Abu Adhil

லோக் ஆயுக்தாவை கண்டு நடுங்கும் மோடி !

லோக் ஆயுக்தாவை கண்டு நடுங்கும் மோடி !

தன்னுடைய செயல்பாடுகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற லோக் ஆயுக்தா அமைப்பின் நீதிபதியை வேறு யார் நியமித்தாலும் பிரச்சினை என்பதால், சட்ட மசோதா ஒன்றை மோடி உருவாக்கினார்.குஜராத் மாநில அரசின் செயல்பாடுகளில் ஊழல், முறைகேடுகளை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தாவை நியமிக்கும் உரிமை முதலமைச்சரான தன்னிடமே இருக்க வேண்டும் என்பதாக சட்டத்தை மாற்றும் மசோதா ஒன்றை நரேந்திர மோடியின் அரசாங்கம் அக்டோபர் 1-ம் தேதி நிறைவேற்றியிருக்கிறது.

கம்லா பேனிவால் குஜராத் ஆளுநர் கம்லா பேனிவால்

குஜராத்தின் லோக் ஆயுக்தா சட்டம் 1987-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அப்போதைய முதல்வர் கேசுபாய் பட்டேலால் கடந்த 1998-ம் ஆண்டு குஜராத்தின் லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சோனி 2003-ம் ஆண்டு பதவியிலிருந்து விலகிக் கொண்டார். அதன் பிறகு வேறு எவரும் லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்படவில்லை. அதாவது நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த 2003-ம் ஆண்டிலிருந்து இன்று வரை அம்மாநிலத்தில் ‘ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்யும்’ லோக் ஆயுக்தா நியமிக்கப்படவில்லை.
லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளின் மேல் நம்பிக்கை வைக்குமளவு அவை செயல்படுவதில்லை. மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்துகளையும் இயற்கை வளங்களையும் வரையறையின்றி சூறையாட வகை செய்யும் பொருளாதாரக் கொள்கைகள் என்கிற அடிக்கொள்ளி எரியும் வரை ஊழல் எனும் நுனிக் கொள்ளியும் எரிந்து கொண்டு தான் இருக்கும். என்றாலும், ஊழல் எதிர்ப்புப் போராளிகளும், நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பிரிவினரும் இது போன்ற சட்டவாத நடவடிக்கைகளின் மூலமே ஊழலை ஒழித்துக் கட்டி விடலாம் என்று நம்புகிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி எல்லா மாநிலங்களும் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றியிருக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை. எனவே, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா நியமிக்கப்படவில்லை. கருநாடகா, குஜராத் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறையில் உள்ளது.
ஜன்லோக்பால், லோக் ஆயுக்தா போன்ற ஊழல் எதிர்ப்பு ஆயுதங்களை நம்பும் அதே நடுத்தர வர்க்கத்தினரின் உள்ளங்கவர் கள்வனான மோடியின் ஆட்சிக்காலத்தில் 2003-ம் ஆண்டிலிருந்து இதுவரை லோக் ஆயுக்தா செயல்படாமல் முடக்கப்பட்டதற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? தனது செயல்பாடுகளை தட்டிக் கேட்க யாரும் இருக்கக் கூடாது என்று மோடி நினைப்பதாக இருக்கலாம். அல்லது மாநிலத்துக்குள் வந்து குவியும் அன்னிய முதலீடுகளை வரவேற்கவே நேரம் இல்லாத அவருக்கு லோக் ஆயுக்தா நியமனத்துக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாமல் போயிருக்கலாம்.
நீதிபதி ஆர் ஏ மேத்தா நீதிபதி ஆர் ஏ மேத்தா

இந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாநில ஆளுநர் டாக்டர் கம்லா பேனிவால் குஜராத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர் ஏ மேத்தாவை மாநிலத்தின் லோக் ஆயுக்தாவாக நியமித்தார். ஆனால், நரேந்திர மோடி அந்த நியமனத்துக்கு எதிராக வெகுண்டெழுந்து நீதிமன்றத்தை நாடினார். லோக் ஆயுக்தா எல்லாம் தேவையில்லை என்றாலும், அப்படி நியமித்தால் தான் சொல்லும் நபரே லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்பட வேண்டும் என்பது மோடியின் வாதம். அதாவது பக்கத்து ஊர் பெண்ணின் கையைப் பிடித்திழுத்த கைப்புள்ளையிடமே அவ்வழக்கின் பஞ்சாயத்தை யார் செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமையையும் வழங்குவதைப் போல என்று புரிந்து கொள்ளுங்கள். நேர்மையின் சத்தியாவேசத்தால் மூக்கு புடைக்க முதலில் அவர் சென்ற இடம் குஜராத் உயர் நீதிமன்றம். அங்கே அவரது மூக்கு உடைக்கப்படவே, உச்ச நீதிமன்றத்தை நாடினார். அங்கும் மூக்கு பஞ்சராக்கப்படவே சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனாக மறுமுறையும் அப்பீலுக்குச் சென்று மூன்றாவது முறையாகவும் மூக்கை உடைத்துக் கொண்டு திரும்பினார்.
பாவம், நேர்மையாளனாக நிலைநிறுத்திக் கொள்ள எத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது பாருங்கள்?
ஹரேன் பாண்டிய மர்மமாக கொல்லப்பட்ட மோடியின் உட்கட்சி எதிரி ஹரேன் பாண்டியா.

ஒருவரை மோடிக்குப் பிடிக்கவில்லை என்றால் என்னவாகும் என்பது குஜராத்தில் அனைவருக்குமே தெரியும். தெரியாதவர்கள் ஹரேன் பாண்டியா வழக்கைத் தேடிப் படித்துக் கொள்ளவும். எனவே, நமக்கு ஏன் வம்பு என்று நினைத்த நீதிபதி மேத்தா, ஆளை விட்டால் போதும் என்று ஓடியே விட்டார். போகும் முன், “லோக் ஆயுக்தாவின் மானம் மரியாதை போதுமான அளவிற்கு நாசமாகி விட்டதால், இந்தப் பதவியில் நீடிக்க விரும்பவில்லை” என்று 23 காரணங்களை பட்டியலிட்டிருக்கிறார்.
நீதி மன்றங்கள் தனது விருப்பப்படி தீர்ப்பு அளிக்காத நிலையில், தன்னுடைய செயல்பாடுகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற லோக் ஆயுக்தா அமைப்பின் நீதிபதியை வேறு யார் நியமித்தாலும் பிரச்சினை என்பதால், தானே அந்த அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தோடு சட்ட மசோதா ஒன்றை மோடி உருவாக்கினார். லோக் ஆயுக்தாவை நியமிப்பதில் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மேலாக மாநில முதலமைச்சருக்கு முதன்மை அதிகாரத்தை அளிக்க இந்த மசோதா வழி செய்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி குஜராத் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார், மோடி. மசோதாவைப் படித்துப் பார்த்த ஆளுநர், அது நீதித்துறை நடவடிக்கைகளை கேலி செய்வதாகவும், பொது நலத்தின் மேல் கடுமையான தாக்குதல் என்றும் கருத்து தெரிவித்தார். செப்டம்பர் மாதம் மசோதாவைத் திருப்பி அனுப்பினார்.
ஆளுநரின் நிராகரிப்பை முறியடிக்க, அதே மசோதாவை நேற்று (அக்டோபர் 1-ம் தேதி) எந்த மாற்றமும் இன்றி அப்படியே நிறைவேற்றி மீண்டும் ஆளுநரிடம் அனுப்பி வைத்துள்ளார் மோடி.
இதுதான் கறை படியாத கரங்களுக்கு சொந்தமான மோடி நடத்தும் ராம ராஜ்யத்தின் யோக்கியதை.

THANKS TO ; VINAVU

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s