இலக்கியம் / சமூகம் / மணவை முஸ்தபா / classic launguage / Tamil

தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களுடன் ஒரு பேட்டி!

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்குத் தக்கவாறு தமிழ்மொழி முன்னேற வேண்டும் என்கிற எதிர்கால நோக்குடன் பணியாற்றும் வெகுசிலருள் ஒருவர் மணவை முஸ்தபா.

நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் ஏழு கலைச்சொற் களஞ்சிய அகராதிகளாகும். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்கிற ஒரு அமைப்பையும் நிறுவியுள்ளார்.

தற்போது தென்மொழிகள் புத்தக நிறுவன நிர்வாகப் பதிப்பாசிரியராக இருக்கும் மணவை முஸ்தபா, யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பு தொடங்கப்பட்ட காலம் தொடங்கி சமீபத்தில் அது நின்று போனது வரை, அதன் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் இருந்தார்.

அறிவியல் தமிழ், யுனெஸ்கோ கூரியர் தமிழ் பதிப்புப்பணி, தமிழை செம்மொழி ஆக்குவது இவை தொடர்பாக நீண்டநேரம் பேசினார் மணவை முஸ்தபா. இனி நேர்காணல்.
Manavai Mustafa

தீராநதி: விரைவில் அழிந்துவிட சாத்தியமுள்ள மொழிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை, சமீபத்தில் யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது என்றும் அதில் தமிழ் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. யுனெஸ்கோவில் பணியாற்றியவர் என்கிற முறையில், எதனடிப்படையில் இந்த ஆய்வறிக்கை செய்யப்பட்டுள்ளது என்று சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

மணவை முஸ்தபா: முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். யுனெஸ்கோ அறிக்கையில் தற்கால தேவைகளுக்கும் அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்றங்களுக்கும் ஈடுகொடுக்காத மொழிகள் அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. மற்றபடி தமிழ் அழிந்துவிடும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இங்கே சிலர் அந்த அறிக்கை பற்றி முழுமையாக அறியாமல் தமிழ் அழிந்து விடும் என்கிற பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள். இது தவறு.

இனி உங்கள் கேள்விக்கு வருகிறேன். ஒரு வகையில் யுனெஸ்கோவின் இந்த அறிக்கைக்கு அஸ்திவாரம் போட்டவன் நான்தான். யுனெஸ்கோ கூரியர் 1998, பாரிஸ் மாநாட்டில் நான் ஒரு கருத்தை முன் வைத்தேன். பல நாடுகள் காலனி நாடுகளாக இருந்து விடுதலையடைந்துள்ளன.

ஆனால் விடுதலையடைந்த அந்நாடுகளில் ஆட்சி அதிகாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டதே தவிர, மொழி ஆதிக்கம் அகலவில்லை. இதனால் பல மொழிகள் நசிந்து _ இல்லையென்று ஆகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அம்மொழிகள் வாழ்வதற்கு அல்லது தங்களை வலுப்படுத்திக்கொள்ள உள்ள சாத்தியங்கள் பற்றி ஆய்வு பூர்வமாக ஒரு தனிச் சிறப்பிதழ் வெளியிட வேண்டும் என்று சொன்னேன்.

இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்புறம் ஆய்வுக் குழுக்கள் உருவாக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உலகில் மொத்தம் ஆறாயிரம் மொழிகள் உள்ளன. இவற்றில் தமிழ், சமஸ்கிருதம், லத்தீன்,கிரேக்கம், ஹீப்ரு, சீனம் ஆகிய ஆறு மொழிகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

ஆறாயிரம் மொழிகளில் இன்று எழுத்து, இலக்கியப் படைப்புகள் இருக்கக் கூடியவை மூவாயிரம் மொழிகள். இந்த மூவாயிரம் மொழிகளில் கணினி போன்ற அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் காலத் தேவைகளுக்கு ஈடுகொடுத்து முன்னேறும் மொழிகள் வாழும்; மற்றவை அனைத்தும் அழிந்துவிடும் வாய்ப்புள்ளது என்பது யுனெஸ்கோ ஆய்வின் முடிவு.

இதன்படி சிறந்த மொழிகள் என்று அது ஐம்பது மொழிகளை வரிசைப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் தமிழ் ஒன்று. மற்றபடி தமிழ் அழிந்துவிடும் என்று யுனெஸ்கோ சொல்லவில்லை. கணினியின் தேவைக்கு ஒரு மொழி ஈடு கொடுக்க முடியவில்லை என்றால் அது அழிந்துவிடும் என்பது நிதர்சனம். இது யுனெஸ்கோ சொல்லித்தான் நாம் தெரிய வேண்டும் என்பதில்லை.

ஆனால், கம்ப்யூட்டருக்கு ஈடுகொடுக்கக் கூடிய தன்மை மற்ற எந்த இந்திய மொழிகளையும்விட தமிழுக்கு அதிகம் உள்ளது என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. இந்த வகையில் உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் நிறைய முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

எனவே, தமிழ் அழிந்துவிடும் என்கிற வாதத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை. அதற்கென்று நாம் சும்மா இருந்துவிட முடியாது. காலத்தினுடைய தேவையையும் போக்கையும் அனுசரித்து தமிழ் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.

தீராநதி: அவ்வகையில் இப்போது உடனடியாகச் செய்யவேண்டிய பணிகள் என்று எதனைச் சொல்வீர்கள்?

மணவை முஸ்தபா: தமிழ் எழுத்துக்கள் சீர்திருத்தம் உடனடியாக கட்டாயம் செய்யப்பட வேண்டும். ஏனெனில், 247 எழுத்துக்களில் பெரியார் எழுத்துச் சீர்மைக்குப் பிறகும் 131 எழுத்துக்கள் என்பது, குழந்தைகளுக்கு மொழி மீது ஒரு வெறுப்பை உருவாக்க காரணமாக உள்ளதோ என எண்ண வேண்டியுள்ளது. மேலும் எழுத்துகளைக் குறைக்கும் போதுதான் அதனை சுலபமாகக் கணினியிலும் கையாள முடியும்.

ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள்தான் உள்ளன. அதில் மூன்று வகையான வடிவங்கள் இருந்தன. இன்று அதனை தேவையில்லாத ஒரு சுமை என்று கருதி எடுத்துவிட்டார்கள். கேப்பிட்டல் லெட்டரைதான் வாக்கியத்தின் முதல் எழுத்தாக பயன்படுத்த வேண்டும் என்ற மன நிலையும் மாறிவிட்டது.

சீன மொழியை மேலிருந்து கீழாக எழுதிக் கொண்டிருந்தார்கள். கணினியில் சீனத்தைப் பயன்படுத்த இது தடையாக உள்ளது என்பதால் அதை மாற்றி நேர்க் கோட்டில் எழுதத் தொடங்கி விட்டார்கள். இதுபோல் தமிழில் சில சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் தமிழை சிறப்புடையதாக்க முடியும்.

குறிப்பாக ஒலியை மாற்றாமல் வரி வடிவங்களில் மட்டும் மாற்றங்களைச் செய்யலாம். 31 எழுத்துக்களை மட்டுமே வைத்துக் கொண்டு 247 ஒலியும் வரும்படி தமிழைப் பயன்படுத்த முடியும்.

இரண்டாவது, இலக்கணம் மாற வேண்டும். தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூல். அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதன் பிறகு ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை, இலக்கியப் படைப்புகளை மையமாகக் கொண்டு நன்னூல் என்னும் இலக்கண நூல் உருவாக்கப்பட்டது. நன்னூலுக்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன.

ஆனால் இன்றுவரை மாற்றியமைக்கப்பட்ட ஒரு இலக்கண நூல் வரவில்லை. மொழியியல் அறிஞர்கள் குழு செய்ய வேண்டிய மிகப்பெரிய பணி இது. மூன்றாவதாக அறிவியல் தொழில் நுட்பத்துக்கான புதிய கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். இந்த மூன்றும் மிக முக்கியமான பணிகள் என்று நான் கருதுகிறேன்.

தீராநதி: யுனெஸ்கோ கூரியர் பத்திரிகையின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தவர் நீங்கள். யுனெஸ்கோ கூரியர் தமிழ்ப் பதிப்பு வெளிவர காரணமாக இருந்தவர் யார் என்று சொல்ல முடியுமா?

மணவை முஸ்தபா: யுனெஸ்கோ கூரியர் உலக அளவில் ஆறு மொழிகளில் மட்டும்தான் முதலில் வெளியாகி வந்தது. கன்னிமாரா நூலகத்திற்கு ஆங்கில பதிப்பு வரும். அங்கே யுனெஸ்கோ கூரியருக்கு அண்ணா வாசகர். யுனெஸ்கோ கூரியர் படிப்பதற்காக மட்டுமே கன்னிமாரா நூலகத்துக்கு அவர் சென்ற தினங்களும் உண்டு.

1967ல் முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது, யுனெஸ்கோ பேரமைப்பின் துணை இயக்குநராக இருந்த ஆதிசேஷையா அதில் கலந்து கொண்டார். அப்போது அண்ணா அவரிடம் கூரியர் தமிழில் வெளியாக ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்கான முயற்சிகளில் ஆதிசேஷையா ஈடுபட்டபோது இந்திய அரசாங்கத்திடமிருந்து அவருக்கு எதிர்ப்புகள் வந்தன. இந்தியில்தான் யுனெஸ்கோ கூரியரை கொண்டுவர வேண்டுமென்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இந்தி இந்தியாவில் மட்டும்தான் ஆட்சி மொழி. ஆனால் தமிழ் தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளிலும் ஆட்சிமொழியாக உள்ளது.

மலேசியாவில் பாராளுமன்ற மொழியாக உள்ளது. எனவே தமிழை சர்வதேச மொழியாக எடுத்துக் கொண்டு தமிழில் கொண்டுவர வேண்டும். இரண்டு வருடம் சென்று இந்தியில் கொண்டு வரலாம் என்றார் ஆதிசேஷையா. இது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மொரார்ஜி தேசாய் கூரியர் தமிழ் பதிப்பை 1967ல் தொடங்கி வைத்தார். ஆதிசேஷையா 1975ல் சென்னை வந்து துணைவேந்தர் பொறுப்பை ஏற்றபோது என்னை கூரியரின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் நியமித்தார்.

தீராநதி: யுனெஸ்கோ கூரியர் தமிழ் படிக்க சிரமமானது என்கிற விமர்சனத்தை ஏற்றுக் கொள்வீர்களா?

மணவை முஸ்தபா: யுனெஸ்கோ கூரியர் மொத்தம் 78 மொழிகளில் முயற்சி செய்யப்பட்டது. அதில் முப்பது மொழிகளில் மட்டும்தான் தொடர்ந்து வெளியானது. இந்த முப்பது மொழிகளில் வெற்றிகரமாக வெளிவந்தது தமிழ் என்று சொல்லலாம்.

மூலத்தில் இருப்பதுபோலும், அதே நேரத்தில் மொழிபெயர்ப்பு என்ற எண்ணத்தை தராமல் தாய்மொழியிலேயே படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் பதிப்புகள் எவை எவை என்று யுனெஸ்கோ செய்த ஆராய்ச்சியின் முடிவில் தமிழ் நான்காவது இடத்தில் வந்தது.

ஒவ்வொரு மொழியிலும் உலகெங்குமுள்ள அம்மொழி சார்ந்த அறிஞர்களுக்கு கூரியர் இதழ்கள் அனுப்பப்பட்டு அவர்கள் தந்த பதில்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனவே கூரியர் தமிழ் படிக்க சிரமமானது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. கூரியர் வாசகர்களின் விருப்பத்துக்கு தீனி போடும் பத்திரிகையல்ல.

வாசகர்களுக்கு புதிய விஷயங்களை அறிமுகம் செய்து அவர்களை மேம்படுத்தும் பத்திரிகை. புதிய விஷயங்கள், குறிப்பாக அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்கள்தான் கூரியரில் அதிகம் வெளியானது. அறிவியல் பற்றி எழுதும் போது புதிய கலைச் சொற்கள் காரணமாக ஒரு கடினத்தன்மை இருக்கும். ஏமம் என்றால் பாதுகாப்பு என்று பொருள்.

நோய் எதிர்ப்பு சக்திகள் ஒவ்வொன்றாக குறைந்து வருவதுதான் எய்ட்ஸ். எனவே இதனடிப்படையில் எய்ட்ஸ் என்பதற்கு ஏமக்குறைவு நோய் என்று நாங்கள் பயன்படுத்தினோம். இது சாதாரண வாசகர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

தீராநதி: ஆனால் எய்ட்ஸ் போன்ற மக்கள் புழக்கத்துக்கு வந்துவிட்ட வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தலாம்; அதற்கு ஒரு புதிய சொல்லை உருவாக்கி பயன்படுத்துதல் தேவையில்லாதது என்று சொல்லப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

மணவை முஸ்தபா: எய்ட்ஸ் என்று சொல்வதில் ஒரு தவறுமில்லை. ஆனால், நம் மொழியில் அதற்கு ஒரு கலைச்சொல்லை உருவாக்குவது காலத்தின் தேவை. டி.வி. என்றால் உலகம் முழுவதும் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் தொலைக்காட்சி என்று நாம் ஒரு சொல்லை உருவாக்கியுள்ளோம்.

இப்படி நிறைய கலைச் சொற்களை உருவாக்கும் போதுதான் அம் மொழி அழிந்துவிடாமல் காப்பாற்றப்படும். இப்படி ஒவ்வொன்றாக நாம் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கினால் அப்புறம் தமிழ் மொழியில் தமிழ் சொற்களை விட பிறமொழி சொற்கள்தான் அதிகமிருக்கும்.

தீராநதி: நெட்வொர்க் (network) என்பதற்கு வலைப் பின்னல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் பிணையம் என்று குறிப்பிடுகிறீர்கள். இது ஏன்?

மணவை முஸ்தபா: நெட்வொர்க்க்கு வலைப்பின்னல் என்று சொல்வது சொல்லுக்குச் சொல் (வெர்பல்) மொழிபெயர்ப்பு. கணினிகள் ஒன்றையன்று பிணைத்துக் கொண்டிருப்பதால் பிணையம் என்பதுதான் சரியான தமிழ்ச் சொல்.

தீராநதி: யுனெஸ்கோ கூரியரில் பணியாற்றிய அனுபவம், அதன் முக்கியத்துவம் குறித்து கூற முடியுமா?

மணவை முஸ்தபா: புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படும் அறிவியல் தொழில்நுட்பச் செய்திகள் அனைத்தும் உடனுடனே யுனெஸ்கோ கூரியரில் வெளியாகும். அறிவியல், கலை, கல்வி, பண்பாடு சார்ந்த விஷயங்களைப் பொறுத்த வரைக்கும் சமீப வளர்ச்சியைப் பற்றியதாகத்தான் பத்திரிகை முழுக்க இருந்தது.

அவற்றை பத்து நாட்களுக்குள் மொழிபெயர்த்து இதழைக் கொண்டு வரவேண்டும். தேவை ஏற்படுகின்ற போது ஏற்படும் வேகம், அதனால் நிறைய சொற்களை உருவாக்கி பயன்படுத்தும் வாய்ப்பு எனக்கு கூரியர் மூலமாக கிடைத்தது.

உலகத் தமிழ் மாநாடுகளுக்கு செலவழிக்கப்பட்ட சக்தி, பணம், காலம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது மாநாட்டால் விளைந்த பலன்கள் மிகக் குறைவுதான். இதனுடன் ஒப்பிடும்போது கூரியர் தமிழ் பதிப்பு செய்துள்ள பணிகள் மேலானவை என்றுதான் கருதுகிறேன்.

1984ல் தமிழர்களின் வாழும் பண்பாடு (Living Culture of Tamils) என்று ஒரு சிறப்பிதழ் கூரியரிலிருந்து வெளிவந்தது. ஆப்பிரிக்கா, ஜப்பான், சீனா, நாடுகளின் பிரபல பத்திரிகைகள் அதிலிருந்த தமிழ் கலை _ பண்பாடு பற்றிய கட்டுரைகளை மறுபிரசுரம் செய்து வெளியிட்டன.

இதனால் உலகம் முழுக்க உள்ள அறிஞர்களுக்கு தமிழ்ப் பண்பாடு பற்றிய ஒரு அறிமுகம் கிடைத்தது. அதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தை அது ஏற்படுத்தியது. இதனை யுனெஸ்கோ கூரியர் தமிழ் பதிப்பு செய்த முக்கியமான ஒரு பணி என்று கருதுகிறேன்.

தீராநதி: யுனெஸ்கோ கூரியர் ஏன் நிறுத்தப்பட்டது?

மணவை முஸ்தபா: யுனெஸ்கோ தன்னுடைய பொருளாதார தேவைகளுக்காக மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவைச் சார்ந்திருந்தது. அமெரிக்கா யுனெஸ்கோவிலிருந்து விலகியதும் இந்த வருமானம் நின்று போகவே பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

எனவே ஒவ்வொரு திட்டங்களாக நிறுத்தி செலவைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை யுனெஸ்கோவுக்கு ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாக யுனெஸ்கோ கூரியர் பதிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

ஆனால் இந்த நிறுத்தம் தற்காலிகமானதுதான். அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் சேர்ந்து அதன் நிதி நிலைமைகள் சீரடையும் பட்சத்தில் மீண்டும் கூரியர் தமிழில் வெளியாகலாம்.

தீராநதி: தமிழை செம்மொழி ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முதன்முதலாக முன்வைத்தவர் நீங்கள். தொடர்ந்து இன்றுவரை அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறீர்கள். தமிழை செம்மொழி ஆக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?

மணவை முஸ்தபா: தமிழ் மிகவும் பழமையான ஆறு மொழிகளில் ஒன்று என்பதால் உலகம் முழுக்க பல்கலைக் கழகங்களில் அதற்குத் தனியாக ஒரு துறை இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் பாரிஸில் சபோன் பல்கலைக் கழகத்துக்குப் போயிருந்த போது கீழ்த்திசை மொழிகள் பிரிவில் சமஸ்கிருதத் துறையின் ஒரு பகுதியாகதான் தமிழ் இருப்பதைப் பார்த்தேன். அங்கிருந்த தமிழறிஞர் ஜீன்யிலியோஸா, இங்கு மட்டுமல்ல உலகெங்கும், தமிழ் கீழ்த்திசை மொழிகளில் ஒன்றாகவே உள்ளது.

சமஸ்கிருதத்துக்கு இருப்பது போல் தனித்துறை அமைய தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெறவேண்டும் என்றார். எனவே 1981ல் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தமிழை செம்மொழி ஆக்க வேண்டிய அவசியம், அதன் தகுதிகள், செம்மொழி ஆக்குவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிப் பேசினேன்.

அதைக் கேட்ட அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். “இதனை ஒரு கோரிக்கையாக எழுதித் தாருங்கள். கட்டாயம் செய்ய வேண்டிய பணி இது” என்று சொன்னார்.

ஒரு மொழி செம்மொழி ஆக்கப்பட வேண்டுமென்றால் பதினோரு அம்சங்களில் அது தகுதியுடையதாக இருக்க வேண்டும் என்று வகைப்படுத்தியுள்ளார்கள். தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுநிலைமை, தாய்மைத் தன்மை, பண்பாடு, கலை, பட்டறிவு, பிறமொழித் தாக்கமின்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, மொழியியல் கோட்பாடுகள் இவைதான் தகுதிகள். செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மொழிகளுமே இந்த பதினோரு அம்சங்களிலும் தகுதியுடையவை என்று சொல்ல முடியாது.

குறிப்பாக சமஸ்கிருதம் ஏழு அம்சங்களில்தான் பொருந்துகிறது. ஆனால் பதினொரு அம்சங்களிலும் தகுதியுடைய மொழியாக தமிழ் இருக்கிறது என்பதை எம்.ஜி.ஆருக்கு விரிவாக எழுதினேன். அதை அவர் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளருக்கு அனுப்பினார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

கலைஞர் 1989_ல் ஆட்சிக்கு வந்த பிறகு அவரது விருப்பத்திற்கிணங்க அன்றைய கல்வியமைச்சர் அன்பழகன், “தமிழுக்கு என்ன என்ன செய்ய வேண்டும்” என்று என்னைக் கேட்டார். செம்மொழி ஆக்கும் திட்டத்தை சொன்னேன். அதற்கான முயற்சிகளை கலைஞர் அரசு எடுத்தது.

ஆனால் அது செயல்பாட்டுக்கு வரும்போது ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. 1995ல் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் ஜெயலலிதா அவர்கட்கு செம்மொழி பற்றி எழுதினேன். உடனே அவர்கள் அதற்கு ஒரு கமிட்டி நியமித்து, கமிட்டியின் முடிவை மத்திய அரசுக்கு அனுப்பினார்கள்.

அத்தோடு சரி. மீண்டும் தி.மு.க. அரசு அமைத்தபோது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக மத்திய அரசு மைசூரில் இருக்கும் மொழியியல் ஆய்வு மையத்துக்கு அந்த விண்ணப்பத்தை அனுப்பியது. அவர்கள் ஆய்வுகள் செய்து செம்மொழி ஆக்கத் தகுதியுடைய மொழிதான் தமிழ் என்று மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பினார்கள்.

தீராநதி: அப்புறமும் ஏன் இன்றுவரை தமிழை செம்மொழி ஆக்குவதில் தடங்கல்கள் உள்ளன?

மணவை முஸ்தபா: இந்தியா என்றால் இந்து மதம்தான்; இந்தியர்கள் என்றால் இந்துக்கள்தான்; இந்தியாவின் ஒரே பழம்பெரும் மொழி சமஸ்கிருதம்தான் என்ற மனநிலை உலகம் முழுக்க ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், தமிழ் செம்மொழி ஆக்கப்படுவது அதற்கு ஒரு தடையாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

எனவே அதனைத் தடுக்கிறார்கள்; அல்லது தட்டிக் கழிக்கிறார்கள். தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டால் சமஸ்கிருதமும் தமிழும் ஒப்பிட்டாய்வு செய்யப்படும். அப்போது தமிழின் முக்கியத்துவம் உலகுக்குத் தெரியவரும்.

தீராநதி: தமிழ் செம்மொழி ஆக்கப்படுவதன் மூலம் என்ன நன்மைகள் விளையும்?

மணவை முஸ்தபா: முதலில் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு தனியாக ஒரு துறை ஏற்படுத்தப்படும். இதனால், தமிழ் பண்பாடு, இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் அதிகம் நடக்கும். இப்போது கல்வெட்டு, ஓலைச்சுவடி போன்றவை தொடர்பான ஆய்வுகள் சமஸ்கிருதத்தை அளவுகோலாகக் கொண்டு செய்யப்படுகின்றன.

அளவுகோலைப் பொறுத்துதான் முடிவுகள் அமையமுடியும். தமிழ்நாட்டில் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக்களை வைத்து சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் வந்தது என்று அறிவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் செம்மொழி ஆக்கப்படும் போது தமிழ் அளவுகோலாக மாறும். இதனால், நிறைய உண்மைகள் வெளிவர வாய்ப்புகள் உருவாகும்.

மேலும் இக்காலக்கட்டத்துக்கு ஏற்றபடி தமிழ்மொழியை அறிவியல் பூர்வமாக வளர்ப்பதற்கும் வளப்படுத்துவதற்கும் ஆராய்ச்சிகளுக்கும் நிதியுதவிகள் அதிகம் கிடைக்கும்.

தீராநதி: தமிழில் அறிவியல் கலைச்சொற்களை உருவாக்கும் பணியை ஒரு தீவிரத்துடன் செய்து வருகிறீர்கள். இந்த ஆர்வம் எப்படி உருவானது என்று சொல்ல முடியுமா?

மணவை முஸ்தபா: படிக்கும் காலத்தில் தமிழுக்கு நிறைய செய்ய வேண்டும் என்கிற வெறித்தனமான ஆசை என்னிடம் இருந்தது. ஆனால், என்ன செய்வது, எப்படிச் செய்வது என்பது குறித்து எந்த திட்டமும் இல்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து படிப்பு முடிந்து வெளியே வந்தவுடன், சேலம் அரசினர் கலைக்கல்லூரி ஆசிரியர் பணிக்காக எனக்கு ஆணை வந்தது.

அதனை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரிடமும் எனது குருநாதர் தொ.பொ. மீ. அவர்களிடமும் காண்பித்து ஆசி பெற்று வருவதற்காக பல்கலைக்கழகம் போனேன். அப்போது அங்கே, பயிற்றுமொழி ஆங்கிலமா? தமிழா? என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

தமிழால் முடியாது; கலைச் சொற்கள் இல்லை; அறிவியலை தமிழில் சொல்லிக் கொடுக்கும் மனநிலை ஆசிரியர்களிடம் இல்லை; படிக்கும் மனநிலை மாணவர்களிடமும் இல்லை; படித்தால் வேலை கிடைக்காது… இந்தவிதமாகவே அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் ஒருவர், “தமிழை பயிற்றுமொழியாக்குவது எதிர்கால சந்ததியினரை குழிதோண்டிப் புதைக்கிற முயற்சி” என்று சொன்னார்.

என்னால் இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடலே எரிந்து விடும்போல் இருந்தது. நிதானமிழந்துவிட்ட நிலையில் எழுந்து நின்றுவிட்டேன். பேராசிரியர் இதனைப் பார்த்து பேச்சை நிறுத்திவிட்டார். நான் மேடைக்கு சென்றேன்.

எத்தகைய அறிய அறிவியல், தொழில் நுட்பச் செய்திகளையும் தமிழால் தரமுடியும். எப்படி என்று கேட்பவர்களுக்கு வாய்ச்சொல்லால் விளக்கம் தராமல் செயல்மூலம் நிறுவுவதையே வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாகக் கொண்டு, எனக்கு கிடைத்துள்ள கல்லூரி ஆசிரியர் பணியை இப்போதே விட்டுவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு மேடையிலேயே பணிக்கான ஆணையை கிழித்துப் போட்டேன்.

அன்று தொடங்கி அறிவியல் சார்ந்த செய்திகளை தமிழில் கொண்டு வருவதுதான் என் கடமை என்று முடிவு செய்து பணியைத் தொடங்கினேன்.

தீராநதி : தெ.பொ.மீ. மகாவித்துவான், ச.தண்டபாணி தேசிகர், தேவநேயப் பாவாணர் இவர்கள் மூன்று பேருடனும் நெருக்கமாக இருந்தவர் நீங்கள். இவர்களுடனான நெருக்கம் உங்கள் ஆளுமையை உருவாக்குவதில் எந்த அளவுக்கு பங்களித்துள்ளது என்று சொல்லமுடியுமா?

மணவை முஸ்தபா : அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், தண்டபாணி தேசிகர், தேவநேயப் பாவாணர் இவர்கள் மூன்று பேர்களும் எனக்கு ஆசிரியர்களாக அமைந்தது நான் பெற்ற பெரும் பேறு. மூன்று பேர்களுமே எனக்கு மிக நெருக்கமான மனஉணர்வுள்ளவர்கள்.

இந்த மூன்று பேராசிரியர்களும் வெவ்வேறு கருத்து நிலைப்பாடுகள் கொண்டவர்கள். ஆனால், மொழியியலைப் பொறுத்தவரைக்கும் இந்திய அளவில் தமிழுக்கு தெ.பொ.மீ.யை விட்டால் வேறு ஆளில்லை என்று தண்டபாணி தேசிகருக்கும் வேர் சொல்லை கண்டுபிடிப்பதில் பாவாணரின் மேதமை மீது தெ.பொ.மீக்கும் உள்ளூற மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது.

மூன்று பேர்களுக்கும் செல்லப்பிள்ளை என்பதால் மூவருக்கும் இடையே ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்த நான் முயன்றேன். அதற்கு நல்ல பலன் இருந்தது. தேவநேயப் பாவாணர் ஒரு கருத்து வேற்றுமைக் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியபோது, தெ.பொ.மீ. என்னிடம், பாவாணர் உனக்கு மிகவும் பிடித்தவராயிற்றே, நீ என்ன சொன்னாலும் கேட்பாரே. அவரை போக வேண்டாம்; தொடர்ந்து இங்கேயே இருக்க வேண்டும் என்று வற்புறுத்தணும் என்று கெஞ்சுகின்ற வகையில் கேட்டார்.

இந்த மூன்று பேர்கள் இருந்த சூழல் எனது மொழி வளர்ச்சிக்கு மிகவும் பயன்பட்டது. எப்படி ஒரு வேர்ச்சொல்லை எடுப்பது, அதிலிருந்து புதிய ஒரு சொல்வடிவத்தை எப்படிக்கொண்டு வருவது, எப்படி பழைய தமிழ்ச் சொல்லைப் புதிய வடிவாக்குவது ஆகியவை தொடர்பான பயிற்சி எனக்கு இவர்களிடம் இருந்துதான் கிடைத்தது.

சந்திப்பு: தளவாய் சுந்தரம்
படங்கள்: செந்தில்நாதன்

நன்றி: தீராநதி /யாழ் இணையம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s