சாயபு வீடு / சிறுகதை

சாயபு வீடு! சிறுகதை

சாயபு வீடு
‘எல்லே’ சுவாமிநாதன், அமெரிக்கா

மார்கழி மாதத்தில் பொழுது புலர்ந்த வேளை. கிராமத்துக் குளத்தில் குளித்து ஈரத்துணியுடன் வாயில் தோத்திரம் முணுமுணுக்க வந்தாள் சங்கரிப்பாட்டி என்று ஊராரால் அழைக்கப்பட்ட அந்த மூதாட்டி. வயது எழுபது பிராயம் ஆனாலும் உடல் வலிமைக் குறைவு இல்லாமல் இருப்பதாகவே பட்டது. கிராமக் கணக்கர் ராமகிருஷ்ணன் வீட்டு வாசலில் தன் பெண் சாணி உருண்டைகள் வைத்து அதில் பூசனிப் பூவை நட்டுக் கொண்டிருந்ததைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

பாட்டியைக் கண்டதும், “பாட்டி, ஒரு விசயம் சொல்லணும். உங்ககிட்ட”
என்றார்.

பாட்டி பதில் பேசாமல் அவர் அருகில் வந்து கேள்விக்குறியாய் அவரைப் பார்த்தாள்.

“சீனு லெட்டர் போட்டிருக்கான். வீடு வாங்க ஆள் கிடச்சிருக்காம். அழச்சிட்டு வரானாம்” என்றார்.

“ஏன் சீனுக்கு புத்தி இப்பிடி இருக்கு? இந்த இடிச வீட்டை வித்து அவனுக்கு என்ன ஆகணும்? கடவுள் புண்ணியத்துல அவனுக்கு வசதிக்கு குறச்சல் இல்ல. கை நிறைய சம்பளம். வீடு வாசல் ஆளு தேளுன்னு ஏகப்பட்டது இருக்கு, போதாக்குறைக்கு பொண்டாட்டியும் பெரிய இடத்துக் காரி. நகையும் நட்டுமா இருக்கு. ஏன்

இவனுக்கு இது மாதிரி எண்ணம்? பாட்டி சாகற வரைக்கும் வீட்டை விக்காதேன்னு அவனுக்கு பதில் எழுதிடு” என்று சொல்லிவிட்டு பாட்டி நடந்தாள்.. ராமகிருஷ்ணனுக்கு மனசு வேதனைப் பட்டது.

அந்தக் கால கட்டத்தில் கிராமத்து அக்கிரகாரத்தில் ஏழெட்டு வீடுகள் மட்டுமே இருந்தன. நடுவில் சில காலி மனைகளும், பூட்டப்பட்ட இடிந்த வீடுகளாகவோ இருந்தன. இருக்கிற வீடுகளில் இருந்த இளைய தலைமுறை படிப்பு வேலை நிமித்தம் நகரத்துக்கு போய்விட்டிருந்தது. வீடுகளில் இருப்போர் பெரும்பாலும் மத்திய வயதினராக இருந்தார்கள்.

பாட்டி குடியிருந்த வீடு மிகவும் சிதிலமான நிலையில் ஓரமாக ஒரு காலி மனையருகே.இருந்தது. வாசலில் இரு சிறு திண்ணைகள், நடுவில் சின்னக்கூடம், பக்க வாட்டில் இரு சிறு அறைகள் இருந்தன. சன்னல்களே இல்லாத மண் சுவர்களும் நாட்டு ஓடுக்கூரையுடன் இருந்த அவ்வீட்டுக்கு கூரையில் பதிக்கப்பட்ட இரு கண்ணாடிச் சதுரங்களே சிறிது ஒளியைக்கொடுத்தன. நீண்ட கொல்லையில் உரிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டியிருந்தது.

சீனுவின் தகப்பனார் கிராமத்தில் பெரிய பண்ணை வைத்து சாகுபடி செய்து வாழ்ந்தவர். சீனு கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றதும் வீடு, நிலங்களை விற்றுவிட்டு, சென்னையில் வீடு வாங்கி குடும்பத்தோடு அங்கே குடிபோனார். அவர் மறைவுக்கு பின் அந்தக் கிராமத்தில் அவருக்கு சொந்தமாக எஞ்சியிருந்தது சங்கரிப் பாட்டியின் வீடுதான்.
.

சீனுவின் தகப்பனாருக்கு உதவியாய் இருந்த சதாசிவத்தின் உபயோகத்துக்கு இந்த வீடு வாடகை இல்லாமல் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் சதாசிவமும் அவர் மனைவி சங்கரியும் வாழ்ந்து வந்தார்கள். இந்த வீட்டைத்தான் விற்றுவிட வேண்டும் என்று சீனு துடியாக இருந்தான். பாட்டிக்கு அந்தவீட்டை விட்டு வெளியேறுவதில் விருப்பம் இல்லை.

அடுத்த வாரம் காலையில் ஒருநாள் சீனு ராமகிருஷ்ணனைப் பார்க்க வந்தான். அவனுடன் கைலி அணிந்து தலையில் தொப்பியுடன் ஒரு முஸ்லிமும் இருந்தார். சீனு, “ராமகிருஷ்ணன், சங்கரி பாட்டி இருக்குற வீட்டை விற்க பேப்பரிலே விளம்பரம் கொடுத்திருந்தேன். இவர்தான் இப்ராகீம் சாயபு. டவுன்ல இருக்கார். இவர்தான் வீட்டை வாங்கிக்க பிரியப்படுகிறார். இந்த கிராமத்துல இவருக்கு நிலம் கூட இருக்காம். நீங்களும் என் கூட வந்தால் போய் வீட்டை இவருக்குக் காட்டலாம்” என்றான்.

ராமகிருஷ்ணனுக்கு திகைப்பாய் இருந்தது. இஸ்லாமியரும் இந்துக்களும் தனித்தனியாக வாழ்ந்த காலம் அது. இஸ்லாமியர்களுக்கென டவுனில் தனியாக ஒரு காலனி இருந்தது. பெரும்பாலானோர் சிங்கை, மலேயாவில் செல்வம் ஈட்டி கிராமத்தில் நிலங்கள் வாங்கி டவுனருகே இருந்த காலனியில் வீடு கட்டிக்கொண்டு வாழ்ந்தார்கள்.

கிராமத்தில் சண்டை வரும்போது “என் வீட்டை துலுக்கனுக்கு வித்துடப் போகிறேன். அவன் வாசலில் பசுமாட்டைக் கட்டி வெட்டி தெருவை நாசம் பண்ணப்போகிறான்” என்று அச்சுறுத்துவது வழக்கம். ஆனால் நடைமுறையில் வீட்டை இந்துக்களுக்கே விற்பார்கள். இன்று சீனு, யாரும் செய்யாத வழக்கமாய் சங்கரி பாட்டி இருந்த வீட்டை ஒரு முஸ்லிமுக்கு விற்க ஆயத்தமாகிவிட்டான்.

சங்கரி பாட்டி வீட்டில் இல்லை. காலையிலே குளித்து விட்டு கோயிலுக்கு போய் விட்டாள். வீட்டின் வெளிப்புறத்தை சுற்றிப் பார்க்க மட்டுமே முடிந்தது. சீனுவுக்கு சற்று ஏமாற்றம்.

“கதவை ஒடச்சிடலமா? பழய கதவுதானே” என்றான்.

“அது தப்பு. இது பாட்டி இருக்குற வீடு. அவளே வந்து கதவைத் திறந்துவிட்டால்தான் உள்ளே போகணும். இது உனக்கு சொந்தமாயிருக்கலாம். அதுக்குன்னு கதவை ஒடச்சி உள்ளே போறது தப்பு” என்றார் ராமகிருஷ்ணன்.

“என்ன பெரிய சொத்து வெச்சிருக்கப் போறா? ரெண்டு பழம்பொடவை, தகர டப்பா, சட்டி பானை இருக்கும். நாம எதையும் எடுக்கப்போறதில்ல. சும்மா உள்ள போயி இடம் காட்டத்தானே” என்றான் சீனு.

“சொத்து இருக்கா ரொக்கம் இருக்கா தங்கம் இருக்கானு பிரச்னையில்லை. ஒரு குடுத்தனக்காரரின் உரிமையில நாம தலையிடப்படாது. நீ இன்னிக்கு வருவேன்னு எனக்கும் தெரியாது, பாட்டிக்கும் தெரியாது. இன்னொரு நாளைக்கு சொல்லிட்டு வா பாட்டிகிட்ட சொல்லி வீட்டைத் திறந்து காட்டச் சொல்றேன்” என்றார்.

அதற்குள் சாயபு வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, “உள்ள போகணும்னு அவசியமில்ல. மனைக்கட்டு நீளமா இருக்கு. கொல்லை பெரிசா இருக்கு. அது போதும்” என்றார்.

சீனுவுக்கு சந்தோஷம். “அப்ப இப்பவே ஒப்பந்த பத்திரம் எழுதிடலாமா?” என்றான்.

ரமகிருஷ்ணன் குறுக்கிட்டார், “சீனு அவசரப்படாத. பாட்டியை ஒருவார்த்தை கலந்திண்டு அப்புறமா நாளு குறிச்சிக்கலாம். திடீர்னு காலி பண்ணுன்னா அவ என்ன பண்ணுவா?”

சீனுக்கு கோபம் வந்தது. அவன் பேசுமுன் சாயபு சொன்னார், “பரவாயில்லீங்க. இங்க இருக்கிறவங்களையும் ஒரு வார்த்த கேட்டுட்டா அவங்க செளகரியப்படி செய்துரலாம்”

இந்த வாய்ப்பு கைநழுவி விடலாம் என்ற அச்சம் சீனுவுக்கு ஏற்பட்டது. “சரி அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வெச்சிக்கலாம். அதுக்குள்ள பாட்டிகிட்ட விசயத்தை சொல்லிடலாம்.

வேணும்னா எழுத்து மூலமா காலி பண்ணச்சொல்லிடலாம். பாட்டிக்கு பொண் இருக்காளே சிதம்பரத்துல. போயி இருக்கட்டுமே. என்ன சரியா?” என்றான்.

அவர்கள் பிரிந்தபோது அடுத்த வெள்ளிக்கிழமை பத்திரம் எழுதுவதாய் முடிவு செய்யப்பட்டது. “ராமகிருஷ்ணன், எனக்கு அவசரமா வேலை இருக்கு. அதுனால பாட்டிகிட்ட வீடு விலை போயிட்ட விவரம் சொல்லி காலி பண்ணச் சொல்லிடுங்க.

கையில் அஞ்சு பத்து வேணும்னா நான் கொடுக்கறேன்னும் சொல்லுங்க” என்று சொல்லி சீனு விடைபெற்றான். உண்மையில் அவனுக்கு பாட்டியை நேரில் பார்த்து இதைச் சொல்ல சற்று தயக்கமாய் இருந்தது.

ராமகிருஷ்ணனுக்கும் சாயபு இதை வாங்குவதில் முழு ஒப்புதல் இல்லை. அவர் பாட்டியை சந்தித்து சீனு சாயபுவுடன் வந்துபோன தகவலைச் சொன்னார். “நீங்க இங்க பலகாலமாக இருந்திருக்கீங்க. வாடகை ஒப்பந்தம், வாடகை, சீட்டு, நோட்டு எதுவும் இல்ல.

பன்னிரண்டு வருஷத்துக்கு மேல ஒருத்தர் வீட்ல இருந்துட்டா அவங்களுக்கு அனுபவ பாத்யதை உண்டு. அதாவது இந்த வீடு உங்களுது. உங்களுக்கு அப்புறம் உங்க வாரிசுகளுக்கு போக வேண்டியது. சீனூவால ஒண்ணும் செய்ய முடியாது.

கோர்ட்டுல போயி ஜெயிக்க முடியாது. உங்களுக்கு சாதகமா தீர்ப்பாகும். இதை நான் உங்களுக்கு சொன்னதா வெளியில சொல்லிக்க வேண்டாம். அடுத்த வாரம் சீனு சாயபுவோட வரச்ச இதைச் சொல்லிடுங்க” என்று ஆலோசனை சொன்னார்.

பாட்டி மறுத்து விட்டாள். “என்ன ராமகிருஷ்ணா, எல்லாம் தெரிஞ்ச நீ இப்படி சொல்ற. சட்டம் எனக்கு சாதகமா இருக்கலாம். ஆனா அது தர்ம நியாயம் இல்ல. சீனுவோட தகப்பனார் நல்ல மனசோட இதை வாடகை இல்லாம எங்களுக்கு கொடுத்தார். புள்ளை குட்டியை வளர்த்து ஆளாக்கி நல்லபடியா கல்யாணம் பண்ணியாச்சு.

என் காலத்துக்கு அப்புறம் சீனுவே இதை எடுத்துக்கட்டும். என் வாரிசுகளுக்கு இது வேண்டாம். அப்படி கேக்கறது மகாபாபம். போற காலத்துல இப்படி எனக்கு ஒரு பாபம் வேண்டாம்” என்று தீர்மானமாக சொல்லிவிட்டாள்

ராமகிருஷ்ணன் மேற்கொண்டு பேசவில்லை.

இந்தச் செய்தி ஊரில் பரவி, ‘துலுக்கன் பாட்டி வீட்டை வாங்கறான்’ என்ற வம்பு அலசப்பட்டது. பாட்டிக்கு வயசான காலத்தில் தனியாக வாழ வீடு ஒரு கேடா, போயி பொண்ணுகிட்ட இருக்கலாமே என்றும், வீடு சொந்தக்காரன் தான் பிரியப்பட்டபோது வீட்டை விற்க பாத்யதை உண்டு என்றும் பேசப்பட்டாலும், வீட்டை வேற்று மதக்காரனுக்கு விற்பது இந்து சமூகத்துக்கே ஒட்டுமொத்தமாக இழைக்கப்படவிருக்கும் அநீதி என்ற எண்ணம் பரவலாயிருந்தது.

சீனுவை சந்திப்பது இயலாமையால் ராமகிருஷ்ணனிடம் எப்படியாவது இந்த சம்பவத்தை தடுத்து, பிராமணரல்லாதாரே அக்ரகார வீட்டை வாங்கத் தயங்கும் நிலையில், ஒரு முஸ்லிம் வாங்குவதையும், இந்துக்கள் வாழும் ஊரின் தெருவில் முஸ்லிம் குடியேறுவதும் தடுக்கப்பட வேண்டும் என்று வாதாடினார்கள்.

அவரும் தன் இயலாமையைத் தெரிவித்தார். முஸ்லிம் வாங்குவதத் தடுக்க ஊராரே இந்த வீட்டைத் தாங்களே சேர்ந்து வாங்கி விடலாமா என்ற திட்டமும் பரிசீலிக்கப்பட்டு வாங்க வசதி உள்ளவரில்லாமல் கைவிடப்பட்டது. வீடு விற்கப்படும் சூழ்நிலை பாட்டிக்கு அறிவிக்கப்பட்டு நீங்கள் உங்கள் பெண்ணுடன் போய் வசிப்பதே நல்லது என்பதாக அறிவுரையும் கொடுக்கப்பட்டது. பாட்டி இதைக் காதில் வாங்காமல் தன் காரியத்தைச் செய்தவாறு இருந்தாள்.

அடுத்த வெள்ளிக்கிழமை ராமகிருஷ்ணன் வீட்டு வாசலில் சிறு கூட்டம் கூடியிருந்தது. சீனுவும் சாயபுவும் இதை எதிர்பார்க்கவே இல்லை. சிலர் சீனுவைத் தனியாக அழைத்துச் சென்று “உங்க அப்பாரு பெரிய பண்ணை வெச்சிருந்தாரு. நிலம், நீச்சு, வீடு எல்லாம் நம்ம ஆளுங்களுக்குதான் கிடைச்ச வெலைக்கு வித்தாரு. அவரு நெனச்சா துலுக்கனுக்கு அதிக வெலைக்கு வித்திருக்கலாமே? ஏன் விக்கல? அவங்க தனி, நாம தனி. இப்ப அவங்க வந்து

நம்ம
நிலத்தை வாங்கறாங்க. வாங்கிட்டு போவட்டும். அவங்கிட்ட காசு இருக்கு. நமக்கும் தேவயா இருக்கு. ஆனா வீடு? வீட்டை விக்கலாமா அவங்களுக்கு? நாம அதே தெருல இருக்க முடியுமா? எதுக்கு வேலில போற ஓணானை மடியில கட்டிறீங்க? இந்த ஊரு உங்களுக்கு என்ன பாவம் பண்ணிச்சு? துலுக்கன் வந்தா நாங்கல்ல ஓடிரணும்?” என்று கேட்டார்கள்.

சீனு மசியவில்லை. சாயபுவிடம் போய் “இங்கே வந்து வீட்டை வாங்காதீர்கள்” என்று சொல்ல யாருக்கும் துணிவில்லை. வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எழுதிய பத்திரத்தை ராமகிருஷ்னன் உரக்கக் படித்தார். பாட்டியும் அங்கு வந்து மூலையில் நின்று கொண்டாள்.

“சென்னையில் புரசைவாக்கம், 25 மணிகண்டன் தெரு என்ற விலாசத்தில் குடியிருப்பவரும், காலம்சென்ற பட்டுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி அய்யரின் மகனான சீனு என்கிற சீனிவாசனாகிய நான், (வயது 43, இந்து மதம், பிராமணர்) எனக்கு சொந்தமான 7/15 கீழத்தெரு என்று குறிப்பிடப்படும் வீட்டை (சர்வே எண். 4534TY) காலம் சென்ற கீழக்கரை மகமது சாகிபின் குமாரரான இப்ராகிம் சாகிபுக்கு (வயது 66, இஸ்லாமிய மதம்) ரூபாய் ஐயாயிரத்துக்கு கிரய சாசனம் செய்து கொடுப்பதற்காக எழுதப்பட்ட ஒப்பந்தம்….மேற்படி வீட்டின் உரிமை மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் அதில் குடியிருக்கும் காலம் சென்ற சதாசிவ அய்யரின் மனைவியான சங்கரி அம்மாள் (வயது 71, இந்து மதம் பிராமணர்) வீட்டைக்காலி செய்து புது உரிமையாளரிடம் ஒப்படைத்து அதற்கு சிரம பரிகாரமாக ரூவாய் நூறு உதவித்தொகையை பழைய உரிமையாளர் சீனிவாசனிடமிருந்து பெற்றுக் கொள்வதாய்……”

இதைப் படிக்கும்போது பாட்டி அவர்கள் இருந்த திண்ணைக்கு வந்தாள். ராமகிருஷ்ணன் படிப்பதை நிறுத்தினார்.

“பாட்டி கேட்டீங்களா? நான் உங்களுக்கு காலி பண்ண நூறு ரூவா தரப்போறேன்” என்றான் சீனு. பாட்டி அவனைக் கையெடுத்து கும்பிட்டாள் “சீனு. நீ நல்லா இருடா. உனக்கு பெரிய மனசு. எனக்கு பணம் காசு வேண்டாம். நான் உன்னைத் தூக்கி வளர்த்தவ.

சின்னக்குழந்தையா நீ
என் மேல மூத்திரம் பேஞ்சிருக்க. அப்ப நீ குழந்தை. இன்னிக்கு பெரியவனா ஆகி சபையில என்னை அசிங்கப்படுத்தாதே. நான் கெழவி. இன்னிக்கோ நாளைக்கோ போயிடுவேன். என் தலை சாயட்டும். வந்து நீ எனக்கு கொள்ளி போடு. அப்புறம் உன் வீட்டை கட்டிக்கோ, வித்துக்கோ, சுட்டுக்கோ. என்னைத் துரத்தாதடா. கெஞ்சிக் கேட்டுக்கறேன்” என்றாள்.

கூட்டத்தின் அமைதிப் பார்வையாளர்கள் பாட்டியின் தைரியத்தை வியந்தார்கள். சீனுவுக்கு கடுங்கோபம் வந்தது. “பாட்டி கன்னா பின்னானு பேசாதீங்க. இந்த வீட்ல நீங்க ஏகப்பட்ட வருசம் இருந்தாச்சு. ஒரு பைசா நான் வாடகை கேட்டனா? உங்களுக்கு பொண்ணு இருக்காளே சிதம்பரத்துல. போயி இருங்களேன். எதுக்குத் தனியாக இங்க வேகணும்? இந்த வீட்டை வித்துட்டு வர காசில மெற்றாஸ்ல என் பொண்ணுக்கு ஒரு மனைக்கட்டு வாங்கித்தரப்போறேன்.

அங்க விலை நாளுக்கு நாள் ஏறுது. யாருக்கு வாங்க முடியதோ அவங்களுக்கு வீட்டை விற்கறதுல என்ன தப்பு? மெட்றாசுல பாருங்க. எல்லா ஜாதி மதக்காராளும் ஒரே தெருல. பக்கத்து வீட்ல இருக்கிறவன் ஜாதி ஒருத்தனுக்கும் தெரியாது. இங்க மட்டும் ஏன்…?”

“சீனு. எம்பொண்ணுட்ட போயிருக்க எனக்கு வசதிப்படாது. ஏன்னா அவளோட மாமியார், மாமனார், மச்சினன்னு ஏகப்பட்ட பேரு இருக்கா. என் ஆசாரத்துக்கு அங்க சரியா வசதி இல்ல. இந்த வீட்ல நான் நிறைய வாழ்ந்துட்டேன். எனக்கு இங்க ஏகப்பட்ட நினைவு இருக்கு. உங்க குடும்பத்துக்கு என் புருசன் உயிரையே குடுத்து வேலை செஞ்சிருக்கார்.

தனக்குனு காலணா சேத்துக்கல. இந்த வீடு என் புருசனை முழுங்கியிருக்கு. என் புள்ளய. முழுங்கிருக்கு. என் பொணமும் இங்கதான் விழணும். உனக்கு வாடகை வேணும்னா சொல்லு என் தலைய அடகு வெச்சாவது ரோட்ல பிச்சை எடுத்தாவது உனக்கு வாடகை தரேன், வீட்டை வித்து என்னை ரோட்ல தள்ளாதடா” பாட்டி அழத் தொடங்கினாள்.

அப்பொழுது இப்ராகிம் சாயபு எழுந்தார்.. இந்த நேரத்தில் இந்த மனிசன் என்ன வில்லங்கம் பண்ணுவாரோ என்று அவர் முகத்தை வெறுப்புடன் எல்லோரும் பார்த்தார்கள். அவர் சொன்னார்: “நான் இங்க வீடு வாங்கறதுல சில சங்கடங்கள் இருக்குனு தெரியுது..”

சீனு எழுந்து “சாயபு கவலைப்படாதீங்க நான் உங்களுக்குதான் விற்கறதுன்னு முடிவா…” என்று சொல்லி முடிக்குமுன் சாயபு அவனைக் கையமர்த்தி, கூட்டத்தைப் பார்த்து சொன்னார்.

“இந்த வீட்டை வாங்கறதுக்கு எனக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு நான் வந்து இங்க இருக்கரதுக்கோ, என் சொந்தக் காரங்களைக் குடி வைக்கறதுக்கோ இதை வாங்கல. எனக்கு குடியிருக்க டவுன்ல பெரிய பங்களா இருக்கு. இந்த கிராமத்துல நிலம் இருக்கு. இன்னமும் கொஞ்சம் நிலம் வாங்கப் போறேன். பெரிய அளவுல விவசாயம் பண்ணணூம்னு எனக்கு ஆசை இருக்கு.

அதுக்குனு டிராக்டர், அறுவை மெசின் எல்லாம் இப்ப வாங்கி டவுன்ல கோடவுன்ல வெச்சிருக்கேன். அங்க வாடகை அதிகமா இருக்கு. அதை நிறுத்தி வைக்க கிராமத்துல வீடு இருந்தா நல்லதுனு தோணுச்சு. அதான் வாங்கறேன். இந்த வீட்டு மனையில பின்னால் நிறைய இடம் இருக்கு. அதில் கொட்டாயி போட்டு டிராக்டர், சாமானை நிறுத்தி வைக்கப்போறேன்.

பக்கத்து காலி மனைக்கட்டு வழியா எனக்கு வழி கெடச்சா கொல்லைப்புறத்தில மட்டும் என் வசம் வெச்சிட்டு வீட்டுக்கிட்டயே போகவாணாம். இந்தப் பாட்டியம்மா வீட்டைக் காலி செய்யவேண்டாம். அங்கியே இருக்கட்டும். இந்த கிராமத்துக்கோ, அவங்களோட ஆசாரத்துக்கு என்னால ஒரு பங்கமும் வராது. அவங்க வாடகை கீடகை ஒண்ணும் குடுக்க வேண்டாம்.

வீடு எம்பேருல இருந்தாலும் அவங்களுக்கு அவங்க காலம் முச்சூடும் குடியிருக்க பாத்யதை உண்டுன்னு பத்திரத்திலேயே போட்டுட நான் சம்மதிக்கிறேன்” என்றார். ராமகிருஷ்ணன் அமைதியானார்.

பாட்டி சாயபுவைக் கையெடுத்துக் கும்பிட்டு “தெய்வம் மானுஷ்ய ரூபேண” (இறைவன் மனித வடிவில்) என்றாள். சாயபு இந்த வீட்டுக்குள் குடி வரப்போவதில்லை, கொல்லையிலே மட்டும் ஏதோ சாமான் போட்டுக்கப் போறார், என்பதில் கிராம மக்களுக்கும் அசாதாரண திருப்தி ஏற்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தாகி சீனுவுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டது. சீனு தனக்கு கொடுத்த ரூபாயை பாட்டி வாங்கவில்லை.

“உன் பெண்டாட்டிக்கு என் சார்புல ஏதாவது புடவை நகை நட்டு வாங்கிக் குடுத்துடு” என்றாள்.

கி.மு.., கி.பி., (கிறிஸ்து பிறக்கும் முன், கிறிஸ்து பிறந்த பின்) என்று குறிப்பிடும் வழக்கு உண்டல்லவா? அதுபோல அந்தக்கிராமத்தில் சா.மு.,சா.பி., (சாயபு வீடு வாங்குமுன், சாயபு வீடு வாங்கியபின்) என்று குறிப்பிடத் தக்க காலகட்டங்கள் ஏற்பட்டன.

சங்கரிப் பாட்டியின் கொல்லையில் இருந்த புதர் அழிக்கப்பட்டு ஒரு கீற்றுக் கொட்டகை எழும்பியது. கொல்லைப்புறத்தில் ஒரு பகுதி பாட்டிக்கு ஒதுக்கப்பட்டு குறுக்கே வேலி வந்தது. தெருவிலிருந்து பக்கத்து காலி மனைக்கட்டு வழியாக நேரடியாக பாட்டிவீட்டுக் கொல்லையில் இருந்த கொட்டகைக்கு ஒரு வழி போடப்பட்டது.

வீட்டுக்குள் நுழையாமலே கொட்டகைக்கு போக வசதி ஏற்பட்டதும், அங்கு பெஞ்சு, நாற்காலி, டிராக்டர் மற்ற விவசாய உபகரணங்கள் வந்து இறங்கின.

சிலர் பாட்டியைக் கண்டால் ‘சலாம் பாட்டி’ என்று பரிகசித்தாலும் பாட்டி அதைப் பொருட்படுத்தியது இல்லை. கிராம இளவட்டங்களால் பாட்டியின் வீட்டுக்கொல்லையில் சாதாரணமாக நிகழ்ந்த சிறு திருட்டுகள் இப்பொழுது அறவே ஒழிந்தன.

‘சங்கரி பாட்டி வீடு’ என்பது ‘சாயபு வீடு’ என்ற ஏளனக்குறிப்போடு சுட்டப்பட்டாலும், வீடு வேற்று மதத்தினர் கையில் போனதால் ஒன்றும் பெரிதாகக் குடி முழுகிப் போய்விடவில்லை என்ற தெளிவு ஏற்பட்டது. சாயபு நிலங்களில் வேலை செய்ய கிராமத்தினர் முன்வந்தனர்.

சிலருக்கு விவசாய உபகரணங்களில் பயிற்சி ஏற்பட்டு வேலை வாய்ப்பும் அதிகரித்தது. சிறு நில உடமையாளர்கள் அவரது டிராக்டரை வாடகைக்கு எடுத்து தங்கள் நிலங்களை உழுது கொண்டார்கள். நிலங்களுக்கு புதிய உரங்கள் பற்றி அறிந்து கொண்டார்கள். விவசாய பிரச்னைகளில் சாயபுவின் பங்களிப்பு கணிசமாக இருந்தது.

தவிரவும் சில முஸ்லிம் பண்டிகைகள் போதும், தன் வீட்டு விசேஷங்களின் போதும், சாயபு, தனக்கு வேலை செய்த கிராம மக்களோடு மற்றவர்களையும் டவுனில் இருந்த தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பது வழக்கமாயிற்று. அப்படி வருகிறவர்களில் சைவர்களுக்கு தனியே ஒரு கொட்டகையில் சைவ சமயல்காரர்கள் அமர்த்தப்பட்டு விசேடமாக கவனித்துக் கொள்ளப்பட்டார்கள்.

அவ்விருந்துகளில் அசைவ உணவுக் கொட்டகையில் உண்ணும் கீழ்த்தட்டு கிராம மக்கள் வேறுபாடின்றி சாயபுவும் தங்களுடன் கூட சமமாக அமர்ந்து உண்பது வியப்புடன் பேசப்பட்டது.. அதே விருந்துகளில் சைவ உணவுக் கொட்டகைகளில் உணவருந்தும் கிராம மக்கள் சமூக சாதீய ஏணிகளில் தத்தம் இடம் பொறுத்து தனிக்குழுக்களாக உண்பதும் ரகசியமாக விவாதிக்கப் பட்டது.

வயல் சம்பந்தமான வேலைகளுக்கு சாயபு வந்தால் பாட்டி வீட்டின் பின்புறமுள்ள கொட்டகைகளில் சிறிது நேரம் இருப்பார். வேலிப்பக்கம் வரும்போது பாட்டியைக் கண்டால் “செளக்கியமா இருக்கியளா” என்பார். பாட்டியும் பதிலுக்கு “உங்கள் குழந்தை குட்டியெல்லாம் செளக்கியமா” என்பாள்.

ஒவ்வொரு முறையும் வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை என்று ஏதாவது பழம் வாங்கிக் கொண்டுவந்து தன் ஆட்களிடம் கொடுத்து பாட்டிக்கு கொடுக்கச் சொல்வார். தன்தேவைக்கு எஞ்சியதை பாட்டி அந்தத் தெரு வீட்டினருக்கு பகிர்ந்து கொடுத்து விடுவாள். ‘வீட்டுக் கொல்லையில காவலுக்கு ஆளு.

காலணா வாடகை இல்ல. வாராவாரம் தினுசு தினுசா பழம். பாட்டி அதிருஷ்டக்காரிதான்’ என்று பாட்டியின் மீது அவர்களுக்கு ஒரு மெலிதான பொறாமை இருந்தாலும், அந்தத் தெருவினர் பாட்டியை நன்றாக கவனித்துக் கொண்டார்கள்.

பாட்டி வீட்டின் கொல்லையில் ஒரு துளசி மாடம் இருந்தது. அது காரையால் கட்டப்பட்ட மாடம், வெடிப்பு ஏற்பட்டு இத்தாலிய பிசா கோபுரம் போல ஒரு புறம் சாய்ந்து இருக்கும். அதன் மேல் ஒரு துளசிச் செடி உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும்.

பாட்டி மாடத்தருகே கிருஷ்ண கிருஷ்ண என்று செபித்தவாறே அமர்ந்திருப்பது வழக்கம். அந்த சாய்ந்த மாட்த்தைப் பார்க்க சாயபுவுக்கு மனக்கஷ்டமாக இருக்கும். எங்கேயாவது இந்த மாடம் இடிந்து பாட்டி மேலே விழுந்து விடுமோ என்ற அச்சம் தோன்றும்..

சாயபு தன் கொட்டகைக்கு சிமிண்டு தளம் போட்டார். அதை மேற்பார்வை செய்ய வந்தபோது, பாட்டி வீட்டு துளசி மாடத்தையும் செப்பனிட்டுக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. அவர் வேலிப்பக்கம் போய் பார்த்தபொது பாட்டி வீட்டில் இல்லை.. பாட்டி வந்தவுடன் அவள் அனுமதியுடன் ஒரு புது துளசிமாடம் கட்டிக் கொடுக்கச் சொல்லிவிட்டு டவுனுக்கு வேறு அலுவலாகப் போனார்.

கொட்டகை தளம் போட்ட சாயபுவின் ஆட்கள் பாட்டி வீட்டில் கதவைத் தட்டியபோது அவள் இன்னம் வரவில்லை. கலந்துவிட்ட ஈர சிமிண்டு காய்ந்து வீணாகுமுன் மாடம் கட்டிவிடும் ஆர்வத்தில் கொல்லை வேலியைத் தாண்டிக்குதித்து ஒரு கடப்பாரையால் மாடத்தை உடைக்கலானார்கள். அப்பொழுது எதிர்பாராவிதமாக உள்ளே வந்த பாட்டி நடப்பது கண்டு வெகுண்டு அவர்களை வெளியில் விரட்டினாள்.

மறுநாள் சாயபு கொட்டகைக்குள் நுழைந்தவுடன் பாட்டி வேலியோரம் போய்
சினத்துடன் அவரை அழைத்தாள். “சாயபு இங்க வாரும். உங்காளுங்க பண்ண அக்ரமத்தைப் பாரும். கேட்டா நீங்க சொல்லி செஞ்சேங்கிறாங்க. இது நீங்க என்னை இங்கே இருந்து விரட்டறதுக்கு வழியா? இதுக்குப் பதிலா கடப்பாரைய என் மண்டையில போட்டிருக்கலாமே?” என்று பெருங்குரலில் அழுதாள். சாயபு சொன்ன சமாதானம் அவள் காதில் விழவில்லை.

சிறிது நேரம் கழித்து சாயபு, “தப்பா நெனச்சீங்காதம்மா. உங்களை என் தாயாரா நெனச்சுதான் நீங்க இங்க இருக்க சம்மதிச்சேன். என் தாயாரை கடைசிக் காலத்துல காப்பாத்தற பாக்கியம் எனக்கு இல்லாம போயி, அவங்க தனியா செத்தாங்க. உங்களுக்கு

நல்லது பண்றதா எண்ணி, உடைசல் மாடம் உங்க மேல விழுந்துருமோன்னுதான் புதிசாக் கட்டித்தரச் சொன்னேன். இது உங்களை இப்படிப் பாதிக்கும்னு தெரிஞ்திருந்தா நான் ஒருக்காலும் இந்தத் தப்பை பண்ணிருக்கமாட்டேன். என்னை மன்னிச்சிருங்க” என்றார்.

பாட்டி சற்று சமாதானமாகி, “சாயபு இங்க வாருங்கோ. கொல்லை வழியா வேலி ஏறிக்குதிச்சு வரவேண்டாம். வீட்டு வாசலாலயே வாங்கோ. இது உங்க வீடுதானே” என்றாள்.

சற்று திகைப்புடன் சாயபு வீட்டைச் சுற்றி வந்து வாசல் வழியே நுழைந்து கொல்லைக்குள் போகும்போது பாட்டி அந்த உடைந்த மாடத்தை அணைத்தபடி
மயங்கியிருந்தாள். சாயபு செய்வதறியாது திகைத்து, ராமகிருஷ்ணனை அழைக்க அவர் வந்து பார்த்து விட்டு “பாட்டி போயிட்டா. பொண்ணுக்கு சொல்லி அனுப்பணும்” என்றார்.

நடந்த சம்பவத்தை ராமகிருஷ்ணனிடம் சொல்ல அவர் சாயபுவைத் தேற்றினார். சாயபு ஒரு வாடகைக் காரை அனுப்பி சிதம்பரத்திலிருந்து பாட்டியின் பெண் மாப்பிள்ளையை வரவழைத்தார். இறுதிச்சடங்குக்கான பொருள்களைத் தானே தருவித்துக் கொடுத்ததுடன், சவ ஊர்வலத்திலும் கலந்து கொண்டார்.

தாங்களே கலந்து கொள்ள அதிக விருப்பமில்லாத ஒரு மூதாட்டியின் சவ ஊர்வலத்தில் ,கார், வண்டி என்று சகல வசதியுமுள்ள ஒரு வேற்று மத பெருந்தனக்காரர் தன் சொந்த உறவினர் மறைவில் கலந்து கொள்வது போல கொண்டு, சவ ஊர்வலத்தின் பின்னால் கடைசி வரை நடந்து போனது கிராமத்து
மக்களிடம் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மாப்பிள்ளை கொள்ளி போட ஈமக்கிரியை நன்கு நடந்தது.
இருவாரம் கழித்து எல்லாச் சடங்குகளும் முடிவுற்ற நிலையில், வீட்டில் இருந்த பாட்டியின் உடமைகள் ஆயப்பட்டு அதில் தேறக் கூடிய சில பொருள்கள் மூட்டை கட்டப்பட்டு, மற்றவை குப்பையாக மூலையில் எறியப்பட்டன.

பாட்டியின் பெண்ணும் மாப்பிள்ளையும், அவர்கள் கிளம்பத் தயாரான நிலையில், சாயபுவை அழைத்து “உங்க உபகாரத்துக்கு ரொம்ப
நன்றி. வந்து உங்க வீட்டைபார்த்துக்குங்க. இதோ சாவி” என்று ஒப்படைத்தார்கள்.

வீட்டை அவருக்குச் சுற்றிக் காட்டி கொல்லைப்புறம் அந்த இடிந்த மாடத்தருகே வந்தார்கள்.

சாயபு மிகுந்த குற்ற உணர்வுடன், “நாந்தான் உங்க அம்மாவைக் கொன்னூட்ட மாதிரி தோணுது. இந்த மாடம் இடிஞ்சதில ரொம்பவும் நொந்து போயிட்டாங்க” என்றார்.

சாந்தி “உங்களைச் சொல்லி குத்தமில்ல. அவளுக்கு போகற நேரம் வந்துடுத்து. மாடத்துகிட்டயே பிராணனைவிட்டது அதிசயமாவே இருக்கு. நான் பொறக்கறதுக்கு முன்னால எங்கம்மாக்கு ஒரு ஆண்குழந்தை இருந்துதாம். அது மூணு வயசு வரைக்கும் இருந்து செத்துப் போயிடுத்தாம்.

அது சாகரதுக்கு ஒரு வாரம் முன்னாலதான் இந்த மாடத்தைக் கட்டினாங்களாம். காரை உலர்ந்து போறதுகுள்ள அந்தக்குழந்தை ஓடி வந்து மாடத்¨தை தொட்டுடுத்தாம். அது உள்ளங்கை அடையாளம் அப்படியே அங்கே பதிஞ்சிட்டுதாம். அம்மா அடிக்கடி அதைப்பார்த்து ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு அழுதுக்கிட்டு இருப்பாங்க. அப்புறமா நான் பொறந்து அவங்களுக்கு வாழ்க்கயில ஒரு பிடிப்பு உண்டாச்சாம்.

நானே ஒரு தடவை புதுசா மாடம் கட்டலாமான்னு கேட்டதுக்கு “எனக்குக் கொள்ளி போட வேண்டியவன் முத்திரை வெச்சிட்டு போயிருக்கான். அதை என் காலத்துல அழிக்க மாட்டேன்”னு அழுதிருக்காங்க: என்றாள். அந்த மாடத்தருகே போய் இடியாமல் இருந்த அடிப்பாகத்தில் தரையிலிருந்து ஓரடி உயரத்தில் கூர்ந்து பார்த்தால் மட்டும் புலப்படக்கூடிய, குழந்தையுடைய மெலிதான கைப்பதிவைக் காட்டினாள். சாந்தியின் கணவரும் சாயபுவும் வியப்புடன் அதைப் பார்த்தார்கள்.

“உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, நான் பார்க்காத என் அண்ணன் நினைவா நான் இதை எடுத்துக்கலாமா” என்று கேட்டு சாந்தி அந்த மாடத்தின் இடிபாடைக் காட்டினாள். “கவலைப்படாதீங்க. ஆளை வெச்சு அதை பத்திரமா பேர்த்து எடுத்து சிதம்பரத்துல உங்க வீட்டில சேர்க்கறது எம்பொறுப்பு” என்றார் சாயபு.

பின்னாட்களில் பள்ளி ஆசிரியர் ஒருவர் குடிபுகுந்தவுடன் குழந்தைகள் அந்த வீட்டை ‘வாத்தியார் வீடு’ என்று அழைத்தார்கள். ஆனால் கிராம மக்களால் ‘சாயபு வீடு’ என்றே அழைக்கப்பட்டாலும் அதில் முன்பு தொனித்த இகழ்ச்சி, ஏளனக் குறிப்புகள் இல்லாமல் போனது காலப்போக்கில் நிகழ்ந்த மக்களின் மனமாற்றத்துக்கும் மதநல்லிணக்கத்துக்கும் சான்றாகவே திகழ்ந்தது.

நன்றி:செந்தமிழ்.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s