிகழ்வுகளை தங்கள் முன் வைத்து இன்றைய சூழலில் என்ன தீர்வு என் பதையும் சற்று நோக்குவோம்.
1) திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக் குமார் என்பவரை ஒரு விளையாட்டு விபத்தில் சிறு வன் ஒருவன் துப்பாக் கியால் (நிஜத்துப்பாக்கி) காலின் மேல் பகு தியில் சுட்டு விட்டான். குண்டு காலில் பாய்ந்தது. இவரை 4 மாதங்கள் வீட்டு சிறையில் வைத்து, உடல்நிலை சரியான பின் வெளியே விடப் பட்டார். அதையும் தாங்கிக் கொண்டு தான் நம் சகோதரர் ஜெயக்குமார் இருந் துள்ளார். ஆனால் தான் செய்யாத குற்றத்திற்காக வீட்டு சிறையில் இருந்த அந்த 4 மாதங்களுக்கு, "நீ தான் வேலையே செய்ய வில்லையே, அதனால் உனக்கு சம்பளம் கிடையாது" என்று முத லாளி சொன்னவுடன் தான் ஜெ யக் குமாருக்கு கோபம் வந்து, இந் திய தூதரகத்தை தமுமுக, மூலம் அணுகினார். 28 நாட்கள் மறு படியும் உண்மையான ஜெயிலில் இருந்து விட்டு, தற்போது நாட்டில் உள்ளார்.
2) மற்றொருவர் தென் மாவட் டத்தைச் சேர்ந்தவர். சத்தம் போட் டு பேசுவதற்குக் கூட பயப்படு பவர். இவர் கடந்த 10 மாதங் களாக வெறும் 20 தினார்கள் (ரூபாய். 3200) சம்பளத்திற்கு வேலை செய் துள்ளார். சில தினங்களுக்கு முன் இவரை கழுத்தைப் பிடித்து நெரித்ததால், இவரால் தற்போது பேச இயலவில்லை. இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்று டாக்டரை சந்தித்து விட்டார். ஒரு கோளாறும் இல்லை என்று மருத்துவர் கூறும் நிலை. தொண் டையில் வலி இருக்கின்றது. இவர் வேலை செய்யும் வீட்டில் 8 பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளார்கள். காலை 7.30 மணிக்கு வண்டியை எடுப்பவர் இரவு 8 மணி வரை நிப்பாட்ட இயலாது. பேசுவதற்குக் கூடப் பயப்படுபவர் தன்னுடைய சூழலை வெளியே சொல்லாமல் மறுபடியும் பம்பரமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். அருகில் இருக்கும் சகோதரர்கள் நமக்கு ஃபோன் செய்தார்கள். 8.2.10 அன்று ஊர் திரும்பினார்.
3) மேலும் சென்ற வருடம் கம்பெ னியில் ஓட்டுனர்களாக வேலை பார்த்து வந்த 9 தமிழர்கள் பல மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் பல அவதிக்குள்ளானார்கள். இவர்களைப் பற்றிய செய்தி குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிக்கைகளிலும் வந்தது. பல தமிழக இயக்கங்களின் உதவியுடன் ஊருக்கு அனுப்பினோம்.
4) ஏப்ரல் 22 அன்று இந்திய தூதரகத்தின் வாசலில் மாரியப்பன் என்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த சகோதரரை குவைத் ஸ்பான்சர் கம்பியால் அடித்துள்ளார். தற் போது இந்த சகோதரர் இந்திய தூதரக காப்பகத்தில் உள்ளார். தூதரகத்தின் உதவியுடன் விரை வில் ஊர் திரும்புவார்.
இப்படி தொடர் கதைகளாக பல சோக நிகழ்வுகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் நம் சகோதரர்களின் அறியாமையும், பணம் சம்பாதித்து விட வேண் டும் என்ற ஆவலும், இடைத் தரகர்களின் பேராசையும் தான் ஆகும். எனவே இதைப் பற்றிய விழிப்புணர்வை நம் சகோதரர்கள் மத்தியில் நாம் கொண்டு வர வேண்டும். எந்த நோயும் வரும் முன் காப்பதே சாலச் சிறந்ததாக அமையும். இந்தியா ஒளிர்ந்து விட்டதோ இல்லையோ, உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் ஊரிலேயே இன்றைய சூழலில் ரூபாய் 10000/- சம்பாதிக்க நிறைய நல்ல வழிகள் உள்ளன. மனைவி, மக்களோடு கூழானாலும் குடித்து குடும்பத்துடன் வாழலாம். வெளி நாட்டில் டிரைவர் வேலை தான் வேண்டும் என்றால் அதை இந் திய சட்ட விதிமுறைகளுக்கு முழு தும் உட்பட்டு வந்தால் தான், பின் ஏற்படும் பிரச்னைகளை சட்டப்படி சந்திக்க இயலும். தற் போதுள்ள சட்டங்களைச் சரியாக புரிந்து அதன்படி வந்தால்தான், இந்தியத் தூதரகம் பின்னர் ஏற் படும் சிக்கல்களில் சுலபமாக தன் அதிகாரத்தை பயன்படுத்த இயலும். உதாரணமாக தற்போதுள்ள ஒரு சட்டம், படிக்காதவர்கள் எந்த வேலைக்கு வந்தாலும், முதலில் சரியான கான்ட்ராக்ட் (வேலை ஒப்பந்தம்) இல்லாமல் வர இயலாது. சட்டப் படி இந்தியர்களுக்கு குறைந்தது ரூபாய்10000/- சம்பளம் கொடுத்தால் தான் ஒப்பந்தமே எழுத இயலும். இந்த ஒப்பந்தத்தை வெளிநாட்டில் உள்ள இந்திய தூத ரகம் சரி பார்த்து, ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி ஒப்புதல் வழ ங்க அது ஒரு தொகையை வசூல் செய்து வைத்துக் கொள்கிறது. இந்த தொகை பின்னர் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு ஊர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த நபருக்கு எளிதாக விமான டிக்கட் எடுத்து ஊருக்கு இந்திய தூதரகம் அனுப்பி விடும். தற் போது டிக்கெட்டிற்காக பல மாதங்கள் பலர் சிறையில் வாடும் நிலையே உள்ளது. அடுத்ததாக வேலை செய்யும் ஸ்பான்சரும், விசா கொடுத்தவரும் ஒரே ஆள £க அல்லது குறைந்த பட்சம் ஒரே குடும்பத்தினராக இருக்க வேண்டும். இடைத் தரகர்களை நம்பி எங்கோ விசா எடுத்து விட்டு, வேறு எங்கோ வேலை செய்வது சட்டப் படி குற்றமாகும். இதில் பல சூழலில் படித்தவர்களும் ஏமாறுகின்றனர். எந்த வேலை செய்யப் போகிறோமோ அதற்கு சம்பந்தம் உள்ள விசாவிலேதான் வர வேண்டும். உதாரணமாக ஒரு முடி திருத்தும் கடையில் வேலை செய்பவரின் விசாவில் உள்ள தொழிலைப் பார்த்தால், தோட்டக் காரர் என்று இருந்தால் அதுவும் குற்றமே ஆகும். அண் மையில் ஒரு சின்ன வளைகுடா நாட்டில் 600 போலி நிறுவனங் களை கண்டு பிடித்துள்ளார்கள். அதாவது அப்படி ஒரு கம்பெனியே உண்மையில் இயங்கவில்லை. ஆனால் அந்த கம்பெனியில் வே லை செய்வது போல் 100 பேர்கள் எங்கோ, ஏதோ வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். இதற்கும் நம் சகோதரர்கள் பலர் பலியாகி உள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு முன் வளை குடா நாடுகளில் யாரும் எந்த வேலையும் செய்ய இயலும். படி த்தவர்கள், படிக்காதவர்கள் என் ற பாகுபாடு இல்லாமல், திறமை இருந்தவர்கள் எல்லோரும் சம்பா தித்தார்கள். நம் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்த இட ஒதுக்கீடு என்று கூட இந்த வாய்ப்பை கூறலாம். இதை பயன்படுத்தி, நம் மவர்கள் அடுத்த தலைமுறையை கல்வியில் உயர்த்த வேண்டும். காலச் சக்கரம் சுழல்வதில் எதிர் திசையிலும் செல்ல வேண்டி இருக்கும். அதற்கும் நம்மையும், நம் சந்ததியினரையும் தயார் செய்ய வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் எங்கும், எப்போதும், எந்நிலையிலும் நேர்வழி காட்டுவானாக.
-பொறியாளர் ஷாநவாஸ், நன்றி : தமுமுக இணையதளம்
Filed under: Abu Adhil
உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி
உலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி: நாளொன்றுக்கு 2.5 மில்லியன் சவூதி ரியால்கள்!
நபிகளாரின் பள்ளி என்று அழைக்கப்படும், மதீனா – மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் நோன்புக்காலத்தில் தினமும் பத்து இலட்சம் மக்கள் நோன்பு துறக்க ‘இஃப்தார்’ ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவாம்.
விருந்தோம்பலுக்கும் உபசரிப்புக்கும் பெயர்பெற்ற மதீனாவாசிகள் நோன்பாளிகளுக்கு உணவு வழங்கி மகிழ்வதை பெருமிதமாகவும் பாக்கியமாகவும் கருதுகின்றனர். இவ்வகையில் நாளொன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் சவூதிரியால்கள் செலவிடப்படுகின்றதாம்.
மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரம் என்னும் பெரிய பள்ளியில் நோன்பு துறக்க பேரீச்சம் பழங்களும், சவூதி கஃவா என்னும் காஃபி வகை பானமும் மட்டுமே வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள "புனித பள்ளிகள் துறை அமைச்சகம்", மதீனாவாசிகளின் விருந்தோம்பல் உணர்வுக்கு மதிப்பளித்து, அவர்கள் விருப்பத்திற்கேற்ப நோன்பு துறப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள அனுமதித்துள்ளது. இத்தகவல்களை அத்துறையின் மக்கள் தொடர்பாளர் அப்துல் வாஹித் அல்ஹத்தாப் தெரிவித்துள்ளார்.
மதீனாவாசிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 பேர் கொண்ட குழு, மாலைநேரத்தொழுகைக்குப் பிறகு இதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறது. பகுதி, பகுதியாக, குழு,குழுவாக தினமும் சுமார் 10 இலட்சம் (1மில்லியன்) மக்களுக்கு இஃப்தார் உணவு வழங்கப்படுகிறது.
ஈத்தம்பழம், தயிர், ஷ்ரைக் எனப்படும் ரொட்டி, டக்கா எனப்படும் கஞ்சி போன்ற உணவு, சவூதி கஃவா ஆகிய உணவு வகைகள் விநியோகிக்கப்படுகின்றனவாம். மட்டுமின்றி, 20,000 குளிர்விகளில் புனித ஜம்ஜம் நீரும் வழங்கப்படுகிறது. பெருமளவு மதீனா பெண்களும் இதில் பங்கெடுக்கின்றனர்.
12 நிமிடங்கள் நீடிக்கும் இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பின் 2,000க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மின்னணு துடைப்பான்கள் மூலம் சுத்தம் செய்கின்றனர். அதன் பின் மஃக்ரிபு தொழுகை முடிந்த பின்னாலும், ஈத்தம் பழங்களும், கஃவா பானமும் வழங்கப்படுகிறதாம்.
நோன்பு துறப்பு மட்டுமின்றி, நோன்பு வைப்பதற்கான சஹர் உணவும், இந்திய மற்றும் சவூதி உணவு வகைகளாக, சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு வழங்கப்படுகிறதாம்.
Filed under: Abu Adhil
80 ஆண்டு மூடிக் கிடந்த பள்ளி வாசலில் இதஜ முயற்சியால் மீண்டும் தொழுகை!
وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
“இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு”. (அல்குர்ஆன் 2:114)
ஏக இறைவனை வணங்க கட்டப்பட்ட பள்ளிவாசல் கடந்த 80 வருடமாக பாழடைந்து மூடி கிடந்தது என்றால் எவ்வளவு பெரிய அநியாயம். இக் கொடுஞ் செய்தியினை அறிந்து, அந்த இறை இல்லத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டக் கிளை சகோதரர்கள் மீட்டனர்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு உப்பு பேட்டை பகுதியில் சுமார் எண்பது ஆண்டு காலமாக பாழடைந்து, சிதிலமடைந்து கிடந்த பள்ளிவாசலை வேலூர் மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் முயற்சியால் மீட்டு, இறையருளால் மீண்டும் அப்பள்ளியில் தொழுகை நடைபெற உள்ளது.
இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆ தொழுகையுடன் ஐவேளை தொழுகையும் துவங்க உள்ளது. முதல் ஜும்ஆ உரையை இதஜ மாநிலத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் நிகழ்த்த உள்ளார். அல்லாஹ்வின் பள்ளியில் அணு தினமும் தொழுகை தொடர்ந்து நடை பெற பிரார்த்தியுங்கள்.
நன்றி : http://www.intjonline.in/789.do
தகவல் : மஸுதா ஆலிமா
Filed under: Abu Adhil
நோன்பாளிகளான சிறைக்கைதிகளை கொடூரமாக தாக்கிய போலீஸ்by கூத்தாநல்லூர் முஸ்லீம்
போபால் மாவட்ட கோர்ட் வளாகத்திலிருக்கும் சப்-ஜெயிலில் இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. நோன்பு திறக்கவும்,தொழுகைக்காக ஒழுச் செய்யவும் தண்ணீர் கேட்ட நோன்பாளிகளைத்தான் போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர். ரமலான் நோன்பையும்,இஸ்லாமிய மார்க்கத்தையும் கேவலமாக பேசியவாறு தாக்கியுள்ளனர் போலீசார்.விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த சிறைக்கைதிகளை தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட சப்-ஜெயிலில் வைத்துதான் போலீசார் அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் லத்தியும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. நோன்பு திறப்பதற்கு சில நிமிடங்கள் முன்னதாக இச்சம்பவம் நடந்துள்ளது. தண்ணீர் கேட்ட சிறைக்கைதிகளிடம் தண்ணீர் தரமுடியாது எனக்கூறியதுடன் அவர்களின் நம்பிக்கைக் குறித்தும் கேவலமாக பேசியபொழுது அவர்கள் கோபமடைந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களை லாக்கப்பில் அடைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர் போலீசார். இதனைத் தொடர்ந்து முஸ்லிம்களல்லாத சிறைக்கைதிகள் உள்பட 130 பேர் போலீசாரை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்டனர்.பத்திரிகையாளர்களை அழைக்கவும், போலீசின் தாக்குதலைக் குறித்து பேசவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிதான் இந்த தர்ணா. அருண் மாலிக்,அமர்சிங் இரண்டு போலீஸ்காரர்கள் ரமலான் நோன்பைக் குறித்தும்,இஸ்லாத்தைக் குறித்தும் மோசமாக பேசி கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சிறைக்கைதிகள் தலையை சுவரில் மோதி இரத்தம் வரவழைத்தனர் என போலீசார் கூறுகின்றனர். சில தினங்களுக்கு முன்பாக போபால் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை போலீஸ் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தனர். செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் |
–





