Filed under: Abu Adhil
| அமெரிக்காவை எதிர்க்கும் அமெரிக்கர்கள் அமெரிக்காவுக்கு எதிராகப் பல போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்திருக்கின்றன என்றாலும் இது அமெரிக்காவுக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்தும் போராட்டம். ஐ ஹேட் பாலிடிக்ஸ் என்று முந்தாநாள்வரை ஒதுங்கியிருந்தவர்கள்தான் இன்று வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். நியுயார்க் லோயர் மான்ஹாட்டனில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் (சுகோட்டி பூங்கா) அவர்களில் சிலர் கிட்டத்தட்ட ஒரு மாதமாகத் தங்கியிருக்கிறார்கள். வேடிக்கை பார்ப்பவர்களை நோக்கி கைஅசைக்கிறார்கள். தங்களுக்குள் சத்தம் போட்டு உரையாடிக்கொள்கிறார்கள். நடமாடும் உணவுக் கடைகள் சுற்றிலும் முளைத்திருப்பதால் அங்கேயே சாப்பாடும் முடிந்துவிடுகிறது. இரவில் தரை விரிப்பை போட்டு உறங்குகிறார்கள். ‘வால் ஸ்ட்ரீட் மீட்கப்பட்டு விட்டது. நாங்கள் விற்க்கப்பட்டுவிட்டோம்!’ என்னும் அட்டை வாசகத்தை இளைஞர்கள் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு சுற்றிவருகிறார்கள். ‘ஒரு சதவீத செல்வந்தர்கள், 99 சதவீத மக்களை ஆட்டிப் படிக்கிறார்கள்’ என்கிறது ஒரு பதாகை. ’99 சதவீதத்தை காப்பாற்று’ என்கிறது மற்றொன்று. தொடக்கத்தில் காவல்துறை இவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. கண்டுக்கொண்டபோதும் இரு தவறுகள் செய்தார்கள். இரண்டு நாட்களில் காலி செய்துவிடுவார்கள் என்று அலட்சியப்படுத்தினார்கள். அது நடக்காத போது, அடித்து உதைத்து, கீழே தள்ளி, பூட்ஸ் கால்களால் மிதித்தார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் இதனை வீடியோ எடுத்து இணையத்தில் போட்டபோது, ‘ஐ ஹேட் பாலிடிக்ஸ்’ ஆசாமிகள் கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியில் வர ஆரம்பித்தார்கள். வால் ஸ்ட்ரீட் மீதான வெறுப்பும் கசப்புனர்வும்தான் முன்பின் அறிமுகம் இல்லாத, முன்பின் போராடாத ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்றிணைக்கிறது. ஏன், குறிப்பாக வால் ஸ்ட்ரீட்? காரணம், இங்குள்ள நிதி, மூலதன நிறுவனங்கள் அமெரிக்காவின் அரசியலையும் பொருளாதரத்தையும் அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் கட்டுப்படுத்துகின்றன. ஓர் உதாரணம், இந்த ஆண்டு, ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையில் இடம்பெற்றுள்ள டாப் 400 அமெரிக்கச் செல்வந்தர்களின் மொத்த சொத்துக்களின் நிகர மதிப்பு 1 .53 ட்ரில்லியன் டாலர். கடந்த ஆண்டை விட 12 சதவீத வளர்ச்சி. அமெரிக்காவை உலுக்கிய பொருளாதார வீழ்சிக்குக் காரணமான நிதி நிறுவனங்களும் வங்கிகளும் யூக வணிக அமைப்புகளும் வால் ஸ்ட்ரீட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடிழந்து, வேலையிழந்து வீதிகளில் திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில், அதற்குக் காரணமான நிறுவனங்கள்ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்று ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பல, திவாலானாவை. மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு ஒபாமா அரசு இவர்களை மீட்டெடுத்தது. அதாவது, லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை, வால் ஸ்ட்ரீட் பாதிக்கப்படக்கூடாது. இதுதானே அரசு கொள்கை? விரக்தியடைந்த அமெரிக்கர்கள் தங்கள் கோபத்தை வால் ஸ்ட்ரீட்டில் குவித்ததன் பின்னணி இதுவே. ஒரு சிறு குழுவாகத் தொடங்கிய போராட்டம் இன்று வாஷிங்டன், பாஸ்டன், மிச்சிகன், சிக்காக்கோ, அலாஸ்கா, கலிபோர்னியா என்று அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கிறது. விக்க்லீக்ஸ அசாஞ்சே லண்டன் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்து பேசியுள்ளார். சல்மான் ருஷ்டி, மைக்கேல் கன்னிங்ஹாம் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற 100 எழுத்தாளர்கள் இணைய பெட்டிஷனில் கையெழுத்திட்டு ஆதர்வளித்திருக்கிரார்கள். அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தையும் அமெரிக்க நிதி நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன என்பதால், வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் அமெரிக்காவைக் கடந்து பிற நாடுகளையும் பற்றிக்கொண்டிருக்கிறது. மெல்பர்னை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆஸ்திரேலியர்கள் அமெரிக்கர்களைப் போலவே வீதிகளில் இறங்கியிருக்கிறார்கள். தொடங்கிய முதல் நாளே, மெல்பர்னிலுள்ள சிட்டி ஸ்கொயரில் ஆயிரம் பேர் திரண்டுவிட்டார்கள். ‘வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகள் சந்திக்கும் அதே பிரச்சினைதான் எங்களுக்கும். எங்களுடைய ஜனநாயகம் போலியானது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் நாங்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம்’. சிட்னியில், மத்திய ரிசர்வ் வங்கிக்கு எதிரில் 2 , 000 பேர் திரண்டுவிட்டார்கள். இவர்களில் பூர்வகுடிகள், தொழிற்சங்கவாதிகள், இதுசாரி சிந்தனை போக்கு கொண்டவர்கள் என்று பலரும் அடங்குவர். வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம் ஒவ்வொரு நாட்டலிலும் ஒவ்வொரு வடிவம் எடுத்துள்ளது. பங்குச்சந்தைப் பெருமுதலாளிகளை எதிர்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், வங்கி அதிகாரிகள், நிதி நிறுவன அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பலரையும் சேர்த்தே எதிர்க்கிறார்கள். டோக்கியோ, மணிலா, தாய்ப்பே, சியோல் என்று போராட்ட்டம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. ஷாப்பிங் மால், தனியார் வங்கிகள், முக்கிய வர்த்தகக் கட்டிடங்கள் ஆகியவற்றின் முன்பு பதாகைகளை உயர்த்திப் பிடித்தபடி நடைபோடுகிறார்கள். முழங்குகிறார்கள். நாடகம் நடத்துகிறார்கள். வித்தியாசமான ஒப்பனைகளுடன் கவனம் ஈர்க்கிறார்கள். இத்தாலியில் உள்ள யுனிகிரடிட் என்னும் மிகப் பெரிய வங்கியின் மீது முட்டைகள் வீசியதைத் தவிர, வேறு சட்ட விரோதச் செயல்கள் எதிலும் யாரும் இதுவரை ஈடுபடவில்லை. ரோமிலும் வேறு சில நாடுகளிலும் கடைக் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன. ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!’, ‘பிலிப்பைன்ஸ் விற்பனைக்கல்ல!’, ‘ஜனநாயகம் தெருக்களில்தான் வாழ்கிறது’ போன்ற முழக்கங்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன. ‘லண்டன் பங்குச் சந்தையை ஆக்கிரமிக்கவும்!’ என்னும் பெயரில் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு 6 , 000 பேர் இணைந்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டமே உத்வேகம் அளித்திருக்கிறது. தங்கள் கோபத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்பதே வால் ஸ்ட்ரீட் போராட்டக்கார்களுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது. பொருளாதார நிபுணர்களிடம் இருந்தும் மீடியாவிடம் இருந்தும் அரசியல் விமர்சகர்களிடம் இருந்தும் அவ்வப்போது ஆலோசனைகளையும் வழிக்காட்டுதல்களையும் பெற்று இவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் ஆதரவை நாடி, தீவிரப் பிரசார யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரபுலகப் போராட்டங்களுக்கும் வால் ஸ்ட்ரீட் போராட்டங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இணையம் மூலமே இவர்கள் ஒன்றிணைகிறார்கள். ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த மீடியாவை மெல்ல மெல்ல தம் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள். இளைஞர்களே அதிகம் காணப்படுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் பங்கேற்கிறார்கள். தலைமை என்று எதுவுமில்லை. ஆனால் முக்கியமான ஒரு வேறுபாடு, வால் ஸ்ட்ரீட் போராட்டத்தின் நோக்கம், தலைமை மாற்றம் அல்ல என்பதுதான். இவர்கள் எதிர்ப்பார்ப்பது சீர்திருத்தத்தை மட்டுமே. ஆனால், அதையும் கூட அவ்வளவு சுலபத்தில் செய்து விட மாட்டோம் என்கிறது அமெரிக்கா. - நன்றி புதிய தலைமுறை |
Filed under: Abu Adhil
லிபியா-கதாஃபி : ‘போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்’
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல்… இராணுவப்புரட்சி மூலம் சண்டையின்றி இரத்தமின்றி ஆட்சியை கைப்பற்றிய…
கதாஃபி…
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
‘தான் மட்டுமே என்றும் லிபியாவை ஆளவேண்டும்’ என நினைக்காத வரை..!
கதாஃபி…
(லிபிய மக்களுக்கு)
மிகவும் நல்ல ஆட்சியாளர்தான்..!
தந்நாட்டு மக்களை அநியாயமாக கொன்று குவித்து கொலைகாரன் ஆகாதவரை..!
இந்த லிபிய மக்கள் கடாஃபியின் கீழ் எப்படி வாழ்ந்தார்கள்..? ஆட்சியாளரான கடாஃபியின் ஆட்சி எப்படி இருந்தது..? அது பற்றி மேற்கத்திய சியோனிச ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை இனியும் நாம் அறியாதிருக்க கூடாது சகோ..! அவற்றில் சில உங்கள் ஆச்சர்ய பார்வைக்கு..!
- ‘ஒவ்வொரு லிபியரிடமும் ஒரு வீடு இருந்தாக வேண்டும்’ என்று அறைகூவி, அப்படியே அரசின் மூலம் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தும் வந்தார்..! எப்படி..? புதிதாக திருமணம் ஆன தம்பதியருக்கு அரசு மொய் வைக்கும்..! எவ்வளவு தெரியுமா..? 60,000 லிபிய தினார் (50,000 அமெரிக்க டாலர் = அதாகப்பட்டது… சுமார் 24 லட்ச ரூபாய்ங்க சகோ..!) எதுக்காம்..? அவர்களுக்கான ஒரு வீடு வாங்க..!
- மதுவை தடை செய்த கடாஃபி, லிபியாவில் கல்வி முற்றிலும் இலவசம் என்றார். அவர், 1969-ல் ஆட்சியை கைப்பற்றியபோது 25 % இருந்த லிபிய நாட்டின் கல்வி கற்றோர் எண்ணிக்கை… இப்போது… 83 %..! நாட்டின் மக்கள் தொகையில் 25% லிபியர்கள் பல்கலைக்கழக பட்டம் பயின்றவர்கள்..!
- லிபியருக்கு தேவைப்படும் கல்வியோ மருத்துவமோ லிபியாவால் தர இயலவில்லை எனில், லிபிய அரசு செலவில் இலவசமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்து அவை தரப்படும்..! அதுமட்டுமா..? அகாலத்தில்… மாசத்துக்கு 2,300 அமெரிக்க டாலர் (சுமார் 1,12,000 ரூபாய்) பயணப்படியாகவும் அவர்களுக்கு அளிக்கப்படும்..!
- லிபியாவில் படித்து பட்டம் பெற்ற ஒரு லிபிய பட்டதாரிக்கு ‘வேலை இல்லை’ எனில், அந்த பட்டப்படிப்புக்கு தக்க வேலை கிடைத்தால் என்ன சம்பளம் அவருக்கு கிடைக்குமோ, அது அப்படியே அரசின் கஜானாவிலிருந்து அந்த வேலை இல்லா பட்டதாரிக்கு ‘படி’-யாக வந்து சேர்ந்துவிடும்..!
- EB பில் என்றால் என்னவென்றே லிபியர்களுக்கு தெரியாதாம்..! லிபியாவில் தடை இல்லாத மின்சாரம் உண்டு… முற்றிலும் இலவசமாக..!
- மாதம் தோறும் அரசு ரேஷன் கடையில் பொருட்கள் மிகக்குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த சலுகை குடிமகன்களுக்கு மட்டுமல்ல..! வெளிநாட்டிலிருந்து அங்கே சென்று வேலை பார்ப்பவர்களுக்கும்..! (இத்தகவல்- லிபியாவில் வேலை செய்துவிட்டு பின்னர் என் நிறுவனத்தில் வேலை செய்த பொறியாளர் திரு.D.S.V.பிரசாத் சொன்னது)
- லிபியாவின் எந்த வங்கியிலும் கடன் பெற்ற லிபியரிடம் அந்த கடனுக்கான வட்டியே வசூலிப்பது கிடையாது..! அசலை மட்டும் அவர் திருப்பித்தந்தால் போதும்..!
- ஒரு லிபியர் விவசாயம் செய்ய நாடினால்… ‘வாங்க வாங்க’ என்று அரசே வரவேற்று அவருக்கு தேவையான நிலம் தந்து, பண்ணை வீடு தந்து, விதை தந்து, உரம் தந்து, பாசன வசதி தந்து… ம்ம்ம்… எல்லாமே இலவசம்ங்க சகோ..!
- ஒரு லிபியர் கார் வாங்க எண்ணினால்… என்ன வகை காராக இருந்தாலும் சரி… உடனே அரசு 50% பில்லை கட்டிவிடும்..!
- அப்போ…பெட்ரோல் விலை..? ஹி… ஹி… லிட்டர் ஆறேமுக்கால் ரூபாய்ங்க சகோ..! (அட..! சவூதியை விட முப்பது பைசா விலை குறைவா இருக்கே..!)
- லிபியாவுக்கு பிறநாட்டிலோ… IMF-இலோ எங்குமே கடனே இல்லையாம்..! ஆனால், 150 பில்லியன் அமெரிக்க டாலருக்கு லிபியாவுக்கு வரவேண்டிய பணம்தான் வெளியே நிற்கிறதாம்..!
- ஆட்சியை கைப்பற்றியவுடனேயே, லிபியாவில் இருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய விமானதளத்தை மூடச்செய்து, எண்ணெய் கம்பெனிகளை பன்னாட்டு ஏகாதிபத்திய கம்பெனிகளின் கரங்களிலிருந்து பறித்து அரசின் பங்குகளை உயர்த்தி அவற்றை லிபிய அரசு வசமாக்கினார்., கடாஃபி. அதிலிருந்து உலகிற்கு விற்கின்ற எண்ணெயில் ஒவ்வொரு லிபியருக்கும் கூட அவருக்கு உரிய பங்கு உண்டு என்றார். அது மக்களின் தனி வங்கிக்கணக்கில் சேர்ந்து விடும்.
- ஒரு தாய் ஒரு குழந்தையை ஈன்றேடுத்தால் அவருக்கான லிபிய அரசின் சன்மானம் சுமார் 2.5 லட்சம் ரூபாய்..!
- 40 ஸ்லைஸ் வெட்டுத்துண்டுகள் போடப்பட்ட ஒரு மிகப்பெரிய பிரட் பாக்கெட் விலை ஏழு ரூபாய் முப்பது காசுதான் லிபியாவில் விற்கிறது..!
- நீரற்ற வறண்ட நாடான லிபியாவின் முழுப்பாலைவன மக்களும் தண்ணீர் பெற வேண்டி… உலகிலேயே மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம் (Great Man-Made River project) நிறைவேற்றியவர் கடாஃபி மட்டுமே..!
![]() |
| கடாஃபி..! ஒருகாலத்தில் லிபிய மக்களின் புரட்சித்தலைவர்..! |
இப்பேர்பட்ட சிறந்த ஆட்சியாளர்தான்… சிறந்த ஆட்சியாளராக இருந்தவர்தான் கடாஃபி..! எகிப்தின் ஹோஸ்னி முபாரக் போலவோ, டுனிசியாவின் பென் அலி போலவோ நிர்வாகத்திறமை அற்றவரோ… ஊழல்வாதியோ அல்லர்..! இவர்களுக்கு இடையே உள்ள ஒரே பெரிய வித்தியாசம்… அமெரிக்க-பிரிட்டிஷ்-ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியத்துக்கு முழுமையாக எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் அடிபணியாதது மட்டுமே..!
இவரைப்போயா… இவ்வளவு சிறந்த சர்வாதிகாரியையா(!?) லிபிய மக்கள் எதிர்த்தனர்..? அல்லது எதிர்த்த புரட்சியாளர்களை கொல்லவும் அனுமதித்தனர்..? ஆமாம்..! ஏன்..?
லிபிய புரட்சியாளர்கள்…
அவர்களும் மிகவும் நல்லவர்கள் தான்..!
ஒரு கொலைகார சர்வாதிகாரியை கொல்ல இன்னொரு கொலைபாதக நேட்டோ பயங்கரவாதிகளின் உதவியை ஒப்புக்கொள்ளும் வரை..!
கதாஃபி…
(அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய பயங்கரவாதிகளுக்கு)
மோசமான ஆட்சியாளர் ஆனார்..! எப்போது..?
"லிபிய மற்றும் அரபுலக எண்ணெய்க்கான வர்த்தகம் இனி அமெரிக்க டாலரில் அல்ல… தங்கத்தில் தான் இருக்க வேண்டும்" என்று சொல்லும் வரை..!
முன்னர் நடந்த இதையும் கூட… மறந்திருக்க மாட்டீர்கள் சகோ..!
அன்று… அமெரிக்காவின் நண்பனாக இருந்து அவர்களின் ஆயுதங்கள் மூலம் ரஷ்ய ஆயுதங்கள் வைத்திருந்த ஈரானுடன் போர் புரிந்த இராக்கின் அதிபர் சதாம் ஹுசேன், தன் எண்ணெய் வெறியால் பின்னர் குவைத்தை ஆக்கிரமித்ததால் அமெரிக்காவின் எதிரியானார்..!
விளைவு..?
அமெரிக்க "நவீன ஆயுதங்களுக்கும்", அமெரிக்க "அதிநவீன ஆயுதங்களுக்கும்" இடையே வளைகுடா போர் மூண்டது..! அதன் முடிவில், குவைத் விடுதலை அடைந்தவுடன், அந்த ஆத்திரம்… "இனி இராக்கிய எண்ணெய் பரிவர்த்தனை புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ‘ஈரோ’ நாணயத்தில்தான் நடைபெறும்" என்று சதாம் ஹுசேன் அறிவித்த பின்னர், "WMD (Weapons of Mass Destruction) வைத்திருக்கிறார் சதாம் ஹுசேன்" என்று பொய்கூறி இராக்கில் நுழைந்ததே அமெரிக்க பிரிட்டிஷ் படைகள்..! (ராஜீவ் சந்திரசேகரனின் Green Zone என்ற ஹாலிவுட் படம் பாருங்கள் சகோ..!)
‘ஈரோ’விற்கே அந்த கதி என்றால்… கடாஃபி, தங்கம் கேட்டால்..? இதோ… ஆப்ரிக்காவில் ஒரு இராக்/ஆப்கானிஸ்தான்… உருவாக்கப்படுறது..! முன்னர் தாலிபானிடம் ரஷ்ய ஆதரவு ஆப்கானிய நஜிபுல்லா அரசை எதிர்த்து போரிடச்சொல்லி டன் டன்னாக வெடி பொருட்களையும் நவீன ஆயுதங்களையும் ஒசாமா மூலம் கொண்டு போய் ஆப்கானில் கொட்டி… நடுத்தெருவில் நஜிபுல்லாவை தூக்கில் போடவைத்தது போலவே… இப்போதும் ஆயுதங்களை கொட்டியுள்ளார்கள் லிபியாவில்..! அதேபோல நடுத்தெருவில் அடிபட்டு, உதைபட்டு, இழுபட்டு, சுடப்பட்டு கொல்லப்பட்டார் கடாஃபி..!
![]() |
| ஆட்சியாளர்களுக்கு ஒரு படிப்பினையாக…! |
சில மாதங்களுக்கு முன்னர் நிராயுதபாணியாக தெருவில் இறங்கி புரட்சி செய்த குடுகுடு கிழவன் முதல், நடக்கத்தெரிந்த சிறுவன் கைகளில் எல்லாம் இன்று புதுப்புது நவீனரக ஆயுதங்கள், வெடிகுண்டுகள் எல்லாம் எப்படி முளைத்தன..? இங்கே photo gallery பாருங்கள்.
மகிழ்ச்சியில் குதித்து குதித்து வானத்தை நோக்கி "டம்… டம்" என்று சுடுகிறார்கள்..! அதில் ஒரு அதிபயங்கர துப்பாக்கி குண்டு வானில் சென்று வெடிக்கிறது..!!! என்னவொரு பயங்கர ஆயுதம்..!!! இந்த குண்டை உடலில் ஒருவன் வாங்கினால் பிழைக்க வழியே இல்லையே சகோ..? யு-ட்யூபில் அணிவகுக்கும் ஆதாரங்கள் இவை..!
Libya Rebels had NATO Weapons from Day 1 – Brand New
இவைகளை எல்லாம் தயாரித்து அன்போடும் பாசத்தோடும் நிராயுதபாணியாக நின்ற லிபியர்கள் கைகளில் அளித்த அந்த அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இப்போது அவற்றை திரும்பியா வாங்கிக் கொள்வார்கள்..?பதிலுக்கு அந்த பயங்கரவாதிகள் இந்த கொலைகார புரட்சியாளர்களிடம் பிரதியுபகாரமாக கச்சா எண்ணெய் அல்லவா கேட்பார்கள்..? இதோ… இப்போதே ஆரம்பித்தும் விட்டார்களே..!
இதனை லிபியர்கள் எதிர்த்தால்..? அப்போது, தங்கள் கைகளில் இருக்கும் அந்த ஆயுதங்களை லிபியர்கள் இனி என்னதான் செய்வார்கள்..? அடப்பாவமே..! இதோ… ஆப்ரிக்காவில் இன்னொரு ஆப்கன்/இராக் உருவாக்கப்பட்டு விட்டதா..!? இனி அமைதி காக்கும் நேட்டோ கூட்டுப்படைகள் லிபியாவில் நிரந்தரமாக தங்கிவிடுமா..?
லிபியர்கள் தங்கள் தலையில் அள்ளிப்போட்டுக்கொண்டது அமெரிக்க மண் அல்ல… அவர்களின் மலம்..! எத்தனை முறை குளித்தாலும் பல வருடங்கள் ஆகுமே… பயங்கரவாதம் எனும் அந்த துர்நாற்றம் நீங்கி… அமைதி எனும் அந்த வாசனை மீண்டும் வீச..!
எகிப்திலும் துனிசியாவிலும் அமெரிக்க நேட்டோ பயங்கவாதிகள் நுழையாததற்கு அங்கே லிபியா மாதிரி எண்ணெய் வளம் இல்லாமை மட்டுமே காரணம் அல்ல சகோ..! அந்தந்த நாட்டு அறிவுடைய ராணுவங்களும் மக்களும்தான் காரணம்..!
அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட பென் அலியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை துனிசியாவின் ராணுவம் ஏற்கவில்லை.
அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் மீது ஏவப்பட்ட ஹோஸ்னி முபாரக்கின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை எகிப்தின் ராணுவமும் ஏற்கவில்லை.
அதனால்… அங்கே மக்கள் புரட்சியும் வெற்றிபெற்றது..! சர்வாதிகார ஆட்சியாளர்களும் உயிரோடு நாட்டைவிட்டு தப்பித்தார்கள்..!
ஆனால், லிபியாவின் ராணுவம் கடாஃபியின் கொலைபாதக அடக்குமுறை கட்டளையை ஏற்றது..! நிராயுதபாணியாக நின்ற புரட்சியாளர்களையும் பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி அநியாயமாக சுட்டுக்கொன்றது..! இதன் விளைவுதான் பழிதீர்க்க பொதுமக்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் ஆயுதங்கள் தேவைப்பட்டது.
திடுமென அவை அவர்களின் கைகளில் விதம் விதமாக தரப்பட்டன..! வெடித்தன..! பழிவாங்கும் உணர்ச்சிக்கு முன்னால்… கற்ற கல்வியோ… அனுபவித்த வாழ்க்கையோ… எதுவுமே அவர்களை சிந்திக்க வைக்கவில்லை..! லிபியர்களின் அறிவு அப்போது ஏனோ வேலை செய்யவில்லை..!
அதனால்… கடாஃபி,
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் ‘கொல்லவைக்கப்பட்டார்’…!
அல்லது…
புரட்சியாளர்களால் நேரடியாக கொல்லப்பட்டார்..!
அல்லது…
அமெரிக்க நேட்டோ பயங்கரவாதிகளால் மறைமுகமாக கொல்லப்பட்டார்..!
பின்வருவன எல்லாமே இனி… மற்ற சர்வாதிகாரிகளுக்கு சிறந்த படிப்பினைகள்..!
- தான்மட்டுமே நாட்டை ஆளவேண்டும் என்று எண்ணாதீர்கள்..!
- என்னதான் சிறப்பாக ஆட்சி செய்தாலும், தம்மைவிட வேறொருவர் இன்னும் சிறப்பாக ஆட்சி செய்வார் என்று நம்புங்கள்..!
- மக்களில் ஒரு சாரார் தம்மை- தம் ஆட்சியை எதிர்த்தால்… பேசாமல் அதையே ஒரு வழக்காக நீதி மன்றத்தில் வைத்து, ஆட்சியாளர் குற்றவாளிக்கூண்டில் ஏறி தம் தரப்பு வாதங்களை வைத்து இருவருக்கும் பொதுவான நம்பகமான நீதிபதி கொண்டு அமைதியான முறையில் தீர்வு காணுங்கள்..! அதை நேரடி ஒளிபரப்பில் நாட்டு மக்களுக்கு காண-கேட்க அளியுங்கள்..!
- எக்காரணம் கொண்டும் எதிர்க்கும் பொதுமக்கள் மீது கொலைபாதக அடக்குமுறை செலுத்தி கொன்று குவிக்காதீர்கள்..!
- தன்னை சுற்றி எப்போதும் பெண்களை (பாதுகாவலர்கள் எனும் பெயரில்) வைத்துக்கொண்டு ஆடம்பரமாகவும் அசிங்கமாகவும் மக்களுக்கிடையே அநீதி இழைத்துக்கொண்டு வாழ்ந்தால்… மக்கள் உங்களை அடியோடு வெறுத்து விடுவார்கள்… நீங்கள் எவ்வளவுதான் சிறந்த ஆட்சியாளர் என்றாலும் கூட..!
அடுத்து…
இன்னொரு கேடுகெட்ட மோசமான படிப்பினை ஒன்றும் உள்ளது..!
- எண்ணெய் வளம் கொண்ட ஆட்சியாளர்களின் மண்டை மயிர்கூட இனி அமெரிக்க – பிரிட்டிஷ் – ஐரோப்பிய ஏகாதிபத்திய நலனுக்கு எதிராக அவர்களின் விருப்பத்துக்கு எதிராக ஆடிவிடக்கூடாது..! அப்படி மீறி ஆடினால்… அந்த தலையே கொய்யப்படும்..! அல்லது… கொய்யவைக்கப்படும்..!
மக்களே..! உலகின் பயங்கரவாதங்களுக்கு எல்லாம் மூலகர்த்தாவான… ஆயுதவியாபாரம் செய்யும் அமெரிக்க -ஐரோப்பிய- சியோனிஸ நேட்டோ பயங்கரவாதிகளை நாம் எப்போது இனங்கண்டு கொள்வது..? அமெரிக்கர்களே இவ்வுண்மையை புரிந்து கொண்டு "WALL STREET ஆக்கிரமிப்பு போராட்டம்" என்று ஆரம்பித்து விட்டார்களே..!
கடாஃபியின் இறப்புக்கு பின்னர், அவரின் ஆட்சி பற்றியும் நிகழ்கால லிபியா பற்றியுமான ஒரு ‘அலசல்’ அல்லது அதுபற்றியான ஒரு ‘போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்’, முற்றும்..!
Sender : அஸ்கர்,மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
Filed under: Abu Adhil
பணம் பாதாளம் பாய்ந்த பஞ்சாயத் எலெக்சன் !
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததும் மகாத்மா காந்தி, ‘அரசியல் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது, மாறாக பொருளாதார சுதந்திரமும் அடைய வேண்டும்’ என்றார். அவர் கனவு கண்டது சிலர் சொல்வதுபோல ராம ராஜ்யமில்லை, மாறாக கிராம ராஜ்யம் பெற வேண்டும் என்றார். அதாவது கிராமம் தன்னிலை அடைய வேண்டும் என்றார். செல்வம் ஒரு சிலரிடமே பிரமீடு போன்று குவியாது, கடல் போன்று பறந்து அனைவரும் பலன் பெற வேண்டும். இஸ்லாத்திலும் வறியவர் மேன்மைப்பட சொத்து வரி என்ற சக்காத், சதகா, பித்ரா போன்ற பொருளாதார உதவிகள் செல்வந்தர் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. மகாத்மா கூட கலிபா ஓமர் போல ஜனநாயக நல்லாட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார்.
சங்க தமிழ் இலக்கியங்களில் கிராமங்களில் எவ்வாறு ஜனநாயகம் தளிர்த்திருந்தது என்று விரிவாக செல்கிறது. சோழ மன்னன் ராஜேந்திரன் காலத்தில் கிராமத்தில் குடக்கூலி முறையில் பஞ்சாயத் உறுப்பினர்கள் தேர்தெடுத்து கிராம நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று அனைத்துக் கிராமங்களும் முன்னேற தங்களால் தேர்ந்தேடுக்கும் பிரதிநிதிகளால் நிர்வாகம் நடத்தும். சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 40 இன் படி மெட்ராஸ் கிராம பஞ்சாயத் சட்டம் 1959 இயற்றப்பட்டது. அதில் 500 பேர் மற்றும் அதற்கு அதிகமாக வாழும் மக்களைக் கொண்டது ஓர் கிராமப் பஞ்சாயத்தாக மற்றும் பஞ்சாயத் யூனியன் ஆக அறிவிக்கப்பட்டது. இந்திய மக்கள் 80 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்வதால் அவர்கள் ஜனநாயகத்தின் பயனை உண்மையாக சுவைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆசைப் பட்டார். அதன் விளைவாக அரசியல் சட்டம் 73 மற்றும் 74 திருத்தங்கள் கொண்டு வரப் பட்டது. அந்த திருத்தங்களின் விளைவு கிராமப் பஞ்சாயத், பஞ்சாயத் யூனியன், மாவட்ட பஞ்சாயத் போன்ற மூன்று அடுக்கு பஞ்சாயத்து அலுவலகங்கள் தோன்றின.
2006 ஆம் ஆண்டு உள்ளாச்சித் தேர்தலுக்குப் பின்பு 17, 19.10.2011 ஆகிய நாட்களில் இரண்டு அடுக்கு தேர்தல் வந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய பலத்தினைக் காட்டுவதிற்கு தனித்தனியே போட்டியிட்டன. அதேபோல் சமுதாய அரசியல் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. சில சமுதாய இயக்கங்களும், உதுரி சமுதாய அரசியல் கட்சிகளும் வலியச்சென்று பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. சென்ற 2011 மே மாதம் நடந்த தேர்தலில் சில சமுதாய அரசியல் கட்சிகளுடன் வந்து சேர்ந்தவர்கள் திரும்பவும் தாங்கள் முன்பு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிக்கே திரும்பவும் காவடி தூக்கச் சென்று விட்டன.இந்தத் தேர்தலில் போட்டியிடுவதிர்க்காக பல லகரம் கொடுத்துத்தான் அரசியல் கட்சிகளிடம் சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள் போட்டியிட சீட்டு வாங்கினார்களாம். அப்படி சீட்டுக் கிடைக்காதவர்கள் முறையான அரசியல் கட்சி வேட்ப்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டிபோட்டர்களாம். போட்டிப்போடுவது ஒன்றும் புதிதல்லத்தான். ஆனால் முஸ்லிம்கள் ஊரில் பணம் பாதாளம் வரை பாயும் என்பதினை இந்தத் தேர்தல் காட்டிவிட்டதாம்.
பல இடங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் சுடச்சுட பணியாரத்திளிருந்து, கொத்திப் போட்ட முட்டப் புராட்டா,சுவையான பிரியாணியில் தொடர்ந்து, மப்பேற்ற மேன்சன் ஹவுஸ் பிராந்தியினை வயிறு முட்ட ஏத்திவிட்டு, சுருட்டிய ரூபாய் 500 நோட்டினை காதில் வைத்துக்கொண்டு,சுருள் சுருளா புகை விட்ட கோல்ட் பிளாக் சிகரெட்டினை புகைத்துக் கொண்டு, வீட்டுக்குச் சென்ற காட்சி எல்லாம் ஜெக ஜோதியாக இருந்ததாம். சில ஊர்களில் காலையில் பற்ற வாய்த்த அடுப்பு நடு இரவு வரை பற்றி எரிந்து கொண்டு இருந்ததாம். இவை எல்லாம் சாதாரண வார்டு தேர்தலுக்குக் கூட இருந்ததாம். ஒரு கடல்கரை சமுதாய ஊரில் இரு தரப்பிதனரிடையே சண்டை உச்சக்கட்டத்தில் போய் உன்னை ஒழித்துக்கட்டுகிறேன் பார். உன் வண்டவாளங்களை எல்லாம் காட்டிகொடுக்கிறேன் பார் என்று ஒலிப் பெருக்கி மூலம் சவால் விட்டார்களாம் நமது சமுதாய சகோதரர்கள் என்றால் அந்த ஊரில் வாழும் மற்ற சமுதாயத்தினர் எப்படி எல்லாம் மகிழ்ச்சி அடைந்து இருந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். சமுதாயதினவரை தோற்கடிக்க வேறு வெளி ஆட்களை நாம் தேட வேண்டாம். மாறாக நமக்குள்ளே இருக்கின்றார்கள் என்று அரபு மற்றும் ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஏற்படுகின்ற கொந்தளிப்புகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அழிந்த குட்டையில் மீன் பிடிக்கவா தெரியாது அன்னியருக்கு?அதன் விளைவினை முஸ்லிம்கள் அதிகமுள்ள மேட்டுப் பாளைய நகராட்சியில் நாம் பி.ஜே.பி. வேட்பாளரிடம் தோற்கடிக்கப் பட்டோம் என்றால் கேவலமாகத் தெரியவில்லையா?
அப்படி நடந்த தேர்தலில் நாம் சாதித்தது என்ன? ஒரு சில வார்டு தேர்தலிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும் தான் வெற்றிப் பெற்றுள்ளோம். ஏன் இந்த வெக்கக் கேடு. ஏழு சதவீதம் உள்ள நாம் இணைந்து ஒரு கூட்டமைப்பு ஏற்ப்படுத்தி தேர்தலில் நமக்கென்ற ஒரு தனி அங்கீகாரம் பெற முடியாதா? இன்று பெரும்பாலான சமுதாய இயக்கங்களில் இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். அந்த இளைஞர் பட்டாளத்தினை ஒன்று திரட்டி, ஓர் அணியினை உருவாக்கக் கூடாது? பலர் இணைய தளங்களில் அதற்க்கான கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஆனால் பூனைக்கு மணி கட்ட யாரும் முன் வரவில்லையே ஏன் என்று உங்களுக்கு ஆச்சரியமாகத் தோணவில்லையா? காரணம் அந்த சமுதாய அரசியல் கட்சிகளிடம் இருக்கின்ற சிலரின் வரட்டுக் கௌரவமே காரணம் என்றால் மிகையாகாது. ஆகவே பொய்யான வரட்டுக் கௌரவத்தினை விட்டு சமுதாய நலன் கருது சமுதாய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றினை மாநிலத்திலும், மாவட்டத்திலும், நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஏற்ப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். நாம் அடுத்துவர்களுக்கு வெண்சாமரம் இனி மேலும் வீசத் தான் வேண்டுமா, கஷ்டப்பட்டு சம்பாதித்த நாலு காசுகளை மார்கத்துக்குப் புறம்பான காரியங்களில் நான் முன்பு குறிப்பிட்டதுபோல வீண் செலவு செயத் தான் வேண்டுமா, அதனை ஏழை எளிய சமுதாய மக்களுக்கு வழங்கினால் என்ன என்று சிந்திக்க வேண்டாமா சொந்தங்களே?
Filed under: Abu Adhil
| கத்தாஃபி:வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…
வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து 1951-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறிய லிபியாவின் எண்ணெய் வளங்களை மேற்கத்திய நாடுகள் கொள்ளையடித்த போது நிம்மதியிழந்த லிபியாவின் மக்கள் கண்டெடுத்த தீர்வுதான் முஅம்மர் கத்தாஃபி. ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல அதிகாரத்தின் வெறி தலைக்கேறி சொந்த மக்களின் உள்ளங்களிலிருந்து அகன்ற கத்தாஃபியின் சிம்மாசனம் அரபு நாடுகளில் உருவான முல்லைப்பூ புரட்சியில் 1942 ஜூன் 7-ஆம் தேதி கடலோர நகரமான ஸிர்த்தில் சாதாரண குடும்பத்தில் கத்தாஃபி பிறந்தார். ஆக்கிரமிப்பு சக்திகளிடம் அடிபணியாத குணம் கத்தாஃபிக்கு இயற்கையிலேயே உண்டு. பெங்காசி பல்கலைக்கழகத்தில் புவியியலில் பட்டப்படிப்பை மேற்கொண்ட போதிலும் 1961-ஆம் ஆண்டு ராணுவ அகடாமியில் சேர்ந்தபொழுது 19 வயதான கத்தாஃபியின் வரலாறு திரும்பியது. எண்ணெய் வளத்தை கண்டறிந்த பிறகு ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் வளமிக்க நாடாக மாறிய லிபியாவில் மன்னர் இத்ரீஸின் பலகீனத்தை மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு சாதகமாக மாற்றிய வேளையில், கத்தாஃபி தனது கீழ் செயல்படும் அதிகாரிகளின் துணையுடன் 1969-ஆம் ஆண்டு இரத்தம் சிந்தாமல் ராணுவ புரட்சியின் மூலம் தனது 27-வது வயதில் லிபியாவின் அதிபரானார். எகிப்தின் கமால் அப்துல் நாஸரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கத்தாஃபி அரபு தேசியத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக மாறினார். அரபு நாடுகளில் போராளிக் குழுக்களுக்கும், உலகின் புரட்சிக் குரல்களுக்கும் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் உள்ளங்களில் கத்தாஃபி இடம் பிடித்தார். இதேக்காரணத்தால்தான் அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் கத்தாஃபியின் லிபியாவை தீவிரவாதிகளின் புகலிடம் என அழைத்தன. வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்ட கத்தாஃபியின் பின்னால் நாட்டு மக்கள் அணி திரண்டனர். ஏகாதிபத்தியத்திற்கும், கம்யூனிசத்திற்கும் எதிராக அரபு தேசியவாதம் என்ற திட்டத்திற்காக முயன்று பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். சிறிய நிறுவனங்களுக்கு மட்டும் தனியார் கட்டுப்பாட்டை வழங்கிவிட்டு பெரிய நிறுவனங்களை அரசுடமையாக்கினார். பனிப்போர் காலக்கட்டத்தில் அணிசேரா நாடுகளின் குரலாக விளங்கினார். நாட்டின் அரசியல் சட்டதை முற்றிலும் மாற்றி அமைத்தார். எகிப்தும், இஸ்ரேலும் 1978-ஆம் ஆண்டு உருவாக்கிய கேம்ப் டேவிஸ் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பிரபலமானவர் கத்தாஃபி ஆவார். ஆனால், வெளிநாட்டு கொள்கைகளில் பின்னர் மாற்றத்தை ஏற்படுத்திய அவர் அரபு உலகிலிருந்து மாறி ஆப்பிரிக்க ஐக்கியத்தில் கவனத்தை செலுத்தினார். அத்துடன் சோவியத் யூனியனுடனான உறவை வலுப்படுத்தினார். சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கத்தாஃபி அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் சில சமரசங்களுக்கு தயாரானார். 1986-ஆம் ஆண்டு பெர்லினில் இரவு கிளப்பில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் லிபியாவிற்கு பங்கிருப்பதாக குற்றம் சாட்டி அமெரிக்கா திரிபோலியிலும், பெங்காசியிலும் நடத்திய தாக்குதலில் 35-க்கும் மேற்பட்ட லிபியா மக்கள் கொல்லப்பட்டனர். ஸ்காட்லாந்தில் லாக்கர்பியில் விமானத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 270 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலோர் அமெரிக்கர்களாவர். முதலில் இத்தாக்குதலுக்கான பொறுப்பை லிபியா மறுத்தாலும் பின்னர் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி டாலருக்கும் அதிகமான தொகையை இழப்பீடாக வழங்கியது. அதன் பின்னர் பெரும் ஆயுதங்களை அழிப்பதாக கத்தாஃபி அறிவித்தார். மீண்டுமொரு ராணுவ புரட்சி நடந்துவிடுவதற்கான வாய்ப்பை உணர்ந்த அவர் ராணுவத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தினார். மக்கள் எழுச்சிப் போராட்டங்களை அடக்கி ஒடுக்கினார். ஊடகங்களுக்கு தடை ஏற்படுத்தினார். அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்தார். 1996-ஆம் ஆண்டு நடந்த சிறைக் கலவரத்தில் கத்தாஃபியின் ராணுவம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளை கொலை செய்தது. மனம் வெறுத்துப்போன லிபியாவின் மக்கள் துனீசியா, எகிப்து கண்டறிந்த முல்லைப்பூ புரட்சியை நெஞ்சில் சுமந்து கத்தாஃபிக்கு எதிராக போராட களமிறங்கினர். ஆனால், அதனை கடுமையாக எதிர்கொண்ட கத்தாஃபி ராணுவ அடக்குமுறையை கையாண்டார். எதிர்ப்பாளர்களுக்கு உதவுகிறோம் எனக்கூறி லிபியாவின் எண்ணெய் வளத்தின் மீது குறிவைத்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நேட்டோ படை லிபியாவின் மீது தாக்குதலை தொடர்ந்தது. எதிர்ப்பாளர்கள் நேட்டோ படையின் உதவியுடன் கத்தாஃபி ராணுவத்தை எதிர்கொண்டனர். இரு படையினருக்கும் பின்னடைவும், வெற்றியும் மாறி மாறி வந்த பொழுதிலும் பின்னர் பெரும்பாலான நகரங்களை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றினர். அவ்வேளையிலும் கூட சரணடையமாட்டேன் இறுதிவரை போராடுவேன் என முழக்கமிட்டார் கத்தாஃபி. பல மாதங்கள் நீடித்த போராட்டத்தின் முடிவில் பிறந்த நகரமான ஸிர்த்தில் வைத்து மரணம் வரை போராடுவேன் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றி மரணத்தை தழுவியுள்ளார் கத்தாஃபி. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய வீரர் என துவங்கி கடைசியில் மக்களின் வெறுப்பிற்குரிய தலைவராக மாறிய கத்தாஃபியின் பிற்கால வாழ்க்கை நம் உள்ளங்களில் கசப்புணர்வுகளை ஏற்படுத்தும் வேளையில் துவக்க கால வாழ்க்கையில் ஏகாதிபத்தியத்தை தீரமுடன் எதிர்த்த கத்தாஃபியின் வீரமும் பசுமையாக பதிந்துள்ளதையும் மறுக்க முடியாது. — THOOTHUONLINE |
Filed under: Abu Adhil
கோட்சே காலம் முதல் இன்று வரை
ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின் திரைமறைவுச் சதிகள்-கொலைகள்
சங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங் களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:-
அண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன. வேதனை!வேதனை!! வெட்கம்!!
இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.
பெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முசுலிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது! ஊடகங்கள் கைகளில் இருக்கும் காரணத்தால்…
ஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் – கண்டுபிடிப்புகள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முசுலிம்கள்மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன!
இதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மை மக்களான முசுலிம்கள்மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும். பார்ப்பனர்கள் – ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இது போன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.
காந்தியாரைக் கொன்ற கோட்சே!
1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பார்ப்பனன் என்ன செய்தான்? தனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான்; முசுலிம் களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்!
காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று பழி சுமத்தி,பிரச்சாரம் செய்து, இந்துக்களை முசுலிம்கள்மீது மோதவிடும் சூழ்ச்சிதானே இது?
காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல – ஒரு இந்துப் பார்ப் பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச் சத்துக்குக் கொண்டு வந்தனர். அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முசுலிம்கள் தாக்கவும் பட்டனர்.
சதுமுகையில்…
2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.
ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால்,அவ்வூர் இந்து முன்ன ணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17)மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.
தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இரு வரும் ஒப்புக்கொண்டனர். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர் களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).
தென்காசியில்…
3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது.
இந்து – முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர்.
தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண் டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப் பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்துநொறுக்கப்பட்டன.
நோக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதே!
இதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவல கத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.
குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம்கொடுத்தனர்.
கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளைஉடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயா ரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.
கான்பூரில் நடந்தது என்ன?
4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.
பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவை வெடித்து உடல் சிதறிப் போனார்கள்.
மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.
வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள் களும்கைப்பற்றப்பட்டன.இராணுவத்தில் பயன்படுத்தப்படக் கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை!
வரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்படவேண்டிய முசுலிம் களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள்பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.
மகாராட்டிரத்தில்…
5. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதேபோல, குண்டு களைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர் (4.5.2006).
பெண் சாமியார் சிக்கினார்
6. மகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008). ஆறு இசு லாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது. டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.
புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார். வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்!
படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர்ப் பிரிவான ஏபிவிபியில் (ஹக்ஷஏஞ) தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்!
பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர். இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத்தில் பணி யாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்;இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்யஇராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின் றனர்.
குல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மய்யம் ஒன்றினை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி?அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளையெல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.
பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை நுழைத்தனர். விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதேவெளிப்படுத்தியதுண்டு.
பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள, தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்த தையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் – வெடி குண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதி லிருந்து தெரிந்துகொள்ளலாமே!
மகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்பு களின் பின்னணியில் சங் பரிவார்க் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.
இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங் களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையைஅரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.
சூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத் தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம்நியாயமானதே!
சங் பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள்அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. வழக்கம்போல் எங்கள்மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர்.
இந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மையினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை. இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி – படுகொலைகள்.
நடவடிக்கைகள் தேவை
மத்திய – மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும்விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.
சென்னை
28.10.2008
தலைவர்,
திராவிடர் கழகம்.
குறிப்பு: இவ்வறிக்கை துண்டறிக்கையாகவும் கிடைக்கும்; வாங்கி ஊர்தோறும் பரப்புங்கள்.
Source-http://files.periyar.org.in/viduthalai/
- ABDUL RAZAK CM
Filed under: Abu Adhil
சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். வெக்கமாயிருக்கு விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ….
கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் இந்து தீவிரவாதம். இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் குறித்து மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் அந்தப் பெருமைக்குரியவர், சாத்வி என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸின் பெண்கள் அமைப்பான துர்கா வாகினியில் பயிற்சி பெற்ற பெண் சாமியார். நாட்டின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து சேரும்முன்பே, வடநாட்டு இந்துத் தீவிரவாதிகளான அத்வானி, ராஜ்நாத் சிங், மோடிகள் முதல் தமிழக இராம கோபாலன் வரை "இஸ்லாமிய தீவிரவாதம்" என்று கூச்சல் போட்டு, ஒட்டுமொத்த மக்களையும் விசாரணை அமைப்பையும் திசை திருப்பிக் கொண்டிருந்தனர். அவர்களது தலையில் பேரிடியாக இறங்கியதுதான் மாலேகோன் குண்டு வெடிப்பு தொடர் விசாரணைகள். எப்பொழுதும்போல் இந்தக் குண்டுவெடிப்பையும் "சிமி, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புகள்தான் நடத்தின" என சங் பரிவாரத்தின் சுவடு பிடித்து ஆரம்பத்தில் அறிவித்தது. காவல்துறையின் ஐயப் பார்வையும் சிமியின் மீதே ஆரம்பத்தில் இருந்தது. சிலரைக் கைது செய்து விசாரணையை நடத்தி வந்த மகாராஷ்டிரா காவல்துறைக்குக் குண்டுவெடிக்கப் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரைத் தேடிச் சென்ற வேளையிலேயே உண்மையை அறிந்து கொள்ள முடிந்தது. ஒருவேளை மாலேகோன் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த இரு சக்கர வாகனத்தின் எஞ்சின் சேஸ் எண்கள் கண்டு பிடிக்கப் படாமல் போயிருப்பின், இப்பொழுதும் இந்தக் குண்டுவெடிப்புப் பழியும் சிமியின் தலைமீதே விழுந்திருக்கும். "உண்மை நீண்டநாள் உறங்குவதில்லை" என்பது போல், சங் பரிவாரத்தால் நீண்ட காலமாக மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுவெடிப்புகளின் உறைவிடங்களைக் குறித்த உண்மை, எரிமலை போன்று வெடித்துச் சிதறி வெளியாகி உள்ளது. சாமியார்கள் என்போர் கொலைகாரர்கள், கிரிமினல்கள், பெண் பித்தர்கள் என்பதைப் பலமுறை நாடு அறிந்திருந்தாலும் முக்கியமாக பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் இந்துத் தீவிரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசத்தின் சாதுக்கள் ஈடுபட்டு, தெருப்பொறுக்கிகளை விடவும் கேவலமாக நடந்து கொண்டதை நாடு கண்ட பொழுதும் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி கைது செய்யப்பட்டு தொடர் விசாரணையில் பல பெண்களை மானபங்கப்படுத்திய தகவல் வெளியான பொழுதும் சாமியார் வேசத்தைப் போட்டுக் கொண்டு உலா வருபவர்கள் கிரிமினல்கள் என்பதை நாடு கண்டு கொண்டது. ஆனால், இந்து தீவிரவாத அமைப்புகளோடு இணைந்து நமது இராணுவமே நாட்டுக்கு எதிராகத் தீவிரவாதத்திலும் ஈடுபடுகிறது என்பதை மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள சாத்வியின் விஷயத்திலிருந்து அறிந்து கொண்ட பொழுது நாடு அதிர்ச்சியில் உறைந்து விட்டது!. குண்டு வெடிப்பை நிகழ்த்தியது, குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில் அரபி ஸ்டிக்கர்களை ஒட்டியது, அதை சிமியின் (பழைய) அலுவலகத்துக்கு அருகில் நிறுத்தி வைத்திருந்தது, "முஸ்லிம் தீவிரவாதி(!)களைக் கைது செய்" என்று கூச்சல் போட்டுக் காவல்துறையைத் திசை திருப்பியது, காவல்துறை சிமியின் முன்னாள் உறுப்பினர்கள் 20 பேரைக் கைது செய்தது வரை எல்லாம் தங்கள் திட்டப்படி நடந்து கொண்டிருப்பதாக மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர் தீவிரவாத சாமியாரினிகளைக் கைவசம் வைத்துள்ள இந்து தீவிரவாத அமைப்புகள். இந்து மதத் துறவியான ஒருவர், இந்துக்களால் ஏறக்குறைய ஒரு கடவுளைப்போல் கருதப்படுபவர். ஓர் இந்துத் துறவி இந்து மதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாலும் மாலேகான் குண்டுவெடிப்பின் ஆணிவேர் ஓர் இந்துத் துறவியான சாத்வீ ப்ராக்யா என்பதாலும் ஊடகங்கள் இப்போது ‘இந்துத் தீவிரவாதி’ என்று அவரையும் அவரின் கூட்டாளிகளையும் அடையாளப் படுத்தின. "நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளை நடத்துபவர்களைத் தீவிரவாதிகள் என்றுதான் அழைக்க முடியும்" என்று சொல்லி, அத்தோடு இஸ்லாத்தையும் இணைத்து நேற்றுவரை தாங்கள் வைத்த குண்டுகளுக்கு இஸ்லாமியர்களை இரையாக்கி வந்த சங் கூட்டம் இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பி விட்டதைப் பார்த்து விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றனர். மாலேகோன் குண்டு வெடிப்பில் துர்காவாகினியின் சாமியாரினி சாத்வி பிடிபட்டவுடன், காந்தியைக் கொன்ற கோட்சேயை, "எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவன் அல்ல" என கழட்டி விட்டது போன்று, "எங்களுக்கும் சாத்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என கழட்டி விட்ட சங் அமைப்புகள், அவ்வாறு "குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துக்களை இந்துத் தீவிரவாதி என அழைக்கக் கூடாது" எனவும் முராரி பாட ஆரம்பித்து விட்டன. தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது போல், நேற்று வரை தாங்கள் செய்த கயமைத்தனங்களுக்கு இஸ்லாமிய சமுதாயத்தை படிக்க.. "இஸ்லாமியத் தீவிரவாதி" என காவு தந்து கொண்டிருந்த தேச விரோத கும்பலுக்கு இன்று அதே வாசகம் தங்களுக்கு எதிராக திரும்பியவுடன் அதன் வலி தெரிகிறது போலும். தமிழகத்தில் இந்துத் தீவிரவாதத்தை முழு நேரப்பணியாக ஏற்று செயல்பட்டு வரும் இந்து தீவிரவாத அமைப்பான இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் "இந்துத் தீவிரவாதம்" என்ற சொல்லைக் கேட்டவுடன் கதி கலங்கிப் போய் கீழ்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்: "இந்து மற்றும் பயங்கரவாதம் என்ற 2 சொற்களும் முரண்பட்டவை, பொருந்தாதவை. இந்து அறநெறி நூல்கள் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரிக்கவில்லை, கற்பிக்கவும் இல்லை. மாலேகாவ்ன் நகரில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆனால் இந்து தீவிரவாதம் என்று இல்லாத ஒன்றை கற்பனையில் உருவாக்கி இருப்பது வெட்கக் கேடாகும். இந்துக்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் போலி மதச்சார்பின்மைவாதிகள் இந்து பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தி வருவது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படுகிற துரோகம், அவமதிப்பு, அவமானம் ஆகும். மத அடிப்படையில் நமது நாடு ஏற்கனவே பிரிவுபட்டுத்தான் இருக்கிறது. இந்து பயங்கரவாதம் என்று சொல்லி இச்சம்பவத்தை ஊதி பெரிதாக்க நினைப்பவர்கள், பிளவை மேலும் அகலப்படுத்தி நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் சமாதானத் தையும் சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். " முன்னர் இதே இந்துத் தீவிரவாதிகள் தாங்கள் செய்த அநியாயங்களுக்காக முஸ்லிம் சமுதாயம் பலிகடாவாக்கப்பட்டபோது "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதைத் தங்களின் அடையாளமாக ஆக்கிக் கொண்ட வேளையில் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து, "இஸ்லாம் என்றால் சமாதானம், அமைதி என்று பொருள். இஸ்லாம் உலகில் சமாதானத்தையே விரும்புகிறது; அது சமாதானத்தையே போதிக்கிறது; தீவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை; நேர் எதிர் முரணான அவ்வாசகங்களை உபயோகிக்கக் கூடாது" என்று எழுந்த குரல்களைக் கண்டு கொள்ளாத இந்தக் கயவர் கும்பலின் மேற்கண்ட வாசகங்கள் எவ்வளவு போலியானவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும். மத அடிப்படையில் நாட்டைத் துண்டாடி ஆட்சியைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்துத் தீவிரவாதிகள், நாட்டின் ஒருமைபாட்டையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் குறித்து இப்போது அச்சம் கொள்வதாகச் சொல்வது எவ்வளவு தேர்ந்த நடிப்பு என்பதும் அனைவருக்கும் விளங்கும். நாட்டின் சமாதானத்தினையும் ஒற்றுமையையும் விரும்பும் ஒரே காரணத்திற்காகத்தான், இந்நாட்டின் விடுதலைக்காக இரத்தத்தால் காவியம் படைத்த இஸ்லாமிய தியாகச் சமுதாயம், நாட்டு விடுதலைப்போரில் ஆங்கிலேயனுக்குக் கோவணம் தூக்கி அலைந்த பார்ப்பனீய தேச விரோதிகளின் "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற பொருந்தா, அநியாயப் பொய் குற்றச்சாட்டையும் பிரச்சாரத்தையும் கேட்டு அவமானப்பட்டாலும் கொதிக்காமல் அமைதி காத்து வந்தது. எனவே, நாட்டு ஒற்றுமையை முன் நிறுத்தி இந்த இந்து முன்னணித் தீவிரவாதி கோரிக்கை வைத்துள்ளதால், அதனைப் பரிசீலிக்கும் விதத்தில், படிக்க:.. குண்டு தயாரிப்பவன், ஆகியோர் எல்லாம் இந்துக்களாக இருப்பதால் மேற்காண்பவர்களைத் தவிர்த்த அனைவரும் சாதாரண இந்துக்கள் என்றும் மேற்காண்பவர்களை மட்டும் "இந்துத் தீவிரவாதிகள்" என்றும் அடையாளப் படுத்துவது பொருத்தமாக இருக்கும். http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1086&Itemid=51 - Ziavu Deen |
Filed under: Abu Adhil
தனித்து களமிறங்கி சாதித்த இஸ்லாமிய இயக்கங்கள் – அம்ஜத் கான்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே !
கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே அஸ்ஸாமை முன் மாதிரியாக கொண்டு மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி ஒன்றுபட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளேன். என்ன காரணத்தினாலோ அதை நமது இயக்கங்கள் அதை செயல்படுத்துவதில் அக்கறை காட்ட வில்லை.
இந்நிலையில் கடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும்,தேசியலீகும் ஆதரவளித்தது.அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி ,தமிழ் மாநில முஸ்லிம் லீக் போன்றவை ஆதரவளித்தது.இந்திய தேசிய லீக்கும்,எஸ்.டி.பி.ஐ.யும் தனித்து களம் கண்டது.இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இரு பெரும் திராவிட கட்சிகளும் கூட்டணி கட்சிகளை கழற்றி விட்டு தனித்து போட்டியிடுவதாக அறிவித்தனர்.நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் அது.இப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் .அப்போதுதான் நம் இயக்கங்கள் பலம் என்ன என்பதையும்,மாறுபட்ட கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அரசியல் ரீதியாக ஒன்று படுவதன் அவசியத்தை உணர்வார்கள் என்ற எண்ணமும் நம்பிக்கையும் என்னுள் எழுந்தது.நாற்பது ஆண்டுகளுக்கு பின்பு தனித்து களமிறங்கிய தாய் சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 115 இடங்களிலும் ,மனித நேய மக்கள் கட்சி 125 இடங்களிலும்,எஸ்.டி.பி.ஐ. 50 க்கும் மேற்பட்ட இடங்களிலும் தனி தனியே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.இந்திய தேசிய லீக்,தேசிய லீகினரின் நிலை என்னவென்று தெரியவில்லை.அது மட்டுமின்றி போட்டியிட்ட பல இடங்களில் மூன்றாமிடத்தை பிடித்துள்ளனர்.வெகு நிச்சயமாக கூட்டணி மூலம் போட்டியிட்டிருந்தால் இத்தனை இடங்கள் ஒதுக்கவும் பட்டிருக்காது. வெற்றி பெற்றிருக்கவும் முடியாது.தனி தனியே களமிறங்கிய இந்த அமைப்புகள் ஒன்றுபட்டு களமிறங்கி இருந்தால் இன்னும் கூடுதலாக வெற்றி பெற்றிருக்கலாம் என்பது எனது கருத்து.சகோதரர்களே உங்களது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்களேன். – அம்ஜத் கான்
Filed under: Abu Adhil
இ. யூ. முஸ்லிம் லீக் உள்ளாட்சி தேர்தலில் 115 இடங்களில் வெற்றி
பல்வேறு சட்டமன்ற-பாராளுமன்ற-உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்தும் போட்டியிருக்கின்றது. கூட்டணியில் போட்டியி ருக்கின்றது. அதேபோல் கூட்டணி சின்னத்திலும் போட்டியிருக்கின்றது. தனிச் சின்னத்திலும் போட்டியிட் டிருக்கின்றது.
நடைபெற்று முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டியிட்டதோடு மாநில அளவில் கூட்டணி அமைக்கா மல் தனித்து போட்டியிட்டது.
மொத்தம் போட்டியிட்ட 394 இடங்களில் 45 இடங்களில் மட்டுமே தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன் பாடு கொண்டு போட்டியிட்டது. மீதமுள்ள 349 இடங்களிலும் தனித்தே போட்டியிட்டு சமுதாய மக்களின் ஆதரவோடு உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் களத்தை சந்தித்தது.
Filed under: Abu Adhil
சவூதி அரேபியா இளவரசர் அப்துல் அஜீஸ் மரணம்!

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஜிஸ் சனிக்கிழமை இறந்தார்.சவூதி அரேபியாவின் துணைப் பிரதமராகவும் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் இருந்த இளவரசர் அஜீஸýக்கு வயது 86. கடந்த ஜூன் மாதம் முதல் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா வந்திருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக சவூதி அரேபிய அரசவை தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. "இரண்டு புனிதமான மசூதிகளின் தக்காரான அரசர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ், தமது சகோதரர் உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை அதிகாலை வெளிநாட்டில் இறந்தது குறித்து ஆளாத் துயர் அடைகிறார்’ என்று அரசவையின் அதிகாரபூர்வ அறிவிப்பு கூறுகிறது. இவரது மறைவைத் தொடர்ந்து 78 வயதாகும் இவரது இளைய சகோதரர் நயஃப் இளவரசராகிறார்.
Filed under: Abu Adhil
முதல் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றி
போட்டியிட்ட 600 இடங்களில் 110ல் வெற்றி
உள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி சுமார் 600 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது. இதில் கோவை மாநகராட்சியில் 86வது வார்டிலும், 15 நகராட்சி வார்டுகளிலும், 37 பேரூராட்சி வார்டுகளிலும், 36க்கும் மேற்பட்ட ஊராட்சி வார்டுகளிலும் மனிதநேய மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கோவை மாநகராட்சி 86வது வார்டில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஏ. சாதிக் அலி 260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
ராமேஸ்வரம், கீழக்கரை, நெல்லிக்குப்பம், கடையநல்லூர், தென்காசி, வாணியம்பாடி, திருவாரூர், கூத்தாநல்லூர், வந்தவாசி முதலிய நகராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இதேபோல் உடன்குடி, சோழபுரம்,, அபிராமம், பெருந்துறை, கயத்தாறு, தக்கலை, லால்பேட்டை, நெல்லை ஏர்வாடி, இளையான்குடி, நெல்லிக்குப்பம், திருக்கழுக்குன்றம், முதுகளத்தூர் முதலிய பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளார்கள்.
இதுவரை மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜாகிர் ஹீசைன் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் ஊராட்சிமன்றத் தலைவராகவும், நெல்லை மாவட்டம் வீரசமுத்திரம் ஊராட்சிமன்றத் தலைவராக நாகூர் கனியும்மற்றும் காஞ்சி மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவராக வெங்கடேசனும் சிவகங்கை மாவட்டம் சாத்தனி ஊராட்சிமன்றத் தலைவராக சோபிதா சிராஜிதீன் வெற்றி பெற்றுள்ளார்கள்.
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட சுமார் 600 இடங்களில் இதுவரை கிடைத்த தகவலின் படி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் சுமார் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள். இதுதவிர 16 இடங்களில் ஏற்கனவே போட்டியின்றி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
(எம். தமிமுன் அன்சாரி)




தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும்.