Abu Adhil

அன்னை பாத்திமா பெண்கள் அரபி கல்லூரி தோற் றமும், ஒரு பார்வை…!

அன்னை பாத்திமா பெண்கள் அரபி கல்லூரி தோற்றமும், ஒரு பார்வை…!

அ.முகம்மது நூர்தீன்

அமைப்பு குழு உறுப்பினர்

அன்னை பாத்திமா பெண்கள் அரபி கல்லூரி

சார்பு நிர்வாகம்

-தோப்புத்துறை ஜமாத் மன்றம் —தோப்புதுறை முஸ்லிம் சங்கம் துபாய்.

முன்னுரை.

சரித்திர மிக்க தோப்புத்துறை புதிய ஜாமிய மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு என்று சமுதாய நாளிதழ் மணிச்சுடர் பத்திரிகையில் தோப்புத்துறை பற்றி சிறிய வரலாறு கட்டுரையை எழுதியிருந்தேன். இதன் காரணமாக நண்பர்கள் சிலர் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தோப்புத்துறையில் செயல்படும் அன்னை பாத்திமா பெண்கள் அரபி கல்லூரியின் தோற்றம் பற்றி எழுத சொன்னார்கள். காரணம் இந்த பெண்கள் அரபி கல்லூரியின் அமைப்புகுழுவின் ஆரம்ப கால நிறுவன உறுப்பினர் என்ற அடிப்படையில் என்னிடம் கேட்டு இருந்தார்கள்.

துபாயில் வேலைக்காக சென்ற நான் நமதூர் வளர்ச்சியில் பெரிதும் பணியாற்றி வரும் துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தில் அடிப்படை உறுப்பினர் முதல் பல்வேறு சங்க பொறுப்பில் எனது மனத்திற்கு உகந்தவகையில் பணியாற்றி எத்தனையோ புதிய, நவீன திட்டங்களை, செயல்முறைகளை சங்கத்திற்காவும், நமது ஊரின் வளர்ச்சிக்காகவும் வகுத்து கொடுத்து களப்பணியாற்றி வந்தேன். கணிப்பொறி வந்த காலத்தில் இந்த நவீன வசதியை சங்கத்தின் நிர்வாக பணிக்கு உள்புகுத்தினேன்.

நான் கொடுத்த எத்தனையோ திட்டங்களில் நமதூரில் பெண்களுக்கு மார்க்க கல்வி போதிக்க ஒரு கல்வி நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற அடிப்படையில் துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் பொதுக்குழுவில் கோரிக்கை மனு செய்தது தான் எனக்கு திருப்தி அளிக்க கூடிய கோரிக்கையாக இருந்தது. இதுபோன்ற ஊர் வளர்ச்சி திட்டங்கள் தனிநபர்களால் நிச்சயம் செய்ய முடியாது, ஊர் ஜமாத்தினர்கள் மூலம் கூட்டாக செய்தால் தான் இதை சாதிக்க முடியும் என்ற நோக்கம் முதன்மையாக எனக்கு இருந்தது.

நமதூரில் பெண்களுக்கு என்று மார்க்கம் போதிக்கும் அரபி மதரஸா (வயது வந்த பெண்களுக்காக) தொடங்க வேண்டும் அதற்கு முழு முயற்சியை துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பொதுக்குழுவில் வைக்கப்பட்ட மனு, பல மாதங்கள் கடந்து தான்.. ஏன் பல வருடங்கள் போராடி தான் பரிசீலனைக்கு எடுத்து கொண்டார்கள் காரணம் அந்த அளவிற்கு நமதூர் வாசிகள் மார்க்க கல்வி தேவையை பற்றி விளக்கம் பெறாமல் இருந்தது தான்.

ஒவ்வொரு முறையும் துபாய் சங்கத்தின் பொதுக்குழு வந்தால் நான் இரண்டு கோரிக்கை மனு பற்றி தொடர்ந்து கேட்பேன் ஒன்று இந்த பெண்கள் கல்லூரியை சங்கம் மூலம் தொடங்குவது மற்றோன்று சங்க நிதிநிலையை பெருக செய்ய நிரந்தர வருமானம் வழிவகையில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது போன்றவைகளாக இருக்கும். ஆனால் பல்வேறு கடிதம் மற்றும் நடவடிக்கையின் காரணத்தால் என்னுடைய கோரிக்கை மனுவை பரிசீலனை செய்யாமல் அடுத்த முறை பார்ப்போம் என்று மூத்த உறுப்பினர் ஒய்.ஏ.கரிம் மற்றும் அப்போதைய செயலாளர் எம்.எம் சர்புதீன் போன்றவர்களால் சமாதானம் செய்யப்பட்டு வரும்.

கடைசியில் நமதூர்வாசிகள் வசிக்கும் எழிலகம் என்று சொல்லப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சங்க பொதுக்குழு கூட்டத்தில் எனது கோரிக்கை மனு பரிசீலனை எடுத்து கொண்டு விவாத்திக்கப்பட்டது. இதில் கல்லூரி தொடங்குவதினால் ஏற்பாடும் நன்மை, தீமைகள் பற்றி விவாதம் செய்யப்பட்டது. இதில் சகோதரர் ஐ.நவாஸ்தீன் எனது மனுவிற்கு எதிராக கருத்து சொன்னார் என்ற அடிப்படையில் என்னுடைய அப்போதைய பிடிவாதத்தின் வேகத்தால் இந்த சகோதரிடம் ஏறக்குறைய 5 வருடங்களுக்கு மேல் பேசாமல் இருந்தேன். ஆனால் அவர் அந்த கூட்டத்தில் சொன்ன எதிர்கருத்து என்பது நடைமுறையில் 100% என்பது பிறகு தான் புரிந்தது. அரபி கல்லூரி தொடங்க வேண்டும் என்று எனக்கு வேகம் இருந்தது தவிர விவேகமான கருத்துகளை அன்று செவிசாய்க்கும் நிலையில் நான் இல்லை. இந்த கூட்டத்தில் "இந்த கல்லூரி தொடங்கலாம் என்றும் தற்போது எனது சொந்தகாரர் நாகப்பட்டினத்தில் சிறியதாக தொடங்கி நல்ல முறையில் பெண்களுக்கு பயன்மிக்கதாக உள்ளது" என்பதை உறுதிப்பட கூறினார் ஏ.எம்.ஒய் சஹாபுதீன் , அவரை தொடர்ந்து முகைதீனும் எனது மாமா அவர்கள் தான் அந்த மதரஸாவை நடத்துகிறார்கள் இது நிச்சயம் முஸ்லிம் ஊர் என்றால் தேவை தான், நானும் முடிந்தவரை தகவல்களை பெற்று தருகிறேன் என்றார். அத்துடன் இந்த கல்லூரி தொடங்குவது நமது சங்கத்தின் சார்பாக இருக்க வேண்டும் என்ற கருத்தை சி.பஸிர் மற்றும் ஜெ.பி.ஜமால் கூறினார்கள். பொதுக்குழு இந்த பெண்கள் அரபி கல்லூரி ஏற்படுத்த அமைப்பு குழு நியமிக்க தீர்மானம் ஏற்றப்பட்டது அத்துடன் அந்த பொதுக்குழு அமைப்பு குழுவில் என்னை நியமித்து எனக்கு பிறகு இதில் ஆர்வத்துடன் செயல்படுவதாக கூறிய சகோதரர்கள் சி.பஸிர், ஏ.எம்.ஒய் சஹாபுதீன், ஜெபி. ஜமால், ஏ.முகைதீன் ஆகியோர்களை ஐவர் கொண்ட அரபி கல்லூரி அமைப்பு குழுவை நியமித்தது.

பல்வேறு நிகழ்வுகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இந்த கல்லூரி எப்படியும் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கல்லூரி பெயர் அன்னை பாத்திமா ரலி அவர்களை நினைவு கூற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது அதை துபாய் குவைத் மஸ்ஜித் தலைமை இமாம் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன் அதற்கு இது சரியான பெயர் அதையே செய்யுங்கள் என்றார். அடுத்த நடத்த அமைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்து நாம் தொடங்கும் கல்லூரி பெயர் அன்னை பாத்திமா என்று இருக்க வேண்டும் ஆலோசனையை கொடுத்தேன். அத்துடன் இமாம் அவர்களிடம் ஆலோசனையும் பெறப்பட்ட விபரமும் தெரித்து குழுவில் முடிவு செய்தோம் மேலும், கல்லூரி அமைப்பு மற்றும் நிர்வாக திட்டங்களை நான் வடிவமைத்து சங்கத்தின் பொதுக்குழுவில் வைத்து முறையாக ஒப்புதல் பெறப்பட்டது. அன்றைய காலத்தில் எண்ணமும், செயலும் எப்படியும் அரபி கல்லூரி தொடங்க வேண்டும். அத்துடன் இதற்கு இந்த அமைப்பு குழுவே ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து மற்ற ஊர் மக்களுக்கு எடுத்துகாட்டாக இருக்க வேண்டும் என்று பல்வேறு செயல் திட்டங்கள் அமைப்பு குழுவின் மூலம் செய்யப்பட்டது.

இதற்கு இடையே விடுமுறையில் ஊர் சென்றேன். அப்போதைய ஜமாத் தலைவர் எஸ்.என்.எம்.ஜெய்னுதீன் அவர்களிடம் சங்கத்தின் திட்டங்களை விளக்கி சொன்னேன். அவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் நமது ஊருக்கு அவசியமான ஒன்று தான் எனது எண்ணங்களுக்கு ஆதரவாக பேசினார்கள் அத்துடன் வருகின்ற செயற்குழுவிற்கு உங்களை சிறப்பு அழைப்பாளராக அழைக்கிறேன் வந்து உங்களின் கருத்துகளை கூறுங்கள் என்றார். அதை போல் நடந்த செயற்குழுவிற்கு சென்று நமது சங்கத்தின் அரபி கல்லூரி திட்டம் மற்றும் அமைப்பு குழு பற்றி விளக்கி சொன்னேன். தலைவர் அவர்கள் ஜமாத் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார், நான் அதற்கு படேசா தர்ஹா இடத்தில்(முஸ்லிம் பள்ளிகூடத்திற்கு அருகில்) இடம் வேண்டும் என்றேன் அத்துடன் முறையாக நான் துபாய் சென்றவுடன் ஜமாத் நிர்வாகத்திற்கு கோரிக்கை கடிதம் சங்கம் மற்றும் அமைப்பு குழு சார்பாக அனுப்புகிறோம் என்றேன் ஆனால் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிர்வாகிகளும் சொன்னார்கள் இது நல்ல திட்டம் இந்த செயற்குழுவில் அரபி கல்லூரிக்கு நிலம் ஒதுக்குவது என்று நான் வாய்மொழியில் கேட்ட கோரிக்கைக்கு தீர்மானமாகவே போட்டார்கள். ஜமாத் தலைவர் எஸ்.என்.எம்.ஜெய்னுதீன் அவர்களின் நிர்வாகமே அரபி கல்லூரிக்கு இடம் ஒதுக்கி தந்தது. அப்போது தாயகம் சென்ற சங்க தலைவர் ஒய்ஏ கரிம் மற்றும் செயலாளர் (மர்ஹும்) ஜெபி.அப்துல் ஹமீது இருவர்களும் ஜமாத் நமக்கு ஒதுக்கிய இடத்தில் அன்னை பாத்திமா பெண்கள் அரபி கல்லூரி வாளாகம் என்று பெயர் பலகை வைத்தார்கள். சங்க நிர்வாகத்தின் செயலாளராக பல்வேறு ஆண்டுகளில் பணியாற்றிய எம்.எம் சர்புதீன், ஜி.நிஜாம், எஸ்.சேக்நெய்னா, எஸ்.கல்லூர்ரஹ்மான், சி.ஜபருல்லாஹ், இஹா.இஸ்மாயில் போன்றவர்கள் அதிக அளவில் ஈடுபாடுகளுடன் அமைப்பு குழுவிற்கு உதவி செய்து வந்துள்ளார்கள்.

வல்ல அல்லாஹ்வுக்கே

இந்த கல்லூரிக்கு என்று முதல் முதலாக நன்கொடை என்ற வகையில் ஒரு பெரிய தொகை அமீரக திர்ஹம் 5000/- த்தை வழங்கிய பெருமை தமிழகம் மற்றும் தோப்புத்துறையில் பல பொது நல திட்டப்பணிகளை செய்துவரும் அருமை சகோதரர் எம். சுல்தானுல் ஆரிப் (ஆரிபா குழுமம்) அவர்களிடம் நானும், சி.பஸிர், ஒய்.ஏ.கரிம், சஹாபுதீன் போன்றவர்கள் நேரில் சென்று கேட்ட போது ரொக்கமாக கொடுத்து எங்களை ஊக்கப்படுத்தினார்கள். இந்த தொகை தான் அரபி கல்லூரிக்கு என்று முதல் நன்கொடை வரவு. இந்த தொகை கொண்டு தான் முதலில் என் பெயர் மற்றும் சகோதரர் சஹாபுதீன் பெயரில் கூட்டு வங்கி கணக்கு அமைப்பு குழுவிற்காக வேதாரண்யம் கனரா வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. அத்துடன் நான் ஊர் சென்ற போது கல்லூரி பெயரில் வங்கி கணக்கு தொடங்க முடியாத நிலை என்றும் கல்லூரி பெயரில் வந்த பார்வை வரைவு மற்றும் காசோலையை வங்கியில் போட முடியவில்லை என்று அப்போதைய தாயக பிரதிநிதி சாவன்னா அலீம் அவர்கள் சொன்னார்கள். அவரை அழைத்து கொண்டு போய் ஐஒபி வங்கி மேலாளர் அவர்களை சந்தித்து பேசினேன். அதற்கு கல்லூரி என்ற பெயரில் தொடங்குவதற்கு என்றால் அங்கீகாரம் பற்றிய அரசு ஆணை வேண்டும் என்றார். அதற்கு நான் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் தங்களின் மார்க்க கல்வியை போதிக்கும் நிறுவனங்களுக்கு மதரஸா என்று அழைக்கிறார்கள். பெரியவர்கள் இஸ்லாமிய கல்வி பெறும் நிறுவனங்களை வழக்கத்தில் அரபி கல்லூரி என்று அழைப்பது நடைமுறை உள்ளது. நாங்கள் எந்த வித அரசு அங்கீகாரம் மற்றும் நிதி பெறுவதில்லை அந்த அடிப்படையில் தான் இப்படி பெண்கள் அரபி கல்லூரி என்று அழைக்கிறோம் என்று விளக்கி கூறினேன் அத்துடன் பெண்களுக்கு கல்வி தேவையை கருத்தில் கொண்டு இஸ்லாமிய கல்வியுடன், தொழில் கல்வியும் போதிக்கும் திட்டம் பற்றி சொன்னவுடன் அந்த மேலாளார் உங்களின் பெண்கள் கல்வி பற்றிய ஆர்வம் மிகவும் வரவேற்கதக்கது சரி என்னுடைய பரிந்துரையின்படி வங்கி கணக்கு தொடங்கி தருகிறேன். அத்துடன் இந்த கல்லூரிக்கு எனது நன்கொடையாக 100 ரூபாய் தருகிறேன் அதை வைத்து இந்த வங்கி கணக்கை தொடங்கி தருகிறேன் என்று சொல்லி அன்னை பாத்திமா பெண்கள் அரபி கல்லூரி என்ற பெயரில் முதலில் வங்கி கணக்கு தொடங்கி கொடுத்தார்கள்.

காலங்கள் கடந்து கொண்டு இருந்தது ஆனால் வசூல் என்ற வகையில் ஒன்றும் பெரிய அளவில் கல்லூரி நிதி வரவில்லை. உறுப்பினர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகை வசூல் செய்வது என்று தீர்மானம் போட்டும் சரியான ஒத்துழைப்பு இல்லை.

இந்த சமயத்தில் சி.பஸிர் அகமது துபை குவைத் மஸ்ஜித் நிறுவனர் மற்றும் தொழிலதிபர் அகமது ராசீத் லூத்தாவை அவர் பணியாற்றும் அலுவலகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. சி.பஸிர் அகமது அவர்கள் லூத்தா அவர்களுக்கு அலுவலகத்தில் பல உதவிகளை செய்த காரணத்தால் பிறகு அதுவே நட்பாக தொடர்ந்து. உலகம் முழுவதும் பல இறைஇல்லங்களை கட்டிக் கொடுத்த இந்த பிரமுகரிடம் நமது சங்கத்தின் கனவான அரபி கல்லூரி பற்றி கூறியிருக்கிறார். அவரும் ஒரு நாள் எனது அலுவலகத்திற்கு வாருங்கள என்று முகவரியை கொடுத்து சென்று விட்டார். சி.பஸிர் அகமது அவர்கள் என்னை அழைத்து கொண்டு துபாய் டேரா அல்குரையர் தொழில் வளாகத்தில் இருக்கும் லூத்தா அலுவகத்திற்கு அழைத்து போனார். சி.பஸிர் அகமது என்னிடம் கேட்டு கொண்டதற்கு ஏற்ப போவதற்கு முன் நமதூர் பற்றிய குறிப்புகள் அடக்கிய தொகுப்பு கோப்பு ஒன்று தயார் செய்து கொண்டு போய் கொடுத்தோம். நீண்ட நேரம் இந்த கல்லூரியின் அவசியத்தை எடுத்து கூறிய பிறகு லூத்தா அவர்கள் நான் இதுவரை மஸ்ஜித்களை கட்டுவதற்கு தான் உதவி செய்துள்ளேன். நீங்கள் எடுத்த சொன்ன பிறகு இதை பரிசீலனைக்கு எடுத்து செய்யலாம் என்றார் அத்துடன் ஊரில் தான் இத்தனை பள்ளிவாசல் இருக்கிறதே? ஏன் ஒரு பள்ளிவாசலில் ஒரு சிறிய அளவில் கட்டிடமாக செய்து இந்த பெண்கள் கல்லூரியை நடத்தலாம் என்று வினவினார். அதற்கு நாங்கள் நமதூர் பெண்கள் எப்படி இருப்பார்கள், எந்த வகையில் வெளி பழக்கம் இருக்கும் என்பதை சொல்லி, இந்த கல்லூரி தனியான இடத்தில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பது பற்றி அவருக்கு எடுத்து கூறினோம். கடைசியில் சரி நான் இந்தியாவிற்கு எதுவும் செய்வது என்றால் ஈடிஏ அஸ்கான் குருப் ஹபீபுல்லாஹ்விடம் ஆலோசனை பெற்று தான் செய்வேன், உங்களின் ஊர் திட்ட குறிப்புகள் அடங்கிய கோப்பை அவருக்கு அனுப்பி கருத்து கேட்டு உங்களுக்கு ஒரு முடிவை தருகிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டார். அந்த வாரம் வெள்ளிக்கிழமை துபாய் ஈமான் சங்கத்தின் பொதுச்செயலாளர் முத்துபேட்டை அப்துல் ரஹ்மான் (தற்போதைய வேலூர் நாடளுமன்ற உறுப்பினர்) தொலைபேசியில் அழைத்து தோப்புத்துறை பெண்கள் அரபி கல்லூரி சம்பந்தமாக லூத்தா அவர்கள் ஆலோசனை நடத்த சொல்லி இருக்கிறார்கள். எனவே தமிழ் உணவகத்திற்கு வாருங்கள் என்றார். அமைப்பு குழு சார்பாக அவரை சந்தித்து விளக்கம் கூறினோம். அவரும் அவருடைய சகோதரரை நமது ஊருக்கு அனுப்பி ஜமாத் நிர்வாகம் இடம் உண்மையில் இந்த கல்லூரிக்காக ஓதுக்கி உள்ளதா? என்ற விபரம் மற்றும் ஊரின் நிலையை சேகரித்து வைத்துள்ள விபரத்தை சொன்னார். அத்துடன் ஈமான் சங்கத்தின் சார்பாக இந்த கல்லூரி அமைய வாழ்த்தியதுடன், கல்விதந்தை ஹபிபுல்லாஹ் காக்கா மூலம் லூத்தா அவர்களுக்கு பரிந்துரை கடிதம் கொடுக்கிறேன் என்று சொன்னார்கள்.

பிறகு ஈடிஏ அஸ்கான் இணை நிர்வாக இயக்குநர் ஹபிபுல்லாஹ் காக்கா அவர்களின் நேரடி உதவியாளர் தொலைபேசியில் அழைத்த பிறகு அமைப்பு குழு சார்பாக காக்கா அவர்களை சந்தித்து நமதூர் பற்றி முழுவிபரத்தையும், நமதூருக்கு ஏன் பெண்கள் கல்லூரி தேவை என்பதை எடுத்து சொல்லி வந்தோம். ஈமான் சங்கம் மற்றும் ஹுபிபுல்லாஹ்காக்கா அவர்களின் பரிந்துரையை ஏற்று லூத்தா அவர்கள் மகிழ்ச்சியுடன் கல்லூரிக்கு நிதி தருவதாக உறுதி அளித்தார்கள். அதை தொடர்ந்து காக்கா மூலம் தான் கல்லூரிக்கு நிதி ஒவ்வொரு பகுதி தொகை நிதிகள் வரவு செலவு கணக்கு வகையில் வந்தது.

கல்லூரி கட்டிடப்பணிகளை சாவன்னா அலீம் தொடக்கமாக செய்தார்கள், பிறகு தான் ஆர்ஏ சாகுல் ஹமீது நேரடியாக இருந்து செய்தார்கள். கல்லூரி கட்டுமானத்திற்கு தேவையான களப்பணிகளை சாவன்னா அலீம் மிகவும் நிர்த்தியாக செய்தார்கள், மின்சார இணைப்பு இல்லாத போது இவரின் முயற்சியால் தான் இணைப்பு தர்ஹாவிலிருந்து பெற்று தந்தார் பிறகு தான் கல்லூரிக்கு நேரடி இணைப்பு வழங்கப்பட்டது. இவர்கள் இருவர்களின் உழைப்பு மிகவும் பாராட்டப்பட வேண்டியது. இன்று கம்பிரமாக காட்சி அளிக்கும் அரபி கல்லூரியின் கட்டிடப்பணிக்கு இவர்கள் உழைப்பு நினைவில் வைத்து கொள்ள வேண்டிய நிகழ்வு. இந்த கல்லூரி கட்டிட பணிகளில் சங்கத்தின் தாயக பிரதிநிதிகள் ஜனாப். நஜீப், ஜனாப். நஜிபுதீன் போன்றவர்கள் முழு உதவியும் ஒத்துழைப்பும் தந்துள்ளார்கள்.

லூத்தா அவர்களின் உதவியால் கட்டிடப்பணிகள் தொடங்கியது நான் விடுமுறையில் போகும் போது தினமும் கட்டிடப்பணிகளை நேரில் சென்று பார்த்து வருவேன். கல்லூரி முக அமைப்பு முதல் உள்கட்டமைப்பு வரை ஆய்வு செய்வேன். இப்படி பார்த்த சமயத்தில் தான் கழிப்பறை மற்றும் குளியலறையை அமைக்காமல் விட்டு இருந்ததை அமைப்பு டிரஸ்டி இஸ்ட் கமாலுத்தீன் பார்வைக்கு எடுத்து செய்து சரி செய்தேன். அத்துடன் நமதூரில் கட்டப்படும் கல்லூரி பற்றி தமிழக காவல்துறையின் உளவுதுறைக்கு வெளிநாட்டிலிருந்து தவறாக பணம் வருகிறது என்ற தகவல் கிடைத்து திருச்சி உளவுதுறை டி.எஸ்.பி என்னையும், ஜனாப் நஜீப் அவர்களையும் விசாரனைக்கு அழைத்து சென்றார்கள். அந்த டி.எஸ்.பியிடம் சங்க நிர்வாகத்தினர் பெயர்கள், அமைப்பு குழு உறுப்பினர்கள் பெயர், லூத்தா என்ற அரபி நிதி வழங்கும் செய்தி என்று நிறைய தகவல் வைத்து கொண்டு கேள்வி கேட்டார். நான் விசாரனை செய்த அதிகாரியிடம் நமதூர் வளர்ச்சிக்காக அதுவும் பெண்கள் இஸ்லாமிய கல்விக்காக தான் இந்த கல்வி நிறுவனம் தொடங்குகிறோம். எந்த ஒரு வெளிநாட்டு நிதியும் முறையாக வங்கியின் மூலம் பெறப்பட்டுதான் வரவு செலவினங்கள் செய்யப்படுகிறது என்று சொன்னதை கண்டு சரி எங்களுக்கு தவறான தகவல் வந்துள்ளதாக இதை நான் குறிப்பு எழுதி முடித்துவிடுகிறேன் என்று சொன்ன உளவுதுறை டிஎஸ்பி மேலும் நன்றாக பெண்கள் கல்விக்காக செய்யுங்கள் என்று பாராட்டி வாழ்த்து கூறி சென்றார்.

கல்லூரிக்காக கொடுக்கப்பட்ட இடம் முழுவதும் கட்டிடம் கட்டுவது தொடங்கப்பட்டதால், பின்புறம் செல்ல வழி இல்லாத நிலை இருந்தது. இந்த பிரச்சனையை அப்போதைய தலைவர் என்.உதுமானுல் ஆரிப் அவர்களிடம் கூறி மேலும் 10 அடி அரபி கல்லூரிக்காக நீங்கள் ஒதுக்கி தர வேண்டும் என்று அவர்களின் வீட்டிற்கு சென்று கோரிக்கை வைத்தேன். உடனே அவரும் நான் நிச்சயம் ஜமாத் நிர்வாகத்துடன் கலந்து செய்கிறேன் என்றார். ஆனால் காலம் கடந்து தவிர இந்த 10 அடி ஒதுக்கப்படவில்லை. கடைசியில் காரணம் கேட்டால் நான் ஏதோ ஜமாத் தலைவரை விமர்சனம் செய்ததாக அவருக்கு நெருங்கிய உறவினர் பொய் பிரச்சாரம் செய்துள்ளார். உண்மை என்ன என்று முழு விளக்கம் மற்றும் நேரில் உறுதி அளித்த அரபி கல்லூரிக்கு 10 அடி தேவை பற்றி கடிதம் ஜமாத் தலைவருக்கு எழுதினேன். அதன்பின்பு ஜமாத் தலைவர் உண்மை நிலையை அறிந்து 10 அடி ஒதுக்கி ஜமாத்தில் தீர்மானம் போட்டார்கள். ஆக கல்லூரிக்கு என்று முதலில் இடம் தந்த ஜமாத் தலைவர் ஜெய்னுதீன் மற்றும் மேலும் தேவையை கருதில் கொண்டு 10 அடி ஒதுக்கி தந்த உதவிய ஜமாத் தலைவர் உதுமானுல் ஆரிப் இருவர்களையும் நினைவில் நிறுத்த வேண்டியவர்கள். இவர்களின் உதவி இல்லை என்றால் இன்று அரபி கல்லூரியை இந்த ஹத்திப் தெருவில் பார்க்க முடியாது. இவர்களின் ஆரம்ப கால உதவியை என்றும் மறக்கக் கூடாது.

பெண்கள் அரபி கல்லூரி அமைப்பு குழுவின் பரிந்துரையின்படி மேலும் அமைப்பு குழு உறுப்பினர்களாக செயல்பட ஹாஜி.ஏ.அப்துல் அஜிஸ், (மர்ஹும்)ஜெ.சுல்தான் ஆகியோர்கள் சேர்க்கப்பட்டார்கள்.

நமது கல்லூரி தொடங்குவது பற்றி விழிப்புணர்வு மற்றும் நன்கொடை பெரும் நோக்கத்தில் சிங்கப்பூர் சங்கத்தின் உதவியுடன் சிங்கப்பூர் மலேசிய நாடுகளில் உள்ள நமதூர்வாசிகளை நேரில் சென்று கல்லூரி தேவையை எடுத்து சொல்லுவதுடன் அவர்களிடம் நிதியாக நன்கொடை பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டு என்னையும் ஜனாப்.நஜிப், ஜனாப். ஜெ.சுல்தான், அவர்களையும் செல்ல பொதுக்குழுவில் தீர்மானம் செய்யப்பட்டது. இந்த பயணத்தின் செலவினங்களை பகுதியை சங்கம் ஏற்று கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நான் மட்டும் (ஜனாப் நஜீப், ஜனாப். ஜெ.சுல்தான் அவர்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை) சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு பெண்கள் அரபி கல்லூரி தொடங்குவது சம்பந்தமாக சுற்று பயணம் செய்தேன். சிங்கப்பூரில் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் சார்பாக மஸ்ஜித் அப்துல் கபூர் பள்ளியில் கல்லூரி ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் துபாய் சங்கத்தின் அரபி கல்லூரி திட்டங்களை எடுத்து சொன்னதுடன், நான் சொந்தமாக தயார் செய்யப்பட்ட அரபி கல்லூரியின் திட்டவரைவு புத்தகத்தையும் கோரிக்கை கடிதத்தையும் சிங்கப்பூர் சங்கத்திடம் அளித்தேன், அவர்களும் தீர்மானம் போட்டு நமது துபாய் சங்கத்தின் அரபி கல்லூரிக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதுடன் நமதூர்வாசிகளிடம் என்னை நேரில் அழைத்து செல்லவும் தீர்மானம் போட்டார்கள். அப்போதைய சிங்கப்பூர் செயலார் அப்துல் மஜீத், சங்க பிரதிநிதிகள் ஹாஜி யுசுப், ஹாஜி குலாம் முஹம்மது போன்றவர்கள் சிங்கப்பூர் நமதூர் வாசிகளிடம் அழைத்து சென்றார்கள் நானும் நமது திட்டத்தை விளக்கி கூறினேன். இதில் சிங்கையில் இருந்த நமதூர்வாசி ஒருவர் இந்த அரபி கல்லூரி திட்டம் தேவையில்லாத ஒன்று வேண்டும் என்றால் நீங்கள் கட்டும் இந்த அரபி கல்லூரி நாளை திருமண மண்டபமாக தான் செயல்படுபோகிறது என்றார். நான் அவர்களுக்கு நம் சங்கத்தின் செயல் திட்டங்களை எடுத்து சொல்லி துஆ செய்யுங்கள் சொல்லி வந்தேன். எனது சுற்று பயணத்தின் அடுத்த கட்டமாக மலேசியாவின் ஜோஹர் மற்றம் பொந்தியான் பகுதிக்கு எனது சொந்த செலவில் வாடகைக்கு வாகனம் எடுத்து சென்று நமதூர்வாசிகளையும், சிங்கை சங்கத்தின் மலேசியபிரதிநிதி ஜலாலுதீன் அவர்களையும் சந்தித்து வந்தேன் என்னுடன் சிங்கப்பூர் சங்க செயலாளர் அப்துல் மஜித் மற்றும் ஹாஜி யுசுப் துணைக்கு வந்து இருந்தார்கள். திரும்ப சிங்கப்பூர் வந்து மலேசிய தலைநகரம் கோலாலம்பூர் சென்று சிங்கை சங்கத்தின் மலேசிய பிரதிநிதி ஜனாப் அப்துல் லத்தீப், ஜனாப் ஜெஹபர் அலியை சந்தித்து அவர்கள் நமதூர் வாசிகளிடம் அழைத்து சென்றார்கள். சிங்கப்பூர் சங்கம் நிர்வாகம் மலேசியாவின் சங்க பிரதிநிதிகளுக்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் முறையாக சிங்கப்பூர் சங்கம் நிர்வாக மூலம் கடிதம் தந்தார்கள்.

சங்கத்தின் தீர்மானத்தின்படி சிங்கப்பூர், மலேசியா சுற்றுபயண செலவுகளில் பாதி தொகையை சங்கத்தில் பெற்று கொள்ளலாம் என்று தீர்மானம் இருந்தது. முதலில் பாதி தொகை தான் நான் கொடுத்தேன். பிறகு முழு செலவும் என் சொந்த கணக்காக இருக்க வேண்டும் என்று எனது மனது கூறவே, சங்கத்தில் தொகையை திருப்பி கொடுத்து அப்போதைய செயலாளர் சி.ஜபருல்லாஹ்அவர்களிடம் அதற்கான ரசீதையும் பெற்று கொண்டேன்.

துபாய் சங்கத்தின் அமைப்பு குழுவின் முயற்சியால் தொடங்கப்பட்டு இந்த பெண்கள் அரபி கல்லூரி ஊரை நிர்வாகிக்கும் ஜமாத் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, ஜமாத் நிர்வாகத்தின் நேரடி நிர்வாகத்தில் செயல்படுகிறது. இருந்தும் துபாய் தோப்புத்துறை சங்கம் தொடர்ந்து இந்த கல்லூரிக்கு தேவையான நிதி ஆதரங்களை தொடர்ந்து பெற்று தரும் கடமையில் உள்ளது. துபாய் சங்கம் நிர்வாகம் வருடத்தொரும் மாற்றம் அடைந்தாலும் பெண்கள் கல்லூரி விசயத்தில் அனைத்து செயல் நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

சங்கத்தால் கடந்த காலங்களில் வருடத்தோரும் நடத்திய தியாகதிருநாள் விழாவை மாற்றி தற்போது மூன்று வருடங்களாக அரபி கல்லூரி பட்டமளிப்பு விழா இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை அழைத்து நடத்தி வருகிறது. அத்துடன் பொதுக்கல்வியை கருத்தில் கொண்டு 10வது மற்றும் +2 பொது தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த நமதூaர் இஸ்லாமிய மாணவ,மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சான்றிதழும், ரொக்க பரிசும் அளித்து கவுரப்படுத்தி வருகிறது.

இந்த கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா 24/8/2008 நடந்தது. தோப்புத்துறை அன்னை பாத்திமா பெண்கள் அரபி கல்லூரி தொடர்ந்து தனது சேவை செய்து வல்ல அல்லாஹ்வின் உதவியால் பல மார்க்க அறிவு பெற்ற பெண்களை ஆலிமாவாக தர துஆ செய்வோம்.

முடிவுரை

மேற்கண்ட அன்னை பாத்திமா பெண்கள் அரபி கல்லூரி நமதூரில் தொடங்க யார் வித்திட்டது மேலும் இந்த பணிகளில் பங்கு பெற்ற அரபி கல்லூரி ஆரம்ப கால அமைப்பு குழு நிறுவன உறுப்பினர்கள் யார் யார்? இந்த கல்லூரி அமைய இடம் வசதி ஒதுக்கி கொடுத்தது யார்? அத்துடன் இந்த கல்லூரி தொடங்க யார் முதலில் நிதி வழங்கியது? நிதி பெற யார் முழு முயற்சி செய்து பெற்றது? இதற்கு உதவியவர்கள் யார்? என்று முழு உண்மை நிகழ்வு சம்பவங்களும் இதன் மூலம் தெரிய வரும். மேற்கண்ட கல்லூரி தொடக்க நிகழ்வுகள் அனைத்தும் என்னுடைய சுயகுறிப்புகளிலிருந்து எடுத்து எழுதப்பட்டது. இதில் எந்த வித கற்பனை அல்லது இப்படி நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் எழுதிய அல்ல.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s